கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

புதன், ஆகஸ்ட் 31, 2011

வாழை பூக்கட்டும்!





அர்த்தம் புரியாத நாட்களில்
நெருகிப் பழகினோம்
ஒரு புரிதல் தொடங்கியபோது - நான்
ஒரு ஒற்றைச் செம்பருத்தியாய்p
மதிலுக்குள் ஒளிக்கப்பட்டேன்!
வாசம் மிகுந்தாலும் எனக்குப் பிடிக்காத
ஜாதி மல்லிகை பதியம் போட்டனர்!
செந்தூரப் பூக்களின் வாசமாக - உனது
நினைவலைகள் எனது இதயக்கமலத்து
தடாகத்தில் வந்து செல்கின்றன!- நமது
காதல் ரோஜா இதழினும் மென்மையானது!
எனினும் முட்கள் உடனிருப்பதால்
உங்களின் கரங்களுக்கு கவனம் தேவை!
தேனருந்தும் கருவண்டின்
கள்ளத்தனம் வேண்டாம்!
கார்காலம் வருமுன்னே வாருங்கள்!
கதிர்முற்றி சாயுமுன்னே வாருங்கள்!
புடம்போட்டுப் பார்க்காத ஸ்பரிசம்
உங்களின் பரிசத்தால் பரிச்சயமாகட்டும்!
ஊர்கூடி வாழ்த்துப்பா ஒலிக்க - நம்
வீட்டு வாயிலில் வாழை பூக்கட்டும்!


..........கா.ந.கல்யாணசுந்தரம்..

திங்கள், ஆகஸ்ட் 29, 2011

பூவாக உனை சுமக்க

புன்னை மர நிழலில்
தென்றல் துணையோடு
பிள்ளைக்கு தாலாட்டு!
தண்ணீர் தேக்கிவைத்த
வயக்காடு பரப்பினில்
நெல்நாத்துக் கட்டோடு
தாயவளின் பெரும்பாடு!

உச்சி வெயில் தணலாகி
உடம்பெல்லாம் வியர்க்க
பச்ச புள்ள செவ்வாய்க்கு
பால் புகட்டும் நேரமிது!
மார்பிரண்டும் பெரும்பாரம்
பிடிக்காத சுமையிதுவே!
பூவாக உனை சுமக்க
உள்ளமிது குதூகலிக்கும்!
குடைபிடித்து நிர்க்கின்ற
முதலாளி கெடுபிடியில்
நாற்று நாடும் கையிரண்டும்
குழந்தையின் நேசமிகு
உணர்வுகளில் நடுநடுங்க....
மங்கையவள் மாராப்பு
மழலைவாய் தீண்டாமல்
பால்வடிந்து நனைந்ததம்மா!
பாவியவள் அடிவயிற்றை
நனைக்கின்ற தேடலிலே!

.....கா.ந.கல்யாணசுந்தரம்.

பார்வையின் எல்லைக்குள்..........

நம் கைகளுக்கு
எட்டாத தூரத்தில்
வைத்திருப்போம்
குறிக்கோள்களை
ஆனால் அவை
எப்போதும்
இருக்க வேண்டும்
நமது
பார்வையின்
எல்லைக்குள்!
அவற்றை திருத்தவும்
அடையவும்
நம்மிடம் அதிகாரம்
இருக்கிறது!

......கா.ந .கல்யாணசுந்தரம்.

படித்தீர்களா?'அருவி'

'அருவி'
கவிதை இலக்கிய காலாண்டிதழ்
ஆசிரியர்: காவனூர் ந.சீனிவாசன்
புதிய பொலிவோடு முழுவதும் கவிதை மணம் பரப்பி
திமிரி நகரில் இருந்து வெளிவருகிறது

முகவரி: அருவி,
14 , நேரு பஜார்,
திமிரி 632512,
ஆர்க்காடு வட்டம்,
வேலூர் மாவட்டம

aruvisrinivasan@gmail.com
Cell:9600898806

இருவரின் புரிதலில்

மனிதப் பிறவியின் பயனிதுவென
இப்போதுதான் புரிந்தது....
அவளது புன்னகையில்
பிறப்பெடுக்கும் அங்கீகாரங்கள்!

கற்றது கைப்பிடி அளவுதான்னென்று
இப்போதுதான் புரிந்தது
அவளது அன்பின்
அரவணைப்பில் அகமகிழ்ந்தது!

எதிர்காலம் ஒரு வினாக்குரியானபோது
புதிரல்ல நம் வாழ்க்கையென்று
திட்டமிட்டு அவளால்
தடம்பதித்தது நிகழ்காலங்கள்!

எல்லா வளமும் நலனும்
இருவரின் புரிதலில்
ஒவ்வொருநாளும்
பிறப்பெடுக்கின்றன!





கா.ந.கல்யாணசுந்தரம்.

பரவசப்படும் இதயம்!






மனசுக்குள் ஒரு சுகம்...
அஞ்சலகப் பெட்டிக்குள்
கடிதம் விழும் போது
எப்போது சேருமோ என்கிற
ஏக்கத்தில் ஒரு தவிப்பு...
தெருமுனையில் தபால்காரன்
வருகைக்கான காத்திருப்பில்
ஒரு அலாதியான பரபரப்பு!
கைக்கு கிடைத்த கடிதத்தை
பக்குவமாய் பிரிப்பதற்குள்
அம்மாவும் தங்கையும்
அவசரப்படும் காட்சிகளில்
பரவசப்படும் இதயம்!
முத்து முத்தான கையெழுத்தில்
அண்ணனுடைய கடிதத்தினை
அம்மாவுக்கு படித்துக்காட்டும்போது
நானும் இமயமலையில்
இந்தியநாட்டின் எல்லையோரம்
துப்பாக்கியேந்தி நிர்ப்பது போன்ற
தியாக உணர்வுகள்...
மின்னணு நவீன பொருட்களும்
கைப்பேசியும் இப்போது
எங்களிடம் இருந்து என்ன பயன்?
மலர் மாலைக்குள் உனது
களங்கமற்ற முகத்தில் நாங்கள்
தெளிவாய் பிரதிபலிக்கிறோம்
இந்த தேசம் காத்த
தவப்புதல்வனின் வாரீசுகளாய்

ஒரு நீர்த்துளிக்குள் கடல்...



ஒரு நீர்த்துளிக்குள் கடல்...
என்று அறிந்தும் இந்த வாழ்க்கை
ஒரு மௌனத்தின் பிரவாகம்
என்பதை யாவரும் அறிந்திலர்!
இருட்டறைக்குள் உயிர் கொடுத்து
தவமிருந்து பெற்றெடுத்த தாயுள்ளம்
ஒரு தபோவனம்!
வம்ச விருட்சத்தின் நாற்றங்கால்கள்
இன்றளவும் நாம்தான் என்று பறைசாற்ற....
உன்னுள் இன்றளவும் எதை சாதித்தாய்
என்று மனம் மௌனமாய் கேட்பது
யாருக்கு தெரியப்போகிறது!
ஆனால் எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது
இந்த மானுடம் வென்ற மௌன நித்திரை
மரணமென்று!........
இனிமேலாவது அன்னையின் தபோவனத்தில்
ஒரு நிரந்தரப் பணியாளனாய் இரு!

.....கா .ந .கல்யாணசுந்தரம்.

புதன், ஆகஸ்ட் 24, 2011

விழுப்புண்கள்

முழு மனதோடு
நம்மை
ஏற்றுக் கொள்ள
யாராவது
இருக்கிறார்களா
என ஏக்கத்துடன்
காத்திருக்கின்றன
தோல்விகள்!
காரணம்...
அவைகள்
வெற்றிக்கான
விழுப்புண்கள் என
நம்மால்
அடையாளம்
காணாததால்!

நம்மை நாமே....

நம்மை நாமே
தயார் படுத்திக்
கொள்ள வேண்டும்
மற்றவர்களின்
மகிழ்ச்சியான
வாழ்க்கைப்
பயணத்திற்கான
வழிகாட்டுதல்களில்
களமிறங்க!

ஏனென்றால்

மலையின்
முகடுகளை
நோக்கித்தான்
எப்போதும்
செல்கின்றன
வெற்றிக்கான பாதைகள்
ஏனென்றால்
அவை நம்மை
இறக்கிவிடும் போது
முகம்காட்ட
மறுக்கின்றன!

நட்புக்கான.........

எப்போதும்
நம்மைச் சுற்றி
நல்லவர்கள்
இருக்கிறார்கள்
என்றே நினைப்போம்
அப்போதுதான்
மனித உறவுகள்
மேம்பட
நம்மிடம்
நிலைத்திருக்கும்
நட்புக்கான
பணிமனை!

காத்திருப்பாக இருக்கட்டும்!

தன்னுடைய
முதிர்வினை
அறிவிக்கும் வரை
காத்திருப்போம்
நமக்கான
வெற்றிக்கனியை
பறிப்பதற்கு
இதுவும்
நமது
குறிக்கோளின்
காத்திருப்பாக
இருக்கட்டும்!

நட்பின் இலக்கணம்

பிரித்து எழுதி
பொருள் கூற
முடியாததுதான்
நட்பின் இலக்கணம்
இருந்தாலும்
வெளிப்படையான
உணர்வுகளால்தான்
பலமாகிறது
நட்பின்
இளமைக் காலங்கள்!


.......கா.ந.கல்யாணசுந்தரம்.

செவ்வாய், ஆகஸ்ட் 23, 2011

ஒரு பனி பொழியும் காலை


ஒரு பனி பொழியும் காலை
அவளின் பவித்திர எழிலை
சுமந்து வந்த செந்நிறக் கதிர்கள்
அவனது இதய வாசலில்
பன்னீர் தெளித்து கோலமிட்டது...
ஒவ்வொரு விடியலும்
தினம் தினம் பூக்கின்றன
அவளின் வாசத்தோடு!
வைகறை மேகங்களில்
சேர்ந்திசைப் பாடல்களை
விடியல் பறவைகள்
பாடும்போதெல்லாம்
அவனது இதயக் கூட்டுக்குள்
ஒரு இனம்புரியாத
நேசப்பறவை சிறகடிப்பதை
உணர்ந்துகொள்ள முடியும்
அவளால் மட்டுமே!

.......கா .ந .கல்யாணசுந்தரம்.
நடை பயின்ற நாள் முதலே

ஆண் பெண்
இருவருக்குமான
உறவுப் பாலத்தை
காண்பதற்கு முன்
சிநேகத்தின் வாசத்தை
அறிந்து கொண்டேன்
நடை பயின்ற
நாள் முதலே!


இனி அவள் பாவை அல்ல...திருப்பாவை

பனி ஆடைக்குள் பவித்திரமாய்
அந்த மார்கழி காலைப்பொழுது!
விடியல் பறவை எழும்முன்
அவள் எழுந்துவிட்டாளோ?
காரணம் பனிபெய்த ஈரமண் வீதியில்,
தோழிகளுடன் அவளது பாத முத்திரைகளின்
அடையாளம் நன்றாகவே தெரிகிறது!
பாவை நோன்பில் ஆண்டுதோறும்
பயணித்திடும் அவளது எதிர்பார்ப்புகள்
வெறும் காத்திருப்புகளாகவே இருக்கின்றன!
இல்லை... இல்லை... இந்த ஆண்டு மட்டும்
அவளுக்கான இந்திரவனம்
என்னுள் பூத்திருக்கிறது....ஆம்
இனி அவள் பாவை அல்ல...திருப்பாவை!
.......கா.ந.கல்யாணசுந்தரம்.

கனவுத் தொழிற்சாலைகள்

கனவுத் தொழிற்சாலைகள்
மனிதத்தின் முதலீடுகள்
எல்லையற்ற ஆசையின்
ஆளுமையில் அவைகள்
ஒரு போருக்கான
கருவிகளின்
உற்பத்திக் கூடங்களாகின்றன....
இனியாவது
கவனத்துடன் இருப்போம்
மற்றவர்கள்
நம்
கனவுகளையாவது
விட்டு வைக்கட்டும்
களவாடாமல்!

தாய்மையின் விளக்கம் உன்னிடமே!



ஒளிதரும் மெழுகின் உன்னதமே-எங்கள்
பாச உணர்வின் உறைவிடமே!
அறுசுவை உணவின் பிறப்பிடமே-நல்ல
தாய்மையின் விளக்கம் உன்னிடமே!

கருவை சுமந்த நாள் முதலே-உன்
உருவம் காண துடித்திருந்தேன்!
பனிக்குடம் உடைத்து பிறப்பித்தாய்-நல்ல
தாய்மொழி அறிய கற்பித்தாய்!


நெஞ்சில் பதிந்த கல்வெட்டு - உந்தன்
நேசம் பொதிந்த தாலாட்டு!
இறைவனை நினைத்துப் பார்த்ததில்லை -உன்
இணையடி நிகர்க்கு ஏதுமில்லை!

[i] .....கா.ந.கல்யாணசுந்தரம்.[/i]