கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

திங்கள், ஆகஸ்ட் 05, 2013

எப்போது கண்டெடுக்கும் இன்னொரு காந்தியை ?

அகமும் புறமும்
என்னவென்று அறியாமலே
கலிங்கத்து பரணிக்கு
உரை எழுதுபவர்கள் !
நெல்லிக்கனியின்
சுவையறியாது
அதியாமானின்
வள்ளல்தன்மைக்கு
மகுடம் சூட்டுபவர்கள் !
ஆறாம் அறிவை
அடகுவைத்துவிட்டு
ஏழாம் அறிவை அலசுபவர்கள் !
இவர்களெல்லாம் ....
வெளிச்சத்துக்கு விளக்கு
ஏற்றுபவர்கள் !
வெளிச்சப்பார்வையில்
இவர்களெல்லாம்
இருளின் சொந்தக்காரர்கள்  !
சமுதாயப் புத்தகத்தின்
முகவரியைக் கூட
படிக்கத்  தெரியாத
சுயநலவாத
கூட்டமைப்பின்
கொள்கைச்செம்மல்கள் !
வாக்கு வங்கிகளை
கொள்ளையடித்து ....
மக்களாட்சியின் மகிமைக்கு
மலர்வளையம் வைப்பவர்கள்!
சுதந்திர தினம் ஆண்டுதோறும்
கொடியேற்றத்தில் மட்டுமே
கொண்டாடப்படுகிறது!
மதம் பிடித்த யானைகளாய்
சமுதாய சீர்கேடுகளை
கட்டவிழ்த்துவிடுவோரை
இனம்கண்டும் ...
ஆர்த்தெழாத  மானுடம்
எப்போது கண்டெடுக்கும்
இன்னொரு காந்தியை ?

..........கா.ந.கல்யாணசுந்தரம்