கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

புதன், ஆகஸ்ட் 31, 2016

மனம்கொத்திப் பறவைகளின் கூடாகட்டும் !

இருளின் அடர்த்திக்குள்
என்னை முழுவதுமாய்
திணித்துக்கொண்டேன் ...
வெளிச்ச நாட்களின்
வாழ்க்கைப் பக்கங்களை
விளக்கின்றி
படிக்கத் துவங்கினேன்....
திடீரென இருளை
அணைத்துக்கொண்டு
விளக்கொளி உள்ளே
பாய்ந்தது ....
வெளிச்சப் பூக்களை
அள்ளித்தெளித்த
தேவதையாய் இரவின்
கரங்கள் மகிழ்ந்தன...
பகலைவிட இருளை
அதிகம் நேசிக்கிறேன்
காரணம்.....
அப்போதுதான் நெஞ்சம்
மனதின் விசும்பல்களை
அசைபோட்டபடியே
நிம்மதியடைகிறது !
இரவின் கரங்களே....
இப்போதாவது
தெரிந்து கொள்ளுங்கள்
உங்களிடம் இருக்கும்
வெளிச்சஅரும்புகளை
பூக்கவிடாது என்மீது
இருளின் வேர்களை
படரவிடுங்கள்....
அவை எனது
மனம்கொத்திப் பறவைகளின்
கூடாகட்டும் !
.......கா.ந.கல்யாணசுந்தரம்

உதிர்தலின் புனிதம் அறிந்து !

பாதங்களில் மிதியுற்ற 
சருகுகளின் சலசலப்பில் 
எனது பயணிப்பின் திசை
மாற்றியமைகிறது

மணல் தேசமொன்றின்
ஆற்றைக் கடக்க
ஒரு பரிசல் பெண்ணின்
துணையோடு
பயணமானேன்...
மற்றவர்களை மட்டுமே
கரைசேர்க்கும் இவள்
துவண்ட முகத்தோடு
துடுப்புகளால் கையசைத்து
விடைபெற்றாள்

பயனத்திசைகள் எங்கும்
மானுட அவலம்
முடிவின்றி பயணிக்கிறது
மீண்டும் தொடர்கிறேன்
காய்ந்த வனமொன்றின்
சாலையொன்றில்...
இப்போது மௌனித்திருந்தது
சலசலப்பின்றி சருகுகள்
உதிர்தலின் புனிதம் அறிந்து !

........கா.ந.கல்யாணசுந்தரம்.

ஞாயிறு, ஆகஸ்ட் 28, 2016

இல்லறத்தில் நல்லறம் கண்ட நங்கையிவள்



வான்வழி தவழும் நிலவென மழலையிவள்
வாய்முத்தம் சுவைத்திங்கு மகிழ்ந்திடவே....
நிலமதில் பேதையாய் எண்திசையும்
உற்றுநோக்கி வியப்பிலாழ்ந்து நாள்தோறும்  
பெதும்பையாய் தோழியர் பலருடன் ஊஞ்சலாடி.....
காலம் வளர்த்த பயிர் பசுமையுடன் நின்றாடுதம்மா !

கனிமொழி மங்கையிவள் பெண்மையின் சிறப்பறிந்து
நாணித் தலைகுனியும் நங்கையிவள்
கானகத்து வண்ணமயில் பூங்கோதை !  
அன்னநடை பயிலும் மடந்தையின் கைபிடிக்க
மணாளனைத் தேடிப் பெற்றோர் மட்டற்ற மகிழ்வெய்தி
அரிவைப் பருவத்தே பயிர் செய்வர் !

இல்லறத்தில் நல்லறம் கண்ட நங்கையிவள்
கைப்பிடித்த கணவனுடன் தெரிவைத் திறத்தாலே
பேர்சொல்லும் பிள்ளைகளைப் பெற்றெடுப்பர் !
பேரிளம் பெண்ணிவளின் பல்கலை வித்தகத்தால் 
சமுதாயக் கூடமதில் கலாச்சாரத் தூணாக நின்றிடுவாள்
அமுதாக தமிழ் மரபில் இலங்கிடுவாள் குலவிளக்காய் !
     


...............கா.ந.கல்யாணசுந்தரம்

சனி, ஆகஸ்ட் 27, 2016

புத்துலகு கண்டிடுமே பொறுப்போடு !

















தோகை விரித்தாடும்
மயில் போல்
தாவிக் குதித்திடும்
மனது நித்தம் !
புருவவில்லில் 
பார்வைக் கணைகள்
தொடுத்திடும்
ஒரு பருவ யுத்தம் !
வெண்கலச் சிலைபோல்
மேனி மின்னும்
எழிலுரு மாற்றம் தன்னில்...
அறியாது புரியாது
புன்முறுவல் பூக்கின்ற
ஆனந்த மொட்டவிழ்
வசந்த காலம் !
முறைமாமன்
குச்சி நட்டு பந்தலிடும்
மறத்தமிழன்
பண்பாட்டின் நிகழ்விடம் !
பட்டுப் பாவாடையும்
பளபளக்கும் தாவணியும்
பருவத்தின்
வாசலுக்கு மெருகூட்டும் !
மஞ்சள் நீராடி
அகில் சந்தன வாசமுடன்
கொஞ்சுமொழியாளின்
கூடத்து விழாவினில்...
கெஞ்சுகின்ற
விழியோடு காத்திருந்து
தஞ்சமடைந்திடுமே
வாலிப நெஞ்சங்கள் !
மொட்டவிழ் தாமரையாய்
முகம்மலர
நாளொருமேனியும்
பொழுதொரு வண்ணமுமாய் ...
பூப்பெய்திய பருவமினி
பெற்றோரின் அரவணைப்பில்
புத்துலகு கண்டிடுமே
பொறுப்போடு !
...........கா.ந.கல்யாணசுந்தரம்

மனசாட்சியை கூறுபோட்டு

எனது கனவுகளை
பறித்துக்கொண்டு
நிஜங்களை பரிசளிக்க
கடவுள் எதிரே வந்தார்....

இலவசமாய் பெறுவதற்கு
மனம் விரும்பவில்லை
அது விலையில்லா
பொருளாகி என்னிடம்
சோம்பலை தந்தது....
மனசாட்சியை கூறுபோட்டு
அடிமை சாசனத்தில்
கையெழுத்திட வைத்தது....!

காலை எழுந்தவுடன்
மறந்துபோகும் கனவுகளை
மட்டுமாவது விட்டுவையுங்கள்...
மீண்டும் கடவுளிடம்
மன்றாடிக் கேட்டேன் !

கனவுகள் எப்போதும்
இலவசமல்ல
உன்னோடு பிறந்தது ! 
என சொல்லி மறைந்தார்....!
தூக்கம் கலைந்தேன்
அந்த கனவு
மறவா கனவானது !
..........கா.ந.கல்யாணசுந்தரம்