கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

சனி, ஆகஸ்ட் 27, 2016

புத்துலகு கண்டிடுமே பொறுப்போடு !

















தோகை விரித்தாடும்
மயில் போல்
தாவிக் குதித்திடும்
மனது நித்தம் !
புருவவில்லில் 
பார்வைக் கணைகள்
தொடுத்திடும்
ஒரு பருவ யுத்தம் !
வெண்கலச் சிலைபோல்
மேனி மின்னும்
எழிலுரு மாற்றம் தன்னில்...
அறியாது புரியாது
புன்முறுவல் பூக்கின்ற
ஆனந்த மொட்டவிழ்
வசந்த காலம் !
முறைமாமன்
குச்சி நட்டு பந்தலிடும்
மறத்தமிழன்
பண்பாட்டின் நிகழ்விடம் !
பட்டுப் பாவாடையும்
பளபளக்கும் தாவணியும்
பருவத்தின்
வாசலுக்கு மெருகூட்டும் !
மஞ்சள் நீராடி
அகில் சந்தன வாசமுடன்
கொஞ்சுமொழியாளின்
கூடத்து விழாவினில்...
கெஞ்சுகின்ற
விழியோடு காத்திருந்து
தஞ்சமடைந்திடுமே
வாலிப நெஞ்சங்கள் !
மொட்டவிழ் தாமரையாய்
முகம்மலர
நாளொருமேனியும்
பொழுதொரு வண்ணமுமாய் ...
பூப்பெய்திய பருவமினி
பெற்றோரின் அரவணைப்பில்
புத்துலகு கண்டிடுமே
பொறுப்போடு !
...........கா.ந.கல்யாணசுந்தரம்

மனசாட்சியை கூறுபோட்டு

எனது கனவுகளை
பறித்துக்கொண்டு
நிஜங்களை பரிசளிக்க
கடவுள் எதிரே வந்தார்....

இலவசமாய் பெறுவதற்கு
மனம் விரும்பவில்லை
அது விலையில்லா
பொருளாகி என்னிடம்
சோம்பலை தந்தது....
மனசாட்சியை கூறுபோட்டு
அடிமை சாசனத்தில்
கையெழுத்திட வைத்தது....!

காலை எழுந்தவுடன்
மறந்துபோகும் கனவுகளை
மட்டுமாவது விட்டுவையுங்கள்...
மீண்டும் கடவுளிடம்
மன்றாடிக் கேட்டேன் !

கனவுகள் எப்போதும்
இலவசமல்ல
உன்னோடு பிறந்தது ! 
என சொல்லி மறைந்தார்....!
தூக்கம் கலைந்தேன்
அந்த கனவு
மறவா கனவானது !
..........கா.ந.கல்யாணசுந்தரம்