கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

திங்கள், பிப்ரவரி 25, 2013

குறையாத பொக்கிஷங்களாய் !










பனி படர்ந்த புல்வெளி
வெண்மேகம் அணைத்த
மலைமுகடுகள்
நீர் நிறைந்த பரந்த கிராமத்து எரி
வெண்ணிற கொக்குகள்
கூட்டமாய் பறந்து அமரும்
நாற்றங்கால் வயல்கள்
ஒற்றையடிப்பாதையில்
கால்நடைகளின் அணிவகுப்பு
தென்றல் தாலாட்டும்
தென்னை மரங்கள்
மாந்தோப்புக்குள் இசைக்கும்
இளம் குயில்கள்
அருவி கொட்டுதலின் 
சாரல் துளிகள் 
மாலை நேரத்து ஏரிக்கரையில் 
நிழலோவியமாய் 
வீடுதிரும்பும் தொழிலாளிகள் 
இன்னும் எத்தனை எத்தனையோ 
நெஞ்சில் இன்னும் 
வரைபடமாய் எனது ....
கிராமத்து வாழ்க்கையின் 
கையிருப்புகள் !
பிறரிடம் பகிர்ந்தும் 
குறையாத பொக்கிஷங்களாய் !
......கா.ந.கல்யாணசுந்தரம் 

புதன், பிப்ரவரி 20, 2013

பாவேந்தர் பாரதிதாசன் பாடல்கள்










பாவேந்தர் பாரதிதாசன் பாடல்கள்

தமிழ்க் காதல்

கமலம் அடுக்கிய செவ்விதழால் - மலர்க்
காட்டினில் வண்டின் இசைவளத்தால்
கமழ்தரு தென்றல் சிலிர் சிலிர்ப்பால் - கருங்
கண்மலரால் முல்லை வெண்ணகைப்பால் - மயில்
அமையும் அன்னங்களின் மென்னடையால் - மயில்
ஆட்டத்தினால் தளிர் ஊட்டத்தினால்
சமையும் ஒருத்தி - அப் பூஞ்சோலை எனைத்
தன் வசம் ஆக்கிவிட்டாள் ஒருநாள்.

சோலை அணங்கொடு திண்ணையிலே - நான்
தோளினை ஊன்றி இருக்கையிலே
சேலை நிகர்த்த விழியுடையாள் - என்றன்
செந்தமிழ்ப் பத்தினி வந்துவிட்டாள்!
சோலை யெலாம் ஒளி வானமெலாம் - நல்ல
தோகையர் கூட்டமெலாம் அளிக்கும்
கோல இன்பத்தை யென் உள்ளத்திலே - வந்து
கொட்டி விட்டாள் எனைத் தொட்டிழுத்தாள்!

மென்காற்றும் வன்காற்றும்

அண்டங்கள் கோடி கோடி அனைத்தையும் தன்ன கத்தே
கொண்ட ஓர் பெரும் புறத்தில் கூத்திடு கின்ற காற்றே!
திண்குன்றைத் தூள் தூளாகச் செய்யினும் செய்வாய் நீஓர்
துண்துளி அனிச்சம் பூவும் நோகாது நுழைந்தும் செல்வாய்! 14

தென்னாடுபெற்ற செல்வம்

உன்னிடம் அமைந் திருக்கும் உண்மையின் விரிவில், மக்கள்
சின்னதோர் பகுதி யேனும் தெரிந்தார்கள் இல்லை; யேனும்
தென்னாடு பெற்ற செல்வத் தென்றலே உன்இன்பத்தைத்
தென்னாட்டுக் கல்லால் வேறே எந்நாட்டில் தெரியச் செய்தாய்? 15

தென்றலின் நலம்
குளிர்நறுஞ் சந்தனஞ் சார் பொதிகையில் குளிர்ந்தும், ஆங்கே
ஒளிர்நறு மலரின் ஊடே மணத்தினை உண்டும், வண்டின்
கிளர்நறும் பண்ணில் நல்ல கேள்வியை அடைந்தும் நாளும்,
வளர்கின்றாய் தென்ற லேஉன் வரவினை வாழ்த்தா ருண்டா? 16

அசைவின் பயன்

உன்அரும் உருவம் காணேன் ஆயினும் உன்றன் ஒவ்வோர்
சின்னநல் அசைவும் என்னைச் சிலிர்த்திடச் செய்யும்! பெற்ற
அன்னையைக் கண்டோ ர், அன்னை அன்பினைக் கண்ணிற் காணார்,
என்னினும் உயிர்க் கூட்டத்தை இணைத்திடல் அன்பே அன்றோ? 17

தென்றலின் குறும்பு

உலைத்தீயை ஊது கின்றாய்; உலைத்தீயில் உருகும் கொல்லன்
மலைத்தோளில் உனது தோளும், மார்பினில் உன்பூ மார்பும்
சலிக்காது தழுவத் தந்து குளிர்ச்சியைத் தருவாய்! பெண்கள்
விலக்காத உடையை நீ போய் விலக்கினும், விலக்கார் உன்னை! 18

குழந்தையும் தென்றலும்

இழந்திட்டால் உயிர்வா ழாத என்னாசை மலர்மு கத்துக்
குழந்தையின் நெற்றி மீது குழலினை அசைப்பாய்; அன்பின்
கொழுந்தென்று நினைத்துக், கண்ணிற் குளிர்செய்து, மேனியெங்கும்
வழிந்தோடிக், கிலு கிலுப்பை தன்னையும் அசைப்பாய் வாழி! 19

தென்றல் இன்பம்

இருந்தஓர் மணமும், மிக்க இனியதோர் குளிரும், கொண்டு
விருந்தாய்நீ அடையுந் தோறும் கோடையின் வெப்பத் திற்கு
மருந்தாகி அயர்வி னுக்கு மாற்றாகிப் பின்னர், வானிற்
பருந்தாகி, இளங்கி ளைமேற் பறந்தோடிப் பாடு கின்றாய்! 20


தென்றலின் பயன்

எழுதிக்கொண் டிருந்தேன்; அங்கே எழுதிய தாளும் கண்டாய்;
வழியோடு வந்த நீயோ வழக்கம்போல் இன்பம் தந்தாய்;
' எழுதிய தாளை நீ ஏன் கிளப்பினை' என்று கேட்டேன்,
புழுதியைத் துடைத்தேன் என்றாய்; மீண்டும் நீ புணர்ந்தாய் என்னை! 21

தென்றற்கு நன்றி

கழுகொடு, நெடிய தென்னை, கமழ்கின்ற சந்த னங்கள்,
சமைகின்ற பொதிகை அன்னை, உனைத்தந்தாள் தமிழைத் தந்தாள்
தமிழ் எனக்கு அகத்தும், தக்கதென்றல்நீ புறத்தும், இன்பம்
அமைவுறச் செய்வ தைநான் கனவிலும் மறவேன் அன்றோ? 22

தென்றலின் விளையாட்டு

களச்சிறுதும்பி பெற்ற கண்ணாடிச் சிறகில் மின்னித்,
துளிச்சிறு மலர் இதழ்மேல் கூத்தாடித் துளிதேன் சிந்தி,
வெளிச்சிறு பிள்ளை யாடும் பந்தோடு விளையாடிப், போய்க்
கிளிச்சிற காடை பற்றிக் கிழிக்கின்றாய் தென்ற லேநீ! 23
 
 
.........பாவேந்தர் பாரதிதாசன் .


வெள்ளி, பிப்ரவரி 08, 2013

யாருக்கும் தெரியவில்லை

மாவட்ட கல்வி அதிகாரி
வருகையால் பரபரப்பானது
உயர்நிலைப்பள்ளி....
சீருடை மாணவர்களின்
அணிவகுப்பில் மகிழ்வெய்திய
அதிகாரி ......
ஒரு மூடிவெயத்த அறையைக்
காண்பித்து .....
என்னவென்று வினவ ...
முப்பது ஆண்டுகளாய்
பழுதான மர பெஞ்சுகள்
அடுக்கிய அறை
என பதில் வந்தது!
அறையைத் திறந்து ...
பத்தாம் வகுப்பு
பென்ச்சுகளைத் தேடினார்
கல்வி அதிகாரி!
உடைந்திருந்த அந்த
மர இருக்கையில் அமர்ந்தார் !
யாருக்கும் தெரியவில்லை
அவர் இந்த இருக்கையில்
அமர்ந்து இந்த பள்ளியில்
படித்தவர் என்பதை!

...கா.ந.கல்யாணசுந்தரம்

கடிகார முள்

அம்மா அலறியபடி தேடினாள்...
" எம் புள்ளைய காலைல இருந்து
காணலையே " என புலம்பியவாறு !
" வொம் பையன் மூனாவதூட்டு
புள்ள பார்வதியோட கூட்டாளி
போட்டுகினு கொல்லப்புறம் போனது"
இது பக்கத்துவீட்டு பொன்னம்மாளின்
அங்கலாய்ப்பு!
ஒரு பனைவோலை கடிகாரம்
செய்து பார்வதிக்கு கட்டிவிட்ட
நட்பின் கரங்கள் அங்கு .....
தேடிக்கொண்டிருந்தது
வேலமரத்து முட்களுக்காக....
சரியான கடிகார முள்
கிடைத்துவிட்ட பெருமிதத்தில்
அந்த எட்டு வயது சிறுவன்
தோழியுடன் நடந்தான் ......
அவன் வீடு இருந்த அந்த 
கிராமத்து தெரு முனைக்கு...
காலத்தை வென்ற
ஒரு கர்மவீரனாக !

.........கா.ந.கல்யாணசுந்தரம்.