கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

சனி, ஜூலை 09, 2016

தார்ச்சாலைப் பூக்கள்

தெருவிளக்கு உமிழும் 
வெளிச்ச எச்சிலில் 
இரவு  தன்னை 
கரைத்துக்கொண்டு
விடியலின் வாழ்வுக்கு 
வழிவிடுகிறது 

தார்ச்சாலைப் பூக்கள் 
வியர்வைத்துளிகளின் 
வாசம் பரப்பி 
ஒரு பரபரப்பில் 
தன்னை சிறைவைக்க 
தயாரானது 

எச்சங்களின் வரவால் 
வயிறு புடைத்த 
குப்பைத் தொட்டிகள் 
அட்டை பொறுக்கும் 
சிறுவர்களின் மறுவாழ்வில் 
அங்கம் கொண்டது   

நான்கு சக்கரம் 
இரண்டு சக்கரம் 
மூன்று சக்கரம் 
நாளெல்லாம் உருண்டு 
மானுடத் திசுக்களை 
சுமந்தவாறு 
ஊர்வலத்தை நடத்தின  

வளமிக்க 
விளைநிலங்களை 
மறந்த மனங்கள் 
விடுதலை அறியா 
விருப்பினர்களாக
தூண்டில்  புழுவானார்கள் 

நெரிசல் மிக்க 
நகரத்து விண்வெளியில் 
பறக்க மறந்த
பறவைகள் மட்டும் 
கிராமத்து பாதைகளை 
தேர்ந்தெடுத்தன 

.........கா.ந.கல்யாணசுந்தரம் 

2 கருத்துகள்: