கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

திங்கள், நவம்பர் 13, 2017

நானிலு .... ( தன்முனைக் கவிதைகள் ) தமிழில் முதன் முதலில் புது வரவு

நானிலு .... ( தன்முனைக் கவிதைகள் ) தமிழில் முதன் முதலில் புது வரவு

நானிலு .... ( தன்முனைக் கவிதைகள் ) தமிழில் முதன் முதலில் புது வரவு – தன்முனைக் கவிதைகள் – வடிவமைப்பு – கா.ந.கல்யாணசுந்தரம் – இது தெலுங்கிலிருந்து தமிழுக்கு பயணித்த வடிவம்
********************************************************************************************************************
(கவிஞர் வதிலை பிரபா அவர்களின் மகாகவி மாத இதழில் கவிஞர் சாந்தா தத் அவர்கள் தெலுங்கிலிருந்து தமிழுக்கு “ நானிலு” அறிமுகப்படுத்தினார் – அதன் தாக்கத்தில் எனது முதல் நானிலு – தமிழ்க் கவிதைகள் )
.........கா.ந.கல்யாணசுந்தரம்
நானிலு .... ( தன்முனைக் கவிதைகள் )

·        மை ஊற்றி எழுதிய
தூவல்கள் அலமாரியை
அலங்கரிக்கின்றன
எனது கவிதை வரிகளுடன் 


·        குளத்தில் வீசிய கல்லொன்று
நீர் வட்டங்களைத் தந்தது
எனது கைகளின் வலிக்கு
மருந்தானது

·        முன்பின் தெரியாவிட்டால்
ஒன்றும் கவலைவேண்டாம்
நாம் அமர்ந்து கொண்டது
எதிரெதிர் இருக்கைகளில்

·        தேனிர் கடைக்குள் பறந்து
எனக்கான கோப்பையில்
அமர்ந்துவிட்டுப் போனது
வண்ணத்துப்பூச்சி

·        உனது பயணப் பாதையில்
மலர்கள் உதிர வேண்டும்
எனது மனமெங்கும்
மென்மையின் சுவாசம்

மெல்ல வரும் விடியல்
காலை நடைபயணத்தில்
பனி விலகி மேலெழும்ப
வந்தமரும் பட்டாம்பூச்சி

·        எதிரெதிரே சந்தித்தபின்னும்
எனது மௌன மொழிக்குள்
கவிதை எழுதிச் செல்கிறாள்
ஒரு ரசிகை

·        தூரத்தில் இணையும்
இருப்புப்பாதைகள் அருகில்
அமர்ந்தும் உறவை வெறுக்கும்
மனக் காயங்கள்

·        நூல்கண்டு குறைந்துகொண்டே
வந்தாலும் பறந்தபடி
உயரும் பட்டத்தில்
தெளிவாய் எனது வருங்காலம்

·        எனக்குள் யாசிக்கும்
வார்த்தைகளை தேர்ந்தெடுப்பதில்
முனைப்புடன் நிற்கின்றன
சமுதாய நிகழ்வுகள்  


.........கா.ந.கல்யாணசுந்தரம்