கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

செவ்வாய், மே 16, 2017

புத்தகம் வேண்டுவோர் தொடர்பு கொள்ளவும்:

1999 ல் இருமொழிகளில் (தமிழ்-ஆங்கிலம் ) வெளியான எனது " மனிதநேயத் துளிகள் " ஹைக்கூ கவிதைகள் இப்போது நம்மொழிப் பதிப்பகம் இரண்டாம் பதிப்பாக (தமிழ் மட்டும் ) சிறந்த வடிவமைப்பில் வெளியிட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் பகிர்ந்துகொள்கிறேன். நன்றி.
கா.ந.கல்யாணசுந்தரம்
புத்தகம் வேண்டுவோர் தொடர்பு கொள்ளவும்: 
9443259288
புத்தக விலை ரூ. 80/-
(அஞ்சல் வழி பெற ரூ. 100/-)
வங்கிக் கணக்கு:
KALYANASUNDARAM N
UNION BANK OF INDIA
VELACHERY BRANCH
A/C NO: 579002030000004
IFSC UBIN0557901

சனி, மே 13, 2017

வைகையாற்று நாகரீகம் !




வைகையாற்று நாகரீகம் !
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
இந்தியாவின் தொன்மையைப் புரட்டிப்போட்டது
தமிழனின் வைகை ஆற்று நாகரீகம் !
ஆம்....கீழடி அகழ்வாராய்ச்சி
ஐந்தாயிரத்து எட்டுநூறு பாரம்பரிய கலாச்சார
பொருட்களின் கண்டுபிடிப்பு !
சங்ககாலத்து பரிபாடல் மதுரைக்காஞ்சியின்
தொன்மைப் பொருட்களின் களஞ்சியம் !
பட்டினப்பாலையில் உலாவரும் உறைகேணிகளும்
இருந்திட்ட தடயங்களின் இருப்பிடங்கள் !
தமிழ்ப் பிராமி எழுத்துகளால் ஆன மண் ஓடுகள்...
சிந்துசமவெளி ஹரப்பா நாகரீகத்துக்கு இணையான
தொல்லியல் நாகரீகமாய் விரிகிறது தமிழனின்
மண் சார்ந்த உயரிய நாகரீகம் !

பாதியிலே மத்திய அரசு நிறுத்தியதன் விளைவில்
முடங்கிப்போனது தமிழனின் தொல்லியல் வரலாறு !
மதம் சாரா தமிழனின் வாழ்வு முறை
முத்தாய்ப்பாய் விளங்குவதால் மதவாத அரசியல்தான்
முட்டுக்கட்டைப் போட்டதோ ?
நெஞ்சுரமில்லா தமிழக அரசியலார் இருப்பிடத்தில்
தொல்லியலார் அமர்நாத்தின் பணியிடை மாற்றம்
நிகழ்ந்ததில் வியப்பென்ன ?
பழந்தமிழர் வரலாற்று இலக்கிய வாழ்வு
கிமு இரண்டாம் நூற்றாண்டை முந்தியது என
வைகை நதி நாகரீகம் இயம்புகிறது !
அகழ்வாராய்ச்சி அரை குறையாய் நின்றாலும்
மூடி மறைக்க முடியாது தமிழர்தம் தொன்மையை !


............கா.ந.கல்யாணசுந்தரம்  

வெள்ளி, மே 05, 2017

அறிவோம்...மூவரியில் புறநானூறு- 5 **************************************************

அறிவோம்...மூவரியில் புறநானூறு- 5
************************************************************
• மூவேந்தர் சூழ்ச்சியில் மாண்டான்
 பறம்புமலை வேந்தன் 
வள்ளல் பாரி மன்னன்
• அந்த நிலாக்காலத்தில்
இழக்கவில்லை பறம்புமலையும் பாசமிகு தந்தையையும்

• இந்த நிலாக்கால வெண்ணொளியில்
இழந்து வாடுகிறோம்
 எங்களது குன்றுடன் தந்தையையும்
• கபிலரின் அரவணைப்பில்
தந்தையை இழந்த
பாரிமகளிர் அங்கவை சங்கவை
• கபிலரை இழந்த பாரிமகளிருக்கு
நல்லறமோடு இல்லறம் காட்டினார்
 ஔவை மூதாட்டி
..........கா.ந.கல்யாணசுந்தரம்
அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவில்
எந்தையும் உடையேம்; எம்குன்றும் பிறர்கொளார்
இற்றைத் திங்கள் இவ்வெண் ணிலவில்
வென்றெறி முரசின் வேந்தர்எம்
குன்றும் கொண்டார்யாம் எந்தையும் இலமே !
(புறநானூறு – 112) .......... பாரி மகளிர் அங்கவை சங்கவை

அறிவோம்...மூவரியில் புறநானூறு- 4

அறிவோம்...மூவரியில் புறநானூறு- 4
************************************************************
பிறப்புநிலை காணாது நற்கல்வி கற்றோர் சிறப்படைவர்... 
அன்னை முதல் அரசன் வரை !
.......கா.ந.கல்யாணசுந்தரம்
உற்றுழி யுதவியு முறுபொருள் கொடுத்தும்
பிற்றைநிலை முனியாது கற்ற னன்றே
பிறப்போ ரன்ன வுடன்வயிற் றுள்ளும்
சிறப்பின் பாலாற் றாயுமனந் திரியும்
ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்
மூத்தோன் வருக வென்னா தவருள்
ஆறிவுடை யோனா றரசுஞ் செல்லும்
வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளும்
கீழ்ப்பா லொருவன் கற்பின்
மேற்பா லொருவனு மவன் கட்படுமே.
(புறநானூறு - 183...........
பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்)


புதன், மே 03, 2017

அறிவோம்...மூவரியில் புறநானூறு – 3

அறிவோம்...மூவரியில் புறநானூறு – 3
******************************************************
* போரில் தோற்று சங்கிலியால்
பிணைத்து சிறைப்படுத்தப்பட்டான்
செங்கணான் நாட்டில் சேரமான்
* யாசித்து பருகும் நீர்வேண்டேன்
தன்மானத்தோடு இறந்தான் சிறையில் ...
சேரமான் கணைக்கால் இரும்பொறை !
* இறந்து பிறந்த குழந்தையோ
 தசைப் பிண்டமோ புதைக்கப்படும்
வீரமிகு வாளால் கீறி !
..........கா.ந.கல்யாணசுந்தரம்
குழவி இறப்பினும், ஊன்தடி பிறப்பினும்,
ஆள் அன்று என்று வாளின் தப்பார்
தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய
கேளல் கேளிர் வேளாண் சிறுபதம்,
மதுகை இன்றி, வயிற்றுத் தீத் தணியத்,
தாம் இரந்து உண்ணும் அளவை
ஈன்ம ரோ, இவ் உலகத் தானே?
(புறநானூறு-74)
பாடியவர்: சேரமான் கணைக்கா லிரும்பொறை

அறிவோம் மூவரியில் புறநானூறு - 2

அறிவோம் மூவரியில் புறநானூறு - 2
****************************************************
புலிபோகிய கல்குகையே தன்வயிறு
பெருமை நவிலும் வீரத்தாய்...
போர்க்களம் தோன்றும் வீரமகன் !
.........கா.ந.கல்யாணசுந்தரம்
(புறநானூறு: 86)
(சிற்றி னற்றூண் பற்றி நின்மகன்
யாண்டுள னோவென வினவுதி யென்மகன்
யாண்டுள னாயினு மறியே னோரும்
புலிசேர்ந்து போகிய கல்லளை போல
ஈன்ற வயிறோ விதுவே
தோன்றுவன் மாதோ போர்க்களத் தானே !
.............காவற்பெண்டு )

அறிவோம்...மூவரியில் புறநானூறு – 1



அறிவோம்...மூவரியில் புறநானூறு – 1
*******************************************************

முரசுகட்டிலில் புலவன் மோசி கீரனார்
கவரிகொண்டு வீசினான்.....
மன்னன் பெருஞ்சேரல் இரும்பொறை !

..........கா.ந.கல்யாணசுந்தரம்

" மாசு அற விசித்த வார்புறு வள்பின்
மை படு மருங்குல் பொலிய, மஞ்ஞை
ஒலி நெடும் பீலி ஒண் பொறி மணித் தார்,
பொலங் குழை உழிஞையொடு, பொலியச் சூட்டி,
குருதி வேட்கை உரு கெழு முரசம்
 மண்ணி வாரா அளவை, எண்ணெய்
நுரை முகந்தன்ன மென் பூஞ் சேக்கை
அறியாது ஏறிய என்னைத் தெறுவர,
இரு பாற்படுக்கும் நின் வாள் வாய் ஒழித்ததை
அதூஉம் சாலும், நல் தமிழ் முழுது அறிதல்;
 அதனொடும் அமையாது, அணுக வந்து, நின்
மதனுடை முழவுத்தோள் ஓச்சி, தண்ணென
வீசியோயே; வியலிடம் கமழ,
இவண் இசை உடையோர்க்கு அல்லது, அவணது
உயர் நிலை உலகத்து உறையுள் இன்மை
 விளங்கக் கேட்ட மாறுகொல்
வலம் படு குருசில்! நீ ஈங்கு இது செயலே?"

(புறநானூறு - 50) .......மோசி கீரனார்