கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

புதன், அக்டோபர் 19, 2022

துளிர்த்தலின் காலத்தினை எதிர்நோக்கி!


உதிர்க்கும் முன்
வண்ணங்களைப்
போர்த்திக் கொள்கின்றன...
நிறம் மாறாத பூக்கள் இருக்க
நிறம் மாறும் இலைகள்!
வெண்பனி கொட்டும்முன்
எங்களுக்கு
வண்ணமிகு காட்சி தந்து
மகிழ்வளிக்கும் மரங்கள்!
இலையுதிர்காலம்
இனிதாய் வரவேற்கிறோம்
துளிர்த்தலின் காலத்தினை
எதிர்நோக்கி!

...... கா. ந. கல்யாணசுந்தரம்.


செவ்வாய், ஜூலை 05, 2022

கம்பன் கவிநயம்

 








அறிவியல் தகடுகள்

இருள் முடிச்சு அவிழ வெளிச்ச ஊடுருவலில் கொள்ளைபோகும் காலம் மீட்டெடுக்க முடியாது தவிக்கின்ற மனிதம் அடுத்த நகர்வுக்கு தயாராகிறது அவ்வப்போது காலக்கண்ணாடி உடைக்கப்பட்டு எவ்வித பிரதிபலிப்புமின்றி வெற்றுச் சலனங்கள் அரங்கேறுகின்றன வரலாற்றுப் பதிவுகளில் அச்சு முறிந்த சூட்சுமத்தில் பயணித்திருக்கிறது வெற்றியாளர்களின் சாகசங்கள் சுவடுகள் தேய்ந்து வர புதுப்பித்து வருகின்றன அறிவியல் தகடுகள் ......கா.ந.கல்யாணசுந்தரம்

......கா.ந.கல்யாணசுந்தரம்

தடைக்காலம்

 


வெள்ளி, ஏப்ரல் 15, 2022

எது கவிதையென்றும் இதுதான் கவிதையென்றும் நம்மால் கூற முடியுமா ?

 எது கவிதையென்றும் இதுதான் கவிதையென்றும் நம்மால் கூற முடியுமா ?

************************************************************************************************
எது கவிதையென விளக்கம் கொடுத்து பலர் தோற்றுப்போயிருக்கிறார்கள். கவிதைப்பற்றிய இலக்கணங்கள் அதனதன் வடிவத்தைப் பொறுத்தது. மரபு வழிக் கவிதைகளுக்குள் நான் செல்ல விரும்பவில்லை. அவையாவும் செய்யுள் வடிவங்கள். யாப்பு அணி இலக்கணங்களைக் கொண்டு பக்தி இலக்கியம் முதல் அழியாத சிறப்புத் தன்மையுடன் அவை இன்றும் மணம் வீசுகின்றன. உரைநடைக் கவிதைகள் தோன்றிய காலத்தில் புதுக்கவிதை வடிவம் உருவானது. இதற்கு வரலாற்றுப் பின்னணியாக எழுத்தாளர் வல்லிக்கண்ணன் அவர்களது புதுக்கவிதை தோற்றமும் வளர்ச்சியும் படித்தால் புரிந்து கொள்ளலாம்.
புதிதாகப் பிறக்கும் இலக்கியத்தை, ‘விருந்து’ எனப் பெயரிட்டு வரவேற்றார் தொல்காப்பியர்…
“ பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையினானே “ என்று உரைத்தார்
நன்னூலார்…
“சுவை புதிது பொருள்புதிது வளம்புதிது சொல்புதிது சோதிமிக்க நவகவிதை” என்றார் பாரதி.
Free Verse என்ற கவிதை அமைப்பும் ஆங்கிலத்தில் இருந்தது புதுக்கவிதையின் தோற்றம் வளர்ச்சி நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்டது.
பிறமொழி கவிதை இலக்கியத்திலிருந்து தமிழில் வடிவங்களை இறக்குமதி செய்வதில் தவறில்லை. ஜப்பானிய மொழியிலிருந்து ஹொக்கு…ஹைக்கூவையும் தெலுங்குமொழியின் நானிலு …தன்முனைக் கவிதைகள் போன்றவை தமிழ் மொழிக்கேற்ப உருவெடுத்து கவியுலகில் வலம் வருகின்றன. பெரும்பாலான கவிஞர்கள் விரும்பி எழுதுகிறார்கள்.
சமூகப் பார்வையோடும், வாழ்வியல் நோக்கோடும் எழுதப்படுகின்ற கவிதை வரிகள் எந்த வகைமையாயினும் உயிர்ப்புடன் விளங்கும். படிப்போரின் மனத்தில் எப்படி இடம்பிடிக்கிறது என்பதை ஆராய்ந்து அறிந்தோமானால் அக்கவிதைச் சொற்கள் விதைக்கின்ற சிந்தனைகள் மற்றும் கருத்தாழம் கொண்டவைகளாக இருத்தலே காரணமெனலாம்.
மரபாக இருக்கட்டும், புதுக்கவிதை மற்றும் நவீனக் கவிதைகளாகட்டும் பலரது படைப்புகளில் நீர்த்துப் போன தன்மையைக் காண்கிறோம். இலக்கணம் சரியாக அமைந்த மரபுக்கவிதைகள் பலவற்றில் சொல்ல வந்த கருத்தினை சரியாக சொல்லாமல் படிப்போருக்கு விளங்காமல் போனதுண்டு. இதே போலத்தான் நவீனக் கவிதைகள் பல பலமுறை படித்தபின்னே அதன் படிமக் கூறுகள் விளங்குவதுண்டு. ஹைக்கூ கவிதைகள் பெரும்பாலும் எளிமையான சொற்களோடு எழுத்தினாலொழிய அவை மக்கள் மனதில் இடம்பெறாது. கவிதைகளின் வடிவம் பல காலச்சூழலுக்கு ஏற்ப புதிய புதிய உத்திகளோடு உருக்கொண்டு கவிஞர்களின் கரங்களில் படைக்கப்படுகிறது.
கவிதை என்ற சொல்லுக்கு வேண்டுமானால் விளக்கங்கள் பலவிதமாக கொடுக்கலாம்…ஆனால் இதுதான் கவிதை எனச் சொல்லமுடியாத சூழல் எப்போதுமே கவியுலகில் நிலவி வருகிறது. புதுப் புது வடிவங்களில் அதன் பயணிப்பு தொடர்ந்துகொண்டுதான் இருக்கும்.
எவ்வகைக் கவிதையாயினும் அந்த வகைமையில் நாம் பயிற்சி பெறுகின்றபோது படிப்போரின் மனதில் இடம்பிடிக்கும் தன்மையதாய் இருக்கவேண்டும். ஆக….மரபு, புதுக்கவிதை, நவீனம், ஹைக்கூ, தன்முனை என எவ்வகைமையாயினும் அதனதன் சிறப்பிலிருந்து மாறுபடாது. இக்கவிதை வகைமையில் சிறந்து விளங்குவோர் தமிழ் கவிதை வரலாற்றில் இடம் பிடிப்பர்.
கவிதைகள் அவரவர் பெற்ற பிள்ளைகளைப் போன்றது. மற்றவர்களின் பார்வையில்தான் அந்தந்தக் கவிதைகளின் படைப்பாளிகள் போற்றப்படுவர்.
படிப்போரின் மனநிலையை கவிதைகள் எவ்விதத் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதைப் பொறுத்தது அதன் பயணிப்பும் பெருமையும்.
மரபுக் கவிதை :
++++++++++++
அன்று:
நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கு மாங்கே பொசியுமாம்-தொல்லுலகில்
நல்லா ரொருவர் உளரேல் அவர்பொருட்
டெல்லார்க்கும் பெய்யு மழை.
…….ஒளவையார்
இன்று:
புல்லின் நுனிவானம் புன்னகைப்பூ உள்நாணம்
சொல்லில் கருவேற்றிச் சொக்கவைக்கும்!--முல்லையென
ஒல்லும் வகையெல்லாம் ஊரை விலைபேசும்
வெல்லுதமிழ் வேரெங்கள் வேல்!
….கவிக்கோ துரை வசந்தராசன்
புதுக்கவிதை :
++++++++++++
அன்று :
பாதை முள்
படுக்கை முள்
இருக்கை முள்
வாழ்க்கை முள்
ஆன மனிதர்களைப் பார்த்துச்
சிலிர்த்துக் கொண்டது
முள்ளம்பன்றி...
ஓ.. இவர்களுக்குத் தெரியாதா
முள்ளும் ஓர்
ஆயுதம் என்று
–சிற்பி பாலசுப்பிரமணியம்
இலக்கணச் செங்கோல்
யாப்புச் சிம்மாசனம்
எதுகைப் பல்லக்கு
தனிமொழிச் சேனை
பண்டித பவனி
இவை எதுவுமில்லாத
கருத்துக்கள் தம்மைத் தாமே
ஆளக் கற்றுக்கொண்ட புதிய
மக்களாட்சி முறையே புதுக்கவிதை
– மு.மேத்தா.(புதுக்கவிதை இலக்கணம் குறித்து புதுக்கவிதை )
இன்று :
பறக்கிறோம் என்பது
பார்வையின் மயக்கம் !
சிறக்கிறோம் என்பதும்
சிந்தனைக் குழப்பம் !
இருக்கிறோம் என்பதே
இயற்கையின் கருணை
வருவதும் போவதும்
வாழ்க்கையின் உயிர்ப்பு !
–ஆரூர் தமிழ்நாடன்
நவீன கவிதை :
+++++++++++++
அன்று:
ரயில் வண்டியின் குலுங்குகிற
ராத்திரி விழிப்பில்
கண்ணாடி ஜன்னல் வலி
கலங்கி தெரிந்தது
நீரற்று ஆற்று மணல் மேல் நிலா.
-------------------------------------
மரணத்திலிருந்து
தாபித்த கண்கள்
மருத்துவமனைக் கட்டிலில்
உறங்க,
கணக்கும் மனதுடன்
நிசியில் வெளிவந்தது நின்ற பொழுது
வேப்பமர கிளைகளுக்கிடையில்
நிலா அசைந்தது.
---------------------------------------------------
தானாக இப்படி
தட்டுப்பட்டது தவிர
நிலா பார்க்க என்று போய்
நிலா பார்த்து நாளாயிற்று.
–கல்யாண்ஜி (வண்ணதாசன்)
இன்று:
ஆதி நதியொன்று
பாய்ந்துகொண்டே இருக்கிறது
அதன் கரையில்தான்
நாம் நிற்கிறோம்.
அதன் அலையில்தான்
நாம் நனைகிறோம்!
.
கூழங்கல்லாய் உருள்கிறது
தொன்மையின்
மாயப் பேரழகு.
.
நம் காலடியிலோ
காலத்தின் வண்டல்.
.
ஆதாம் ஏவாளின்
மரபணுக்கள்தான்
வாழ்வின் கட்டங்களுக்குள்
இப்போதும் நம்மை வைத்து
சதுரங்கம் ஆடுகின்றன.
.
ஆயிரமாயிரம்
ஆண்டுகளின் பின்னும்
நம் ஹார்மோன்கள்
யார் யாரிடமிருந்தோ சுரந்து
அவர்களின்
நடத்தைகளுடன் விளையாடும்.
.
அதுவரை இங்கே
வந்து போய்க்கொண்டிருக்கலாம்
நாம்.
--ஆரூர் தமிழ்நாடன்
புங்கமரத்து நிழல்
படுத்திருந்த நேரம்
வண்டியோடு கட்டப்பட்ட
காளைகள் ஓய்வெடுக்க
காகம் ஒன்று குதித்தபடி
காளையின் கொண்டை
மீதேரியும் இறங்கியபடியும் இருந்தது
பாரம் சுமந்த தளர்ச்சியில்
உறங்கமுடியாது தவித்த
காளையின் வாலும்
காதுகளும் காகத்தை
துரத்தும் முயற்சியில் இருந்தன...
கண்களில் இருந்து வழியும்
கண்ணீர்க் கோடுகள்
மட்டுமே அறியும் காளையின்
ரணம் சுமக்கும்
காயங்களின் வலி .
–கா.ந.கல்யாணசுந்தரம்
குறிப்பு: மேலே சொன்ன கவிதைகளையும் இது கவிதையல்ல என மறுப்போரும் உண்டு….இதுதான் உலகம்