கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

ஞாயிறு, செப்டம்பர் 27, 2015

டிஜிட்டல் உலகம்

டிஜிட்டல் உலகம்
அறுவடை செய்கிறது
விவசாயிகளின் தற்கொலைகள்

...கா.ந.கல்யாணசுந்தரம்.

வெள்ளி, செப்டம்பர் 18, 2015

தளிர்களின் காலம் ....




விண் காணும் தளிர்கள்
மண் நோக்கியபடி
சருகுகள்

.....கா.ந.கல்யாணசுந்தரம்.

ஞாயிறு, ஆகஸ்ட் 30, 2015

இவனது நிஜ வாழ்க்கை ...

வண்ணக் கலவைகள்  
கிண்ணத்தில் இருந்தன...
ஆடை களைந்து
மினுக்கும் ஜிகினா
உடையணியும் நேரம்
ஒரு முறை மீண்டும்
நிலைக்கண்ணாடியில்
தன்னைப்பார்த்து மீள்கையில்
ஒப்பனைக் கலைஞன்
அவனருகே .....!
திரைவிலகியதும்
முதல் காட்சியில்
தோன்றவேண்டும்.....!
வீதியெங்கும் ஆவலுடன்
அமர்ந்திருக்கும்
ரசிகர்கள்....!
ஹார்மோனியப் பெட்டியுடன்
பாட்டுவாதியார்
பக்க வாத்தியங்களுக்கு
நடுவே...!
மாதக்கணக்கில்
ஒத்திகை பார்த்து
நினைவில்கொண்ட பாடலை
உச்ச குரலில் பாடவேண்டும்  !
ஆம்.....................
அரிதாரம் பூசி கோமாளியாய்
மற்றவர்களை சிரிக்கச்செயும்
இவனது நிஜ வாழ்க்கை ...
ஒரு முகமூடிக்குள்
புதைந்திருக்கிறது !


...........கா.ந.கல்யாணசுந்தரம்.

ஞாயிறு, ஆகஸ்ட் 23, 2015

காலநதியில் ஆசைப்படகுகள்...........



கண்மூடி தியானிக்கும்
விழிகளின் கட்டுப்பாட்டில்
எண்ண அலைகள்...!
ஒரு பிரபஞ்சத்தின்
அந்தரங்க மொழி
மௌனம்தான் !

இழையோடிய புன்னகை
எதிர்வரும் இன்னல்களை
இல்லாமலாக்கும் !
நற்சிந்தனைகள்
வளமானவாழ்வின்
நாற்றங்கால்கள் !

ஓசையின்றி ஓடும்
காலநதியில் 
ஆசைப்படகுகள்
இலக்கின்றி பயணிக்க...
ஐம்புலன்களையும்
அடக்கி ஆளா மானுடம்  
தினம் தினம் இழக்கிறது
‘சும்மா’..... இருக்கும் 
சுகம்தனை அறியாமல் !  

 ..............கா.ந.கல்யாணசுந்தரம்.

சனி, ஆகஸ்ட் 15, 2015

விதைக்கப்பட்ட சுதந்திரம் ......















இந்தியத் திருநாட்டில்
விதைக்கப்பட்ட சுதந்திரம்
ஆல்போல் தழைத்து
தன்னிறைவின் நிழல் பரப்பி
தரணியிலே தலைநிமிர்ந்து
நிற்கிறது !
வல்லரசு கொடியுயர்த்தும்
நாள் தொலைவிலில்லை !
மென்பொருள் அறிஞர்கள்
கூகுள் இணையத்திலும்
கோலோச்சி நிற்கிறார்கள் !
அறிவியல் வேளாண்
துறைகளிலும் அளப்பரிய சாதனை !
ஏவுகணை வரலாற்றில்
இணையிலா முத்திரைப்பதித்தார்
இந்தியக் குடிமகன்
அப்துல் கலாம் !
எண்ணற்ற எல்லையோர
இராணுவ வீரர்கள், கலைஞர்கள் ,
பல்துறை அறிஞர்கள்,
திறன்மிகு அரசியலார், 
வல்லுனர்களை ஈந்து
பெரிதுவக்கும் இந்தியத்தாயின்
இன்றைய வேண்டுகோள்.....
“மதுவற்ற மாநிலங்களைத்
தழுவட்டும் இனி பாரதம் !
தனிமனிதன் ஒழுக்கநெறி
பேணி தியாகி சசிபெருமாள்
கனவுதனை நினைவாக்குங்கள்”
வந்தேமாதரம் ...!!! ஜெய்ஹிந்த்......!!!!!

.......கா.ந.கல்யாணசுந்தரம்

வியாழன், ஜூலை 30, 2015

இந்தியத் தாயின் நல்லிணக்க நாயகன் !

எளிமையின் சிகரம்
இணையிலா மாமனிதர்
கவிதை நெஞ்சின் கோமகன்
அக்கினிச் சிறகினில்
அகிலத்தை அடைகாத்தவன் ...
பார் போற்றும் பாரதரத்னா !
இராமேஸ்வர கடற்கரையின்
இளம் தென்றல்....
அன்பெனும் சிறைக்குள்
நம்மை அகப்படவைத்தவன் !
அறிவியல் உலகின்
ஓர் அமர காவியம்....
தமிழுலகின் இலக்கியப் பேழை
இந்தியத் தாயின் நல்லிணக்க நாயகன் !
மதங்களைக் கடந்த மாமேதை
அப்துல் கலாம் இன்னுயிர் பிரிந்தாலும்
அவரின் சாதனைப் பயணம்
என்றும் நம்மோடுதான். !

...............கா.ந.கல்யாணசுந்தரம்.
 

புதன், ஜூலை 15, 2015


சிந்திக்கும் நேரங்களில் 
சிறகடிக்கும் பட்டாம்பூச்சிகள்கூட 
ஓய்வெடுத்து உனை நோக்கும் 
விளையாடும் போதெல்லாம் 
வானவில் வழிநெடுக
பந்தல்போடும் !        

நடனமிட்டு புன்முறுவல் 
பூக்கின்றபோது முற்றத்து 
அணில்கூட அசையாது நிற்கும் 
மழலையிவள் வாய்மொழியில் 
குழலோசை செவிமடுத்து 
குதூகலிக்கும் !


தென்றலிடம்  நடைபயின்று
மன்றல் வந்த மானினமோ
இவளின் மருண்டவிழியழகில்
மயக்கமுற்று மீளாது
துயில் கொள்ளும் !

ஒளிப்பூக்களை பறித்தெடுத்து
சத்தமின்றி என்னுள் செலுத்துகிறாள் !
கோடையின் குளிர் குளிர்நிலவில்
குதூகலமாய் கற்பனைத்தேர் ஏறி
எனை இயங்கவைத்து
யாதுமாகி நிற்கிறாள் !
         ..........கா.ந.கல்யாணசுந்தரம்.


சனி, ஜூலை 04, 2015

தோழமை வளர்க்கின்றன 
அடுக்குமாடி குடியிருப்பில் ...
பூங்கா இருக்கைகள் !







சனி, ஜூன் 13, 2015

இறைவன் வாழ்கிறான்

இயற்கையின் மாண்பில்
இறைவன் வாழ்கிறான்
நயாகரா நீர்வீழ்ச்சி !

...........கா.ந.கல்யாணசுந்தரம்.


செவ்வாய், ஜூன் 09, 2015

இன்பம் பருகும் வாழ்நாட்கள் !









இசையுலகின் இணையிலா மேதை !
இறைவனின் இசை அவதாரம் !
இயற்கையின் இதயத்தை தொட்டவன் !
இயல்பின் வெளிப்பாடுகளில்
இமயத்தை முத்தமிட்டவன் !
இலங்கும் புவிமீது இசையின்
இலக்கணத்தை வடித்தவன் !
இன்றல்ல நேற்றல்ல என்றும்
இசையுலகின் சக்கரவர்த்தி !
இளையராஜா - எங்களின்
இதயம்கவர் கள்வன் !
இந்தியத்தாய் பெற்றெடுத்த
இணையிலா தவப்புதல்வன்
இன்னும் இன்னும் வேண்டும்
இவனின் இசை கேட்டு
இன்பம் பருகும் வாழ்நாட்கள் !

............கா.ந.கல்யாணசுந்தரம்.

அவளின் புரிதல் இலக்கணம் !




ஒரு விரல் தொட்டதும் 
நெஞ்சம் இனித்தது ............
அவளின் புரிதல் இலக்கணம் !

........கா.ந.கல்யாணசுந்தரம் 

திங்கள், ஜூன் 08, 2015

எனது எண்ண ஓட்டங்களாக பகிரப்பட்டவை......



தலைப்பைச் சேருங்கள்











படுத்து உறங்காமல்
இளைப்பாற வாருங்கள்...
நிழல்தரும் மரங்கள் !

வற்றிய குளத்தை
முத்தமிட வா....
கோடை மழையே !

தோகை விரித்த மயிலுக்கு
குடைபிடித்தன....
கரு மேகங்கள் !

தென்றலுடன் கைகோர்த்து
நல்லிசை வழங்கின...
வண்டு துளைத்த மூங்கில்கள் !

புதியதாய் துளிர்த்தலில்
ஒரு மௌனித்த பயணம் ...
நேற்றைய உதிர்தல் !
........கா.ந.கல்யாணசுந்தரம்.

திங்கள், ஏப்ரல் 20, 2015

தமிழினம் தழைக்க ....

தமிழினம் தழைக்க 
தமிழகம் தழுவவேண்டும்... 
மதுவற்ற மாநிலத்தை !

.............கா.ந.கல்யாணசுந்தரம்.

வெள்ளி, ஏப்ரல் 10, 2015

சாவிகொடுத்த பொம்மைபோல் ....

எங்கு பார்த்தாலும் மக்கள் வெள்ளம் ...
வேகமாக நடந்து செல்வோரின் கைகள்
அவரவர்களின் மனவோட்டத்தின்படி
அசைந்து அசைந்து ஊஞ்சலாடுகிறது !
சாவிகொடுத்த பொம்மைபோல் சிலர்
முகத்தில் சலனமற்று பயணிக்கின்றனர் !
நாளைய வாழ்க்கையின் இருத்தலுக்காய்
இருப்புக்கொள்ளாமல் தேடுதல் வேட்டை !
இடையிடையே தர்மநெறி  தேர்வு நடத்தும்
பாதையோர பிதாமகர்கள் !
காலனின் கையாட்களாய்
சாலைகளெங்கும்  போக்குவரத்து
விதிமீறும் வாகனவோட்டிகள் !
தமிழில் பேசினால் அவமானமென்று
ஆங்கிலத்தில் மட்டுமே பதிலளிக்கும்
இளைய தலைமுறைகள் .....
எதையும் காதில் போட்டுக்கொள்ளாது
அலைபேசி பாடல்களில் மூழ்கியபடி
பேசா மானுட பிறவிபோல்
இருப்பிடத்தை தொலைத்தவாறே நகர்கிறது !
பணம் கொடுத்து எதையும் வாங்கும்
 நகரத்து பகட்டு நரக வாழ்வுதனில்
மனிதநேயம் மறைந்தே போனது !

.........கா.ந.கல்யாணசுந்தரம்.

வியாழன், ஏப்ரல் 09, 2015

சிறுவனின் வயிறும் ...

போஸ்டர் ஒட்டிய
சிறுவனின் வயிறும் ...
ஒட்டியிருந்தது பசியால் !

.....கா.ந.கல்யாணசுந்தரம்

செவ்வாய், ஜனவரி 20, 2015

கனவில் அந்த மூவரும்.....



ஊருக்குள் நுழையும்
தார்சாலையின்
ஓரத்தில்
சிதிலமடைந்த மண்டபம்...!
மண்டபத்தின் கூரையின்
நடுவில்
பெரியதாய் ஆலமரம்
தழைத்திருந்தது !

சிற்பவேலைப்பாடுகளுடன்
தூண்கள்...!
தரைப்பகுதி கற்கள்
களவாடப்பட்டு
குண்டும் குழியுமாய் இருந்தது !
சிலந்திக்கூட்டுக்குள்
சிக்கியிருந்த பூச்சிகள்
தவித்துக் கொண்டிருந்தன !

ஆடுமேயத்த சிறுவன்
ஒருவன்  
ஆட்டுக் குட்டியுடன்
அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தான்  
எதிரில் கட்டப்பட்டிருந்த
பஞ்சாயத்து நிழற்குடையின் கீழ்
அடுத்த பேருந்துக்காக
ஐந்தாறுபேர் நின்றிருந்தனர்!

கோடை காலத்தின்
வெப்பத்தை தாங்கமுடியாது  
அயர்ந்த உறக்கத்தில் இருந்த
அந்தச் சிறுவனின் கனவில்
மூவர் வந்து சென்றனர்.....
கண்விழித்த சிறுவனுக்கு
நினைவில் நின்றது....
கனவில் அந்த முவரும்
இவனுடன் அந்த மண்டபத்தில்
இளைப்பாறியதாய்......!
அவர்கள் கோவலன்,
கண்ணகியுடன் கவுந்தியடிகள்
என்பதுமட்டும்
அவனுக்கு தெரியவில்லை!

ஆனால் .......சரித்திர சான்றுகளின்
புனைவுகளில் என்றும்
இலயித்தவரே இருக்கின்றனர்
இன்றைய எழுத்தாளர்கள்!


............கா.ந.கல்யாணசுந்தரம் 

செவ்வாய், ஜனவரி 13, 2015

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...!



செந்நெல் தழைக்க இத்தரை மகிழும்
தைமுதல் நாளாம் பொங்கல் திருநாள் !
உழவர்தம் உளம்மகிழும் வேளாண் சிறக்க - தேசிய
நதிநீர் இணைப்பு வழி நலம் சேர்ப்போம் நாட்டில் !

........கா.ந.கல்யாணசுந்தரம் 

சனி, ஜனவரி 03, 2015

படிகட்டுகள் இல்லாத மலை...

படிகட்டுகள் இல்லாத மலை
மனிதன் ஏற முடியவில்லை...
மரங்கள் தழைத்திருக்கின்றன !

........கா.ந.கல்யாணசுந்தரம்.

வெள்ளி, ஜனவரி 02, 2015

தலைகுனியும் ....




வருத்தமுடன் தலைகுனியும்
துப்பாக்கிகள்.....
கோட்சேவுக்கு சிலை ?

.........கா.ந.கல்யாணசுந்தரம்.

வியாழன், ஜனவரி 01, 2015

புத்தாண்டே வருக.....


புத்தாண்டே வருக...
புதுவாழ்வு தருக
இனிதாய் மலரட்டும்
மனிதநேயம் மண்மீது
....கா.ந.கல்யாணசுந்தரம்.