கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

ஞாயிறு, செப்டம்பர் 18, 2016

நவயுக பெண்தான்..........

·        முன்னோர் வகுத்த 
     நெறிமுறையில் ஒரு
மரபின் கலாச்சாரம்

·        சுமைகளின் பகிர்வால்
ஒரு புரிதலின் உண்மை
பூத்துக் குலுங்கும்

·        உனது நிராகரிப்பு இருப்பின்
வக்கிரங்கள் அரங்கேறலாம்
கலந்துரையாடலே விடிவெள்ளி

·        பருவத்தின் பாரம்பரியம்
காதல் வயப்படுதல்
அது ஒருதலையாகவும் இருக்கலாம்

·        அன்போடு நிலைப்பாட்டை
எடுத்தியம்பு
இல்லையேல் காலம்தாழ்த்தாது
காவல்துறையை அணுகு

·        உன்னைப் பின்தொடர்பவர்கள்
எதற்காக என்பதறிவாய்
பாதுகாப்பு வளையத்துக்குள்
வாழக்  கற்றுக்கொள்

·        நவயுக பெண்தான்
ஒப்புக்கொள்கிறேன் ....
நண்பனை தேர்வுசெயும்முன்
ஆய்வுசெய் அவனது நட்புகளை !


........கா.ந.கல்யாணசுந்தரம், சென்னை.

திங்கள், செப்டம்பர் 12, 2016

" கா " விரித்த நீர் இப்போது.........


வங்கிகளை
நாட்டுடமையாக்கியதுபோல்
தேசியமயமாகட்டும்
இந்திய நதிகளும் அணைகளும் !
அரசியல் செய்வோர் அதிகாரமின்றி
தேசிய நதித்துறை
நடுநிலையோடு இயங்கட்டும் !
இந்திய மண்ணின் விளைபொருட்கள்
உலக மாந்தர் நல்வாழ்வின்
உணவுப் பொருட்கள் எனவறிந்து
நீரின்றி அமையாது உலகென்று
உணரும் நாள் எந்நாளோ ?
அணை தேக்கிய நீர்....
நதிநீர் வழிகளுக்கே
சொந்தமென அறிந்திடுவீர் !
" கா " விரித்த நீர் இப்போது
ஆற்றுக்குள் இல்லை....
அது கர்நாடகம் செல்ல
ஓர் மணல் வழிப் பாதையானது !
..........கா.ந.கல்யாணசுந்தரம்

ஞாயிறு, செப்டம்பர் 11, 2016

நவீனத்துவம் ஒரு நகர்தலோடு....
அந்த ஓவியத்துக்குள் 

என்னதான் இருக்கிறது ?
பின்நவீனத்துவ சிந்தனைகளில் 
பிறப்பெடுத்த வடிவமா ?
உதிர்ந்த இறகின் தூரிகையால் 
வரையப்பட்டதா ?
வண்ணங்களின் கூட்டுக் குடும்பமா ?
அப்பிய நிறங்களின் கலவைகளில்
மானுட வடிவங்கள் அம்மணமாய்
ஒரு கோணம் சித்தரித்தது !
பிறந்த மழலைக்கு பாலூட்டும்
அன்னையின் வடிவம் மறுகோணம் !
விரித்த கூந்தலொடு விசும்பும் பெண்ணின்
உருவமெங்கும் சிவப்புத் தழும்புகள்
மொத்தமாய் விசுவரூப தரிசனம்....
அத்தனையும் பின்னிப் பிணைந்திருக்கும்
நவீனத்துவம் ஒரு நகர்தலோடு....
வானரச் சேட்டைகளில்
விழிபிதுங்கும் மந்தியைப்போல்
அங்குமிங்கும் ஓடி அலைந்து
ஒதுக்கப்படுகிறேன்....அந்த
ஓவியக் கண்காட்சி வளாகத்தின்
மூலையில் ...
மனிதநேயமற்ற
ஒரு பிரளயத்தின் வாசம்
இப்போது எனது மூக்கருகில் !
...........கா.ந.கல்யாணசுந்தரம்