கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

திங்கள், ஆகஸ்ட் 29, 2011

பரவசப்படும் இதயம்!


மனசுக்குள் ஒரு சுகம்...
அஞ்சலகப் பெட்டிக்குள்
கடிதம் விழும் போது
எப்போது சேருமோ என்கிற
ஏக்கத்தில் ஒரு தவிப்பு...
தெருமுனையில் தபால்காரன்
வருகைக்கான காத்திருப்பில்
ஒரு அலாதியான பரபரப்பு!
கைக்கு கிடைத்த கடிதத்தை
பக்குவமாய் பிரிப்பதற்குள்
அம்மாவும் தங்கையும்
அவசரப்படும் காட்சிகளில்
பரவசப்படும் இதயம்!
முத்து முத்தான கையெழுத்தில்
அண்ணனுடைய கடிதத்தினை
அம்மாவுக்கு படித்துக்காட்டும்போது
நானும் இமயமலையில்
இந்தியநாட்டின் எல்லையோரம்
துப்பாக்கியேந்தி நிர்ப்பது போன்ற
தியாக உணர்வுகள்...
மின்னணு நவீன பொருட்களும்
கைப்பேசியும் இப்போது
எங்களிடம் இருந்து என்ன பயன்?
மலர் மாலைக்குள் உனது
களங்கமற்ற முகத்தில் நாங்கள்
தெளிவாய் பிரதிபலிக்கிறோம்
இந்த தேசம் காத்த
தவப்புதல்வனின் வாரீசுகளாய்