கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

ஞாயிறு, ஆகஸ்ட் 28, 2016

இல்லறத்தில் நல்லறம் கண்ட நங்கையிவள்



வான்வழி தவழும் நிலவென மழலையிவள்
வாய்முத்தம் சுவைத்திங்கு மகிழ்ந்திடவே....
நிலமதில் பேதையாய் எண்திசையும்
உற்றுநோக்கி வியப்பிலாழ்ந்து நாள்தோறும்  
பெதும்பையாய் தோழியர் பலருடன் ஊஞ்சலாடி.....
காலம் வளர்த்த பயிர் பசுமையுடன் நின்றாடுதம்மா !

கனிமொழி மங்கையிவள் பெண்மையின் சிறப்பறிந்து
நாணித் தலைகுனியும் நங்கையிவள்
கானகத்து வண்ணமயில் பூங்கோதை !  
அன்னநடை பயிலும் மடந்தையின் கைபிடிக்க
மணாளனைத் தேடிப் பெற்றோர் மட்டற்ற மகிழ்வெய்தி
அரிவைப் பருவத்தே பயிர் செய்வர் !

இல்லறத்தில் நல்லறம் கண்ட நங்கையிவள்
கைப்பிடித்த கணவனுடன் தெரிவைத் திறத்தாலே
பேர்சொல்லும் பிள்ளைகளைப் பெற்றெடுப்பர் !
பேரிளம் பெண்ணிவளின் பல்கலை வித்தகத்தால் 
சமுதாயக் கூடமதில் கலாச்சாரத் தூணாக நின்றிடுவாள்
அமுதாக தமிழ் மரபில் இலங்கிடுவாள் குலவிளக்காய் !
     


...............கா.ந.கல்யாணசுந்தரம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக