கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

புதன், அக்டோபர் 14, 2026

உலகத் தன்முனைக் கவிதைகள் நாள்! டிசம்பர் 17 — ஓர் இலக்கிய முன்னெடுப்பின் தொடக்கம்!


 உலகத் தன்முனைக் கவிதைகள் நாள்!

டிசம்பர் 17 — ஓர் இலக்கிய முன்னெடுப்பின் தொடக்கம்!

ஒரு கவிஞரின் பிறந்தநாள்…

ஒரு கவிதை வடிவத்தின் பெருமைநாள்…

தமிழின் தனித்துவத்தை உலகறியச் செய்யும் இலக்கியத் திருநாள்!

தன்முனைக் கவிதைகளின் தந்தை, கவிச்சுடர் கா.ந. கல்யாணசுந்தரம் ஐயா அவர்களின் பிறந்தநாளான டிசம்பர் 17ஆம் தேதியை, ‘உலகத் தன்முனைக் கவிதைகள் நாள்’ என அறிவித்து, உலகெங்கும் ஆண்டுதோறும் கொண்டாட வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் இம்முன்னெடுப்பை முன்வைக்கிறோம்.

 இலக்கியக் குழுமங்களுக்கும் கவிஞர்களுக்கும் அன்பான வேண்டுகோள்!

உலகத் தன்முனைக் கவிதைகள் நாளின் நோக்கத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில், பிற இலக்கியக் குழுமங்களும் இந்நாளை அறிவித்து, தன்முனைக் கவிதைப் போட்டிகளை நடத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

மேலும், தங்கள் குழும உறுப்பினர்கள் இந்நாளின் சிறப்பையும் நோக்கத்தையும் அறிந்துகொள்ளும் வகையில் விழிப்புணர்வுப் பதிவுகளை வெளியிட்டு, இம்முயற்சிக்குச் சிறப்புச் சேர்க்குமாறும் வேண்டுகிறோம்.

தன்முனைக் கவிதைகளைப் பரப்புவதிலும், கவிஞர்களை ஒருங்கிணைப்பதிலும், கவிதைப் போட்டிகளைத் தொடர்ந்து நடத்துவதிலும் சிறப்பாகப் பணியாற்றும் குழுமங்களுக்குத் தன்முனைக் கவிதைகள் குழுமம் நடத்தும் 2027ஆம் ஆண்டு விழாவில் உரிய விருதுகள் வழங்கப்படும்.

தன்முனைக் கவிதைகள் — சிறிய வரிகளில் பெரிய சிந்தனைகள்!

குறைந்த சொற்களில் ஆழமான சிந்தனைகளையும், வாழ்க்கை உண்மைகளையும், சமூக விழிப்புணர்வையும் மின்னல் தாக்கத்தைப் போல் வெளிப்படுத்தும் தன்முனைக் கவிதைகள், தமிழின் தனித்துவமான இலக்கிய வடிவமாக வளர்ந்து வருகின்றன.

இக்கவிதை வடிவத்தை உருவாக்கி, வளர்த்தெடுத்து, கவிஞர்களை ஒருங்கிணைத்து, எண்ணற்ற புதிய படைப்பாளர்களை ஊக்குவித்து வரும் கவிச்சுடர் கா.ந. கல்யாணசுந்தரம் ஐயா அவர்களின் இலக்கியப் பங்களிப்பைப் போற்றுவதும், தன்முனைக் கவிதைகளின் தனித்துவத்தையும் இலக்கிய மதிப்பையும் உலகெங்கும் கொண்டு சேர்ப்பதுமே இம்முன்னெடுப்பின் முதன்மை நோக்கமாகும்.

 டிசம்பர் 17 — கவிதையால் ஒன்றிணைவோம்!

உலகெங்கும் வாழும் தமிழ்க் கவிஞர்கள், தன்முனைக் கவிதை ஆர்வலர்கள், இலக்கிய அமைப்புகள், ஆய்வாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் வாசகர்கள் அனைவரும் இம்முயற்சியில் ஒன்றிணைவோம்!

📌 கவியரங்குகளை நடத்துவோம்!

📌 கவிஞர்களை ஒருங்கிணைப்போம்

📌 கவிதைப் போட்டிகளை நடத்துவோம்!

📌 இளைய தலைமுறையினரிடம் தன்முனைக் கவிதைகளைக் கொண்டு செல்வோம்!

இது ஒரு நாள் கொண்டாட்டத்திற்கான வேண்டுகோள் மட்டுமல்ல; தமிழின் படைப்பாற்றலையும் தன்முனைக் கவிதைகளின் வளர்ச்சியையும் முன்னெடுத்துச் செல்லும் நீண்டகால இலக்கிய இயக்கத்திற்கான அழைப்பாகும்.

கவிதைப் போட்டியும் பரிசும் சான்றிதழும்!

கவிச்சுடர் கா.ந. கல்யாணசுந்தரம் ஐயா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடத்தப்படும் தன்முனைக் கவிதைப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறும் கவிஞர்களுக்குப் பரிசுகளும் சான்றிதழ்களும் தன்முனைக் கவிதைகள் குழுமத்தின் 2027ஆம் ஆண்டு விழாவில் வழங்கப்படும்.

நமது இலக்கிய இலக்கு!

டிசம்பர் 17 — உலகத் தன்முனைக் கவிதைகள் நாள்!

தன்முனைக் கவிதைகள் வளரட்டும்!

புதிய படைப்பாளர்கள் பெருகட்டும்!

தமிழின் தனித்துவமான கவிதை வடிவம் உலகெங்கும் பரவட்டும்!

தலைமுறைகள் கடந்தும் தன்முனைக் கவிதைகளின் புகழ் நிலைக்கட்டும்!

கவிச்சுடர் கா.ந. கல்யாணசுந்தரம் ஐயா அவர்களின் இலக்கியப் பணி போற்றப்படட்டும்; புகழ் ஓங்கட்டும்!

இலக்கியத்தால் இணைவோம்!

தன்முனைக் கவிதைகளால் உலகைச் சிந்திக்கச் செய்வோம்!

அன்புடன்,

தன்முனைக் கவிதைகள் குழுமம்

நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் கவிஞர்கள்.

#உலகதன்முனைக்கவிதைகள்நாள்

#டிசம்பர்17

#கவிச்சுடர்காநகல்யாணசுந்தரம்

#தன்முனைக்கவிதைகள்

#தமிழ்இலக்கியம்

#கவிதைவளர்ப்போம்

#இலக்கியஒற்றுமை

---ந . வேலாயுதம் 

செயல்தலைவர் 


புதன், பிப்ரவரி 18, 2026

நூலகம் என்றோர் இடமுண்டு



நூலகம் என்றோர் இடமுண்டு
நல்லோர் நூல்கள் பலவுண்டு
படித்தால் வாழ்வில் பலனுண்டு
பார்வைக்கும் சிறந்த நலனுண்டு
புரட்டிப் பார்க்க வரவேண்டாம்
படித்துப் பார்க்க வருவோமே
பேசி இடையூரைத் தரவேண்டாம்
வாசிப்பை நேசிக்க வருவோமே
கதைகள் கவிதைகள் கட்டுரைகள்
விதையாய் மனத்தில் ஊன்றிடுவோம்
வார்த்தைச் சுரங்கம் அகழ்ந்தாய்ந்து
பேசிடும் போதில் விருந்தளிப்போம்
பண்புடையாளர் தொடர்பினைப்போல்
புத்தகம் வாசித்தல் தந்திடுமே
நற்பல நூல்கள் அணியணியாய்
நம்முடன் இணைந்தே வந்திடுமே
---கா . ந . கல்யாணசுந்தரம்



திங்கள், ஜனவரி 26, 2026

முனைவர் கா.ந.கல்யாணசுந்தரம் அவர்களுக்கு “யுகநாயகர் விருது” தன்முனை படைப்பாளர் பேரவை வழங்கியது.

 

முனைவர் கா.ந.கல்யாணசுந்தரம் அவர்களுக்கு “யுகநாயகர் விருது” தன்முனை படைப்பாளர் பேரவை வழங்கியது.

சென்னை பாட்டாபிராமில் நடைபெற்ற தன்முனை படைப்பாளர் பேரவை ஆண்டுவிழாவில் எமக்கு யுகநாயகர் எனும் விருதினை அளித்துப் பாராட்டினார்கள் . முன்னதாக தலைமை வகித்துப் பேசிய சொல்லின் செல்வர் திரு . ஆவடிக்குமார் தன்முனைக் கவிதைகள் அனைவராலும் எழுதப்படுகின்ற ஆகச்சிறந்த கவிதைவடிவமாக உள்ளது என்றும் கவிஞர்களின் எழுத்துகள் இந்தச் சமூகத்தின் மாற்றத்திற்கு உறுதுணையாக நிற்கின்றன எனவும் பேசினார் . விழாவில் எழுத்தாளர் சாந்தா தத் அவர்களின் பெயரில் நூலகம் ஒன்றினைத் திறந்து வைத்தார் . தன்முனைக் குழும செயல்தலைவர் ந . வேலாயுதம் அவர்கள் வாழும் வரலாறு கவிச்சுடர் கா . ந . கல்யாணசுந்தரம் என்கிற தலைப்பில் சிறப்பாகப் பேசினார் . விழாவில் முன்னிலை வகித்த ஓவியக் கவிஞர் அமுதபாரதி அவர்கள் மற்றும் நூலகர் சுரேஷ் பாபு ஆகியோர் கரங்களால் எமக்கு யுகநாயகர் விருது அளிக்கப்பட்டது . மேடையில் படைப்பாளர் பேரவைத் தலைவர் சுப்புராஜூ, நிறுவுநர் அன்புச்செல்வி சுப்புராஜூ , தன்முனைக் குழும செயல் தலைவர் ந . வேலாயுதம் , முனைவர் வே . புகழேந்தி , வைரவரி வானரசன் , எழில் இலக்கியப்பேரவை எழில் சோம பொன்னுசாமி , கவிஞர் ஆரோக்கியதாஸ் , நூலேணி பதிப்பகம் கன்னிக்கோவில் இராஜா , திரு . செ . முனுசாமி , கவிஞர் நாதமணி, கவிஞர் ஜார்ஜ் மரியண்ணன் ஆகியோர் . இளம் தன்முனைக் கவிகள் 10 பேருக்கு எமது பெயரில் விருதுகள் வழங்கப்பட்டன . 10 நூல்கள் வெளியிடப்பட்டன . விழாவில் கவிஞர்கள் ராஜூ ஆரோக்கியசாமி , தன்முனைக் குழும நிர்வாகிகள் புதுகை ஆதீரா, முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி , தமிழ்திரு ஆ . சண்முகம் , கவிதைச்சாரல் சங்கமம் தலைவர் இரா . பேச்சியம்மாள் , கவிஞர் விஜயகல்யாணி , கவிஞர் வீரா , கவிஞர் அகவலன் , தமிழ்த்திரு பன்னிரு கை செல்வன் , கவிஞர்கள் ஆ . ஜனனி , கவிதாகுமாரி , லாவண்யா மணிமுத்து , ஏ . வள்ளி , லட்சுமி செந்தில் மற்றும் தமிழ் ஆளுமைகள் , கவிஞர்கள் பலர் கலந்து கொண்டனர் .

தன்முனைக் கவிதைகளின் வளர்ச்சிக்கு பலவகையில் நற்பணி செய்துவரும் கவிஞர் அன்புச்செல்வி சுப்புராஜூ குடும்பத்தினருக்கு தன்முனைக் கவிதைகள் குழுமத்தின் இனிய வாழ்த்துகள் .
......கா . ந . கல்யாணசுந்தரம் .