கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

திங்கள், ஏப்ரல் 16, 2018

மனித உணர்வுகளின் வெளிப்பாடாக அமையவேண்டும் ....தமிழ் ஐக்கூ கவிதைகள் !

மனித உணர்வுகளின் வெளிப்பாடாக அமையவேண்டும் ....தமிழ் ஐக்கூ கவிதைகள் !
********************************************************************
தமிழ் ஐக்கூ கவிதைகள் ஒரு நூற்றாண்டைக் கடந்து வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது.
கவிதைகளின் பரிணாம வளர்ச்சியில் துளிப்பாக்கள் (ஐக்கூ கவிதைகள் ) தமிழ் கவிதை உலகில் இனிய தடம் பதித்து வருகிறது என்பதில் ஐயமில்லை.
ஒரு கவிதை சமுதாய மாற்றத்தைக் கொண்டுவருமேயானால் அது ஜீவனுள்ள வரிகளையும் சொற்களையும் தன்னகத்தே கொண்டு ஒரு இயக்கத்தையே நடத்துகிறது என்பது உண்மை.
திரையுலகில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கவியரசு கண்ணதாசன், கவிஞர் வாலி போன்றோரின் பாடல்வரிகளில் உயிரோட்டமான சொற்களும் வரிகளுமே காலம் கடந்து நிற்கும் தன்மைக்கு அடிப்படை ஆகும்.
எளிய தமிழ் சொற்களால் கோடானுகோடி மக்களின் இதயத்தை கொள்ளையடித்த கவிஞர் கண்ணதாசன் அவர்களின் பாடல் வரிகளில் இந்த சமுதாய முன்னேற்றத்துக்கான விதைகள் தூவப்பட்டன.
இலக்கிய உலகில் பக்தி இலக்கியம் தொட்டு, சங்க இலக்கியம் மற்றும் சங்கம் மருவிய காலம் வரை அலைகடலாய் தமிழ் இலக்கிய வரலாறு பார்போற்ற ஒளிவீசிக் கொண்டிருக்கிறது.
இந்த வரிசையில் காலம் கடந்து நிற்கும், வாழ்ந்துகொண்டிருக்கும் ஐக்கூ (துளிப்பாக்கள் ) கவிதைகள் நூற்றுக் கணக்கான கவிஞர்களின் விரல்களில் பிறப்பெடுத்த பெருமைக்கு உரியதாகும்.
இந்த வரிசையில் தடம்பதித்த/தடம் பதித்து வரும் ஐக்கூ கவிஞர்களின் ஹைக்கூ கவிதைகள் தினம் தொடராக எனது பார்வையில் வெளியிட விரும்புகிறேன்.
இந்த ஐக்கூ கவிதைகள் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவை. விளக்கம் கொடுத்து புரிய வைக்க வேண்டும் எனும் கட்டாயம் இல்லை. பன்முக நோக்கில் பொருள் கொள்ளும் ஆற்றல் மிக்க ஐக்கூ கவிஞர்கள் மத்தியில் நான் விளக்கம் கொடுக்க
விரும்பவில்லை... !
இந்த ஐக்கூ கவிதைகளை (துளிப்பாக்கள்) உள்வாங்கி கவிதையின்பம் பெற அன்போடு அழைக்கிறேன்...!
தற்போது ஐக்கூ எழுதும் இளைய தலைமுறைக்கும் இந்த ஐக்கூ கவிதைகள் எடுத்துக் காட்டாய் விளங்கும் என நம்புகிறேன்.
காலத்தை வெல்லும் தமிழ் ஐக்கூ கவிதைகள்....தொடர் ..1
*****************************************************
1. துணிகளில் தெரிவதில்லை
நெசவாளனின்
கருத்த விரல்கள்
......ஏகாதேசி
2. பசித்தழுகிறது குழந்தை
ரப்பர் மரத்தில் பால் வெட்டியபடி
வற்றிய மார்போடு அம்மா
.....ஏகாதேசி
3. சருகு பொறுக்குவதில்
சரியாகிறது நேரம்
குளிர் காய்வது எப்போது ?
.....பல்லவி குமார்
4. தீக்குச்சி இறந்தது
தீபத்தில்
அசைந்தாடும் உயிர்
......பழனி இளங்கம்பன்
5. அட...குடங்களுக்குக் கூட
சொட்டு மருந்து கொடுக்கிறதே...
நகரிய தெருக் குழாய்
......முகவை முனீஸ்
6. இருண்ட கிராமத்தின் வழியே
இரக்கமின்றி செல்கின்றன
நகரத்திற்கு மின்கம்பிகள்
......நாவம்மா முருகன்
7. பிச்சையெடுத்தான் சிறுவன்
பசி தீர்ந்தது
குடிகார அப்பாவுக்கு
.....நாவம்மா முருகன்
8. சங்கு ஊதியும்
எழுந்திருக்கவில்லை
ஆலைத் தொழிலாளி
.....சீனு தமிழ்மணி
9. இருட்டில் அமர்ந்து
மௌனத்தை தின்னும்
அணைந்த மெழுகுவர்த்தி
.....மு.முருகேஷ்
10. ஏற்றத் தாழ்விலும்
இணைந்த இயக்கம்
விரல்கள்
......கா.ந.கல்யாணசுந்தரம்
....................நாளை தொடரும்.............
(நன்றி: நீங்கள் கேட்ட ஐக்கூ தொகுப்பு நூல் - ஆண்டு 2000)

3 கருத்துகள்: