கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

செவ்வாய், டிசம்பர் 24, 2019

ஒற்றை எறும்பாய் அந்த ஈரத்தரையில்

மௌனித்த இரவுத் திண்ணையில் 
யாரோ வாசிக்கிறான் புல்லாங்குழல்... 
கடலின் மொத்த அலைகளையும் 
வாரிச் சுருட்டி தனது விரல்நுனிகளில் 
வடியவைக்கிறான் இசையின் அலைகளை !
உனக்கும் எனக்குமான இடைவெளிகளை 
இட்டு நிரப்புகிறது இந்த இரவு நேரம் ...
அடர் பனிப்பொழிவில் உனது 
உருவம் மெல்லிய நீரோவியமாய்த் தெரிகிறது !
வியாபிக்கும் மௌனப் பெருவெளியில் 
இருவர் மட்டுமே அமர்ந்திருப்பது 
அந்த இசைக்கலைஞனுக்கு எப்படித் தெரியும் ?
எப்படியோ விடியலுக்குள் தெருக்களின் 
நீளம் குறையுமென்பது தெரிகிறது ...
தள்ளிப்போக எனக்கு விருப்பமில்லை ....
சாணம் மெழுகிய தெருவாசலில் 
அரிசிமாவுக் கோலத்தை ருசிக்கக் காத்திருக்கும் 
ஒற்றை எறும்பாய் அந்த ஈரத்தரையில் 
நான் மெல்ல ஊர்ந்துகொண்டிருப்பேன் 
உனது காலடித்தடம் ஸ்பரிசிக்கும் வரை !

...........கா.ந.கல்யாணசுந்தரம்

திங்கள், அக்டோபர் 28, 2019

சுஜித் கற்றுத்தரும் பாடங்கள்....


சுஜித் கற்றுத்தரும் பாடங்கள்....

1. பெற்றோர்கள் தமது குழந்தைகள் வளர்ப்பில் மிகக் கவனமாக இருக்கவேண்டும். அலட்சியப்போக்கு உயிருக்கே ஆபத்து என்பதை உணர்த்துகிறது.

2. குறிப்பாக பல்வேறு விபத்துகள், இயற்கை சீற்றங்கள் மேலும் பல்வேறு குற்றச்செயல்களை தடுக்க / எதிர்கொள்ள நம்மிடம் விழிப்புணர்வு இல்லை. மேலும் வருமுன் காத்தல் என்ற புரிதல் இல்லாமை.

3. அரசு திட்டமிடலில் தேவையற்ற திட்டங்களுக்கு பெரும் நிதி ஒதுக்கப்பட்டு வீணடிக்கப்படுகிறது. மனித உயிர் காத்தலுக்கு திட்டமிடலும் நிதி ஒதுக்கீடும் மிக மிக குறைவு.

4. துறைசார்ந்த பணியாளர்கள் தங்களது பணிகளை நேரத்தோடு செயல்படாததால் விதிமீறல்கள் எளிதாக தலைதூக்கி அவலங்கள் நடைபெறுகிறது

மக்கள் கண்மூடித்தனமாக அரசு அதிகாரிகளை இழிவு படுத்துவது தவறு. குழந்தை சுர்ஜித்தை மீட்க அமைச்சர்கள் அரசு அதிகாரிகள் எடுத்துவரும் முயற்சிகள் எதிர்பார்த்தலுக்கு மேலாகத்தான் இருக்கிறது.

உள்ளதை உள்ளபடி நேரடி ஒளிபரப்பு செய்யும் ஊடகங்களையும் குறை சொல்வதை தவிர்த்துப் பாராட்டுங்கள். மக்களுக்கு இதனால் அதிக அளவு விழிப்புணர்வு ஏற்படுகின்றது.

விமர்சனக் கோணங்கள் பல்வேறு வகைதான் இருக்கும். எனினும் இயற்கை சார்ந்த சவால்களை எதிர்கொள்வது என்பது சாதாரணமல்ல.

இடத்தின் சூழல் குழந்தையை மீட்டெடுக்க தாமதம் ஆகிறது என்பது கண்கூடு. கடினப் பாறை அதிநவீன எந்திரத்தாலும் தகர்ப்பது கடினமாக இருப்பது அரசு எதிர்கொள்ளும் சவால்.

இம்மாதிரி நேரங்களில் வீணான விமர்சனங்களை தவிருங்கள். எவரையும் திணறடிக்கும் / மகிழவைக்கும் திறன் இயற்கை சார்ந்த சூழலுக்கு உண்டு என்பதை மறுக்க முடியாது.

முயற்சி வெற்றியடையட்டும்.

........கா.ந.கல்யாணசுந்தரம் 

வியாழன், அக்டோபர் 17, 2019

வாழிய எம்மான் நீ...இவ்வையகத்தே !

ஆண்டுகள் பலவானாலும்
கண்ணதாசனே உன்னை மறப்பார்
இம்மண்ணில் யாருளர் ?
மாண்ட என் அன்னை மீண்டும் வரின்
ஒரு வரம் கேட்பேன் ....
தாய்ப்பாலோடு கண்ணதாசன்
வரிகளை எனக்குப் பிசைந்து
ஊட்டவேண்டுமென்று !
உனது நினைவு நாளில் எனது
எண்ணம் முழுதுமுன் வண்ண வரிகள் !
சற்று நினைவுகூருகிறேன்......
வாழிய எம்மான் நீ...இவ்வையகத்தே !

..............கா.ந.கல்யாணசுந்தரம்

" பூ மணம் கொணடவள் பால் மணம் கண்டாள்
பொங்கிடும் தாய்மையில் சேயுடன் நின்றாள்
மாமனைப் பாரடி கண்மணி என்றாள்
மருமகள் கண்கள் தன்னில் மாமன் தெய்வம் கண்டான் (மலர்களைப்போல் )"

" தாயின் பெருமை மறக்கின்றான்
தன்னலச் சேற்றில் விழுகின்றான்
பேய் போல் பணத்தைக் காக்கின்றான்
பெரியவர் தம்மைப் பகைக்கின்றான்
(ஒருவன் மனது ஒன்பதடா)"

" பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்
பாயும் மீன்களில் படகினைக் கண்டான்
எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்
எதனைக் கண்டான் பணம்தனைப் படைத்தான்
(மனிதன் மாறிவிட்டான்)"

" ஏழை மனதை மாளிகையாக்கி
இரவும் பகலும் காவியம் பாடி
நாளைப் பொழுதை இறைவனுக் களித்து
நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு!
உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு! (மயக்கமா )"

" தென்னை மரத் தோப்பாகத் தேவாரப் பாட்டாகப்
புன்னை மரம் பூச்சொரிய சின்னவளே நீ ஆடு!
கண்டாங்கி முன்னாட கன்னி மனம் பின்னாட
கண்டு கண்டு நானாட செண்டாக நீ ஆடு! (கட்டோடு)"

" கம்பன் கண்ட சீதை உந்தன் தாயல்லவா!
காளிதாசன் சகுந்தலை உன் சேயல்லவா!
அம்பிகாபதி அணைத்த அமராவதி-மங்கை அமராவதி
சென்ற பின்பு பாவலர்க்கு நீயே கதி! - என்றும் நீயே கதி! (கல்லெல்லாம் )"

" பறந்து செல்ல நினைத்து விட்டேன் எனக்கும் சிறகில்லையே
பழக வந்தேன் தழுவ வந்தேன் பறவை துணையில்லையே
எடுத்துச் சொல்ல மனமிருந்தும் வார்த்தை வரவில்லையே
என்னென்னவோ நினைவிருந்தும் நாணம் விடவில்லையே! (சிட்டு)"

" மானிட இனத்தை ஆட்டி வைப்பேன் – அவர்
மாண்டு விட்டால் அதைப் பாடி வைப்பேன் – நான்
நிரந்தரமானவன் அழிவதில்லை – எந்த
நிலையிலும் எனக்கு மரணமில்லை(ஒரு கோப்பையிலே ) "

........கண்ணதாசன்

tag

வானம் தொடும் வண்ணத்துப் பூச்சிகள்