கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

செவ்வாய், மே 08, 2018

முகநூலில் முகிழ்ந்த ஹைக்கூ மலர்கள்... - மு.முருகேஷ்



முகநூலில் முகிழ்ந்த ஹைக்கூ மலர்கள்...
- மு.முருகேஷ்
************************************************************************
மகாகவி பாரதியின் அறிமுகக் கட்டுரை வழியே தமிழில் அறிமுகமான ஹைக்கூ கவிதைகள், ஒரு நூற்றாண்டினை நிறைவு செய்திருக்கும்
இனிய வேளைவிது.
தமிழ் ஹைக்கூவில் சமூகம் மற்றும் இயற்கை சார்ந்த புதுப்புது பாடுபொருள்களோடு
இன்னும் கூடுதல் அழகோடும் செறிவோடும் கவித்துவத்தோடும் படைக்க வேண்டிய
பொறுப்பு சமகால ஹைக்கூ கவிஞர்கள் முன்நிற்கும் சவால்.
அதே நேரத்தில் வளரும் புதிய கவிஞர்களை அடையாளங்கண்டு, அவர்களது ஹைக்கூ
கவிதை முயற்சிகளை வரவேற்பதும், தமிழ் ஹைக்கூவின் தொடர் வரலாற்றுத் தடத்தினைச்
சுட்டிக்காட்ட வேண்டியதும் நம் கடமையாகும்.
தன் போக்கில் எவ்வித ஆர்ப்பாட்டமுமில்லாமல் எழுதிக் கொண்டிருப்பதோடு, எழுதும்
இளைய கவிஞர்களையும் அரவணைத்துச் செல்லும் தாய்மனம் கொண்டவர் ஹைக்கூ
கவிஞர் கா.ந.கல்யாணசுந்தரம் அவர்கள். இதனை செய்யாறு நகரில் அவர் முன்நின்று
நடத்திய ‘ஹைக்கூ கவிதைத் திருவிழா’(2003)வில் பங்கேற்ற ஹைக்கூ கவிஞர்கள் அனைவரும்
நன்கு அறிவர்.
தமிழ் ஹைக்கூ இன்றைக்கு உலகு தழுவிய அளவில் ஒரு கவனிப்பையும் வரவேற்பையும்
பெற்றிருப்பதற்கு கவிஞர் கா.ந.க. அவர்களின் முன்னெடுப்பும் மிக முக்கிய காரணம் என்பது
பலரும் அறிந்திராத உண்மை.
முகநூல் வழியாக தமிழ் ஹைக்கூ வளர்ச்சிக்கு பலரும் தங்களது பங்களிப்புகளை
அளித்துவரும் நிலையில், கவிஞர் கா.ந.கல்யாணசுந்தரம் தொடங்கியிருக்கும் ‘உலகத்
தமிழ் ஹைக்கூ கவிஞர்கள் மன்றம்’ எனும் முகநூல் குழுமம் மிகுந்த வரவேற்பிற்கும் பாராட்டிற்கும் உரிய நல்முயற்சியாகும். பல்வேறு கனவுகளோடு தொடங்கியிருக்கும் இந்த முகநூல் குழுமத்தின்
முதல் செயல்பாடாக ‘மானுடமும் இயற்கையும்’ எனும் தலைப்பில் ஹைக்கூ எழுதுமாறு
தமிழ் ஹைக்கூ கவிஞர்களை அழைத்துள்ளார். இந்த கவியழைப்பனை உலகு தழுவிய ஹைக்கூ
கவிஞர்கள் ஏற்று, உற்சாகத்தோடு தங்கள் கவிதைகளை அனுப்பியிருக்கிறார்கள்.
இவற்றிலிருந்து சிறந்த ஹைக்கூவை தேர்ந்தெடுக்கும் பெரும் பொறுப்பை என் வசம் கவிஞர் கா.ந.க. ஒப்படைத்தார். இதுவரை பலமுறை கவிதைகளை நான் திரும்பத் திரும்ப வாசித்துவிட்டேன். எனது வாசிப்பின் ரசனையில் கீழ்க்கண்ட கவிதைகளைத் தேர்வு செய்துள்ளேன்.
நிறைய கவிதைகள் என்னை ஈர்த்துள்ளன. சில கவிதைகள் இன்னும் படம் பார்த்து கதை சொல்லும்
நிலையிலும், தலைப்பை அப்படியே கவிதைக்குள் சொல்லும் முயற்சியிலுமே முடங்கி நிற்கின்றன.
தமிழ் ஹைக்கூ கவிஞர்களே... முயன்றால் முடியும் உங்களால். இன்னும் உங்கள் பார்வையை
விசாலப்படுத்துங்கள். வேறுவேறு காட்சிப்புலத்தோடு கவிதைகளைத் தாருங்கள். நீங்கள் எழுதப்போகும் ஹைக்கூவை வாசித்துவிட்டுத்தான், நாளைய தமிழ் ஹைக்கூவை வழிநடத்தப்போகும் புதிய கவிஞன்
உதயமாகப் போகின்றான் என்கிற உத்வேகத்தோடு எழுதுங்கள்.
’உலகத் தமிழ் ஹைக்கூ கவிஞர்கள் மன்றம்’ நடத்திட போட்டி எண்:1-இல் முதல் மூன்று நிலைகளைப் பிடித்த கவிதைகள்:
_______________________________________________________________
1.
வடியும் பால்
பசி தீர்க்கவில்லை
வீட்டில் குழந்தை. - மதுரா
2.
பாலூறும் இரப்பர் மரம்
பாதியிலே இறக்கி வைக்கிறாள்
பால் குடித்த குழந்தையை. - ரசி குணா
3.
ரப்பர் மரம்
அழகாக தொங்குகிறது
மிளகுக் கொடி. - பிரிதிவிராஜ் லோஜி
சிறப்புச் சான்று பெறும் 7 கவிதைகள் :
_______________________________________
0
ரப்பர் மரம் பால் தருகிறது
பசியாறவில்லை தாய்
பாலூறவில்லை குழந்தைக்கு. - சோ.மீனாட்சிசுந்தரம்
0
பாலூறும் ரப்பர் மரம்
பிசினாய் கொட்டியது
உழைப்பாளர்களின் வியர்வை. - ச.கோபிநாத்
0
ரப்பர் மரக்காடுகள்
முழுவதும் நிறைத்தபடி
காய்ந்த இலைகள். - பாண்டியராஜ்
0
பால் சேகரிக்கும் பெண்
ரப்பர் மரத்தடியில்
பாலுக்கு அழும் குழந்தை. - இளவல் ஹரிஹரன்
0
ரப்பர் தோட்டம்
வடிந்து கொண்டிருக்கிறது
தொழிலாளியின் கண்ணீர். - சாரதா க.சந்தோஷ்
0
இரத்தம்தான்
இவளிடமும் இரப்பர் மரத்திலும்...
பாலாக..! - செண்பக ஜெகதீசன்
0
பசியில் குழந்தை
ஞாபகத்தில் கனக்கும் மடி
பால் பீய்ச்சும் ரப்பர் மரம். - கா.அமீர்ஜான்

இப்போட்டியில் பங்கேற்ற - பாராட்டும் பரிசும் பெறுகிற கவிஞர்களுக்கு
என் தோழமை கனிந்த
வாழ்த்துகள். இப்பணியை மிகுந்த ஈட்பாட்டோடு
செய்யும் எங்கள் அன்புக் கவிஞர்
கா.ந.கல்யாணசுந்தரம் அவர்களுக்கு
எனது மனம் நெகிழ்ந்த மகிழ்வையும் நன்றியையும் பகிர்கின்றேன்.
08.05.2018
---------------------------------------------------------------------------------------------- மு.முருகேஷ்
வந்தவாசி - 604408
மின்னஞ்சல்; haiku.mumu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக