கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

புதன், மார்ச் 19, 2014

தமிழர்தம் நெஞ்சமெல்லாம்.........



தமிழர்தம் வாழ்வினை சிற்றுளியால்
மனிதநேயமுடன் சிற்பங்களில்
அள்ளித் தெளித்தான் பல்லவன் !
பகலவன் உள்ளளவும் பார்போற்றும்
மாமல்லை பறைசாற்றும்
கலைமாந்தர் நுண்ணறிவை !
வனப்புமிகு சிலைகள் எல்லாம்
உயிர்பெற்று வாராதோ... என்றே
ஏங்கிடும் தமிழர்தம் நெஞ்சமெல்லாம்
தவிக்கிறது ........
உயிர்கொடுத்தேனும் காப்பாற்றவேண்டும்
மாமல்லபுரத்து எழில்மிகு சிற்பங்களை....
கடலரிப்பின்  பிடியிலிருந்து !

........கா.ந.கல்யாணசுந்தரம் 

திங்கள், பிப்ரவரி 24, 2014

ஏங்கிடும் புத்தகங்கள்!

 @ என்னை புரட்டிப் பார்ப்பதைவிட
 படித்துப்பாருங்கள்....
ஏங்கிடும் புத்தகங்கள்!

@ வீட்டின் அழகு கூட்ட
அலங்காரப் பொருளானேன்...
படிக்கப்படாத புத்தகங்கள் !

@ என்னுள் ஒரு மயிலிறகு
காலம் கடந்தும் சுமக்கிறது  ...
வசந்த காலங்களை !

@ உங்களின் நினைவுகளில்
வாழாவிடினும் உணவானேன்...
கரையான்களுக்கு !

@ எப்படியோ அறிவொளி
ஏற்றி மகிழ்ந்தேன்
கிழிந்த நிலை புத்தகங்கள் !

.........கா.ந.கல்யாணசுந்தரம்.


வெள்ளி, பிப்ரவரி 21, 2014

அம்மா எனும் சொல் அற்புதமானது ...


வணிகக்கல்வி வாழ்வினை உயர்த்தும்
கல்வியில் வணிகம் மனிதத்தை வீழ்த்தும்
தாய்மொழிக் கல்வி தரத்தினை பெருக்கும்
அயல்மொழி கற்றிட அடித்தளம் அமைக்கும்

செம்மொழி தமிழின் இலக்கிய மாண்பு
சிந்தனை வளத்தின் இயற்கை ஊற்று
புலமை பெற்றிட்ட முன்னோரெல்லாம்
பன்மொழி பயின்று மேதைகளானார்

ஆங்கிலம் பயிலும் அரும்புகளிடத்து
அம்மா எனும் சொல் அற்புதமானது
அளவுக்கு மீறிய புத்தக சுமையில்
அமுத மொழியோ புதைந்து போனது

உலகின் தொன்மை தமிழில் உண்டு
உண்மை இதுவென அனைவரும் அறிவர்
பெற்றோர் நாளும் தமிழினை பகன்றால்
புதிய தலைமுறை அணியும் மகுடம்

.................கா.ந.கல்யாணசுந்தரம்.

ஞாயிறு, பிப்ரவரி 16, 2014

நெஞ்சம் நிறையும்



இல்லையென்று  சொல்லாமல் 
ஒரு மலரினைக் கொடு 
நெஞ்சம் நிறையும் 
......கா.ந.கல்யாணசுந்தரம் 

சனி, நவம்பர் 02, 2013

புத்தாடை இனிப்போடு பட்டாசு வெடியோடு மனமகிழ் தீபவொளி மனையெங்கும் ஒளிவீச தீமை, வறுமை நிலமதில் எந்நாளும் வாராது ... மனிதம் தழைக்க கொண்டாடுவோம் இனிதாக தீபவொளித் திருநாளை! நல்வாழ்த்துக்கள் என்றென்றும்..... அன்பன், கா.ந.கல்யாணசுந்தரம்

ஞாயிறு, செப்டம்பர் 22, 2013

தளிர்களின் நிழல்

உதிரும் சருகுகளின்
பாதையில் தெளிவாய்...
தளிர்களின் நிழல் !

...........கா.ந.கல்யாணசுந்தரம்

வெள்ளி, செப்டம்பர் 20, 2013

புத்தனின் போதிமர நிழல்













உனது கனவுகளின்
அடித்தளங்கள்
என்னால் உருவாக்கப்படுகின்றன
கண்களை மூடி
எண்ணங்களை ஒருமுகப்படுத்து....
நெற்றிப் பொட்டில்
வண்ண வண்ண கலவைகளின்
வடிவமைப்பில்
ஒரு பூங்கா உருவாவதை
உன்னால் உணரமுடியும் !
கனவுக்குள் ஒரு கனவை
உருவாக்கி ஆளுமைப்படுத்த
ஒரு கனவுத் தொழிற்சாலை
எனக்கு தேவைப்படுகிறது.....
சிந்தனை முதலீடுகளில்
நேரம் தொலைந்தாலும்
சிதைந்த நினைவுகளை
செம்மைப்படுத்த முயல்கிறேன்!
கனவுகளில் மட்டும்
தொடரும் என் நினைவுகளை
நிகழ்கால வாழ்க்கையிலும்
மனதில் கொள்!
அறிமுகமில்லா இந்த
இருவரின் வாழ்க்கையில்
ஒரு அர்த்தமுள்ள
எதிர்காலம் உருவாகட்டும்!
கண்களைத் திற
உன்னைச் சுற்றி புத்தனின்
போதிமர நிழல்
பரவிக்கிடக்கிறது....
ஆனால் சூரியன் மட்டும்
இங்கு உதிக்கவில்லை !

.............கா.ந.கல்யாணசுந்தரம்

திங்கள், செப்டம்பர் 09, 2013

அன்பின் வழியது உயிர்நிலைதான் என்றாலும்
ஆழ்கடலின் நங்கூரமாய் மனது !
இயல்பின் வெளிப்பாடாய் இயக்கம் அமைந்தாலும்
ஈன்ற அன்னைக்கு ஈடில்லை உலகில் !
உண்மை ஒளிரும் எப்போதும் என்றாலும்
ஊமை மொழி அறிவது எக்கணம்?
எண்  சாண்  உடலுக்கு சிரசே பிரதானம்
ஏற்றமிகு வாழ்விற்கு பணமே அரியாசனம்
ஐம்பொன் சிலைக்கு பாலாபிஷேகம்
ஒரு ஏழைச் சிறுமிக்கு பாலியல் வன்மம்
ஓடி ஒளிந்த தமிழின ஈழம்
ஔடதமாய் எந்நாளில் கிட்டும்?

......கா.ந.கல்யாணசுந்தரம் .

வளம் தரும் விநாயகர் சதுர்த்தி விரதம்



வளம் தரும் விநாயகர் சதுர்த்தி விரதம்





விநாயகர் சதுர்த்தி விரதத்தை ஒரு கொண்டாட்டமாகவே நாம் பாவிக்கலாம். விநாயகர் மிகவும் எளிமையான கடவுள். யார் கூப்பிட்டாலும் ஓடோடி வந்து அருள் தருவார்.




அதனால்தான் அவர் எல்லாருக்கும் பொதுவாகவும், யாரும் சுலபமாக வழிபடும் வகையிலும் இருக்கிறார்.



விநாயகர் விரதத்தை பார்வதி தேவியே மேற்கொண்டிருக்கிறார். தன் கணவரை அவமதித்து யாகம் நடத்திய தந்தை தட்சனிடம் நியாயம் கேட்கப் போனாள் பார்வதி என்ற தாட்சாயணி. ஆனால், தட்சனோ மிகவும் கர்வம் பிடித்தவன். மருமகனை அவமானப்படுத்தியது போதாதென்று, மகளையும் கேலி பேசினான்.



இந்த அவமானத்தை பொறுத்துக் கொள்ள முடியாத தாட்சாயணி, தட்சன் வளர்த்து வைத்திருந்த யாக குண்டத்தில் அப்படியே பாய்ந்துவிட்டாள்.



அதன்பிறகு, பர்வதராஜனுக்கு மகளாகப் பிறந்து பார்வதி என்னும் பெயருடன் வளர்ந்து வந்தாள்.



சிறு வயதிலிருந்தே கயிலைநாதன்தான் தன் கணவன் என்று தீர்மானமாக இருந்தாள். அவளுடைய அந்த எண்ணம் பலிக்க வேண்டும் என்றால், அவள் விநாயகரை நினைத்து சதுர்த்தி விரதம் மேற்கொள்ள வேண்டுமென்று அவளுடைய தந்தையார் பர்வதராஜன் யோசனை சொன்னார்.



அவர் சொன்னபடியே, மண்ணால் ஒரு விநாயகர் விக்ரகத்தை உருவாக்கினாள் பார்வதி. கூடவே தங்கத்தாலும் ஓர் உருவம் செய்து இரண்டையும் பொற்கும்பம் ஒன்றின் பக்கத்தில் வைத்தாள்.



அந்த விக்ரகங்களுக்கு ஆகம விதிப்படி பூஜைகளை செய்தாள்.



ஆவணி மாத அமாவாசைக்கு அடுத்த சதுர்த்தியில் இப்படி பூஜையை ஆரம்பித்து, பௌர்ணமிக்கு அடுத்த சதுர்த்தி வரையில் தினமும் பூஜை செய்தாள்.



அதற்குப் பிறகு மண் பிள்ளையாரை, மேள தாளத்தோடு ஊர்வலமாக எடுத்துப் போய் நதியிலே இறக்கி விட்டாள். அந்த பதினைந்து நாட்களும் நியம நிஷ்டைகளை மீறாமல் இருந்த விரதத்தின் பலனாக, தான் ஆசைப்பட்டாற்போல கயிலைநாதனை கைப்பிடித்தாள்.



விநாயகர் ஆதி பரம்பொருள். எல்லோருக்கும் மூத்தவர். பிரம்மா, விஷ்ணு, சிவன் என்று எல்லோரையும் உருவாக்கியவர் அவர்தான். அவர் சாதிக்க வேண்டியது நிறைய இருந்ததால் அவர் பலவித அவதாரங்களை எடுத்தார்.



அந்த மாதிரியான ஒரு அவதாரம்தான் சிவன் மகனாக அவர் தோன்றியது. அற்பத் தாவரமான புல்லையும் (அருகம்புல்) அவர் ஏற்றுக் கொள்கிறார். காட்டுப்பூவான எருக்கம்பூவைக் கூட அவர் மறுப்பதில்லை.



அவரைப் பொறுத்தவரை புல் மாலை போட்டவரும் ஒன்றுதான்; ரோஜா மாலை போட்டவரும் ஒன்றுதான். வித்தியாசமே பார்க்க மாட்டார். தன்னை வணங்குபவரின் மனம் சுத்தமாக இருக்கிறதா, அந்த மனதில் தனக்கு எத்தகைய இடம் இருக்கிறது என்பதை மட்டும்தான் பார்ப்பார்.



விநாயகர் சதுர்த்தி விரத நடைமுறைகள் என்னென்ன?



அன்றைய தினம் விடியற் காலையிலேயே எழுந்து, சுத்தமாக குளித்துவிட்டு, வீட்டையும் சுத்தமாக்கிக் கொள்ள வேண்டும். வாசலில் மாவிலைத் தோரணம் கட்டலாம். முடிந்தால், இரண்டு வாழைக் கன்றுகளையும் வாசலின் இருபுறங்களிலும் கட்டி வைக்கலாம். பிறகு, பூஜையறையில் சுத்தம் செய்த ஒரு மணையை வைக்க வேண்டும்.



அதன்மேல் ஒரு கோலம் போட்டு, அதன்மேல் ஒரு தலை வாழை இலையை வைக்க வேண்டும். இலையின் நுனி வடக்கு பார்த்ததுபோல இருப்பது நல்லது. இந்த இலையின் மேல் பச்சரிசியைப் பரப்பி வைத்து, நடுவில் களிமண்ணாலான பிள்ளையாரை வைக்க வேண்டும்.



பூமியிலிருந்து உருவான எதுவும் பூமிக்கே திரும்பப் போகவேண்டும் என்ற தத்துவம்தான் களிமண் பிள்ளையார். களிமண் மட்டும்தான் என்றில்லாமல், உலோகம், கற்சிலை விக்ரகங்களையும் வைக்கலாம்.



பத்ர புஷ்பம் எனப்படும் பல்வகைப் பூக்கள் கொண்ட கொத்து, எருக்கம்பூ மாலை, அருகம்புல், சாமந்தி, மல்லி என்று எத்தனை வகை பூக்களை வாங்க முடியுமோ, அவரவர் வசதிக்கேற்ப வாங்கிக் கொள்ளலாம்.



அதேபோல முடிந்த அளவுக்கு சில வகை பழங்களையும் வாங்கிக் கொள்ளலாம். இவை எல்லாவற்றையும் விட, விநாயகருக்கு மிகவும் பிடித்தமான மோதகத்தை செய்து கொள்ளலாம்.



அதாவது கொழுக்கட்டை. தேங்காய் பூர்ணத்தை உள்ளே வைத்து செய்யப்படுவது. இதிலும் ஒரு தத்துவம் இருக்கிறது. மேலே இருக்கும் மாவுப் பொருள்தான் அண்டம்.



உள்ளே இருக்கும் வெல்லப் பூர்ணம்தான் பிரம்மம். அதாவது நமக்குள் இருக்கும் இனிய குணங்களை மாயை மறைக்கிறது. இந்த மாயையை உடைத்தால் அதாவது வெள்ளை மாவுப் பொருளை உடைத்தால், உள்ளே இனிய குணமான வெல்லப் பூர்ணம் நமக்குக் கிடைக்கும்.



(விநாயகருக்கு முதன் முதலாக இந்தக் கொழுக்கட்டையை நிவேதனம் செய்தது, வசிஷ்ட முனிவருடைய மனைவியான அருந்ததி.)



பிள்ளையாருக்கு பூக்களால் அலங்காரம் செய்து விட்டு, பிறகு விநாயகர் பாடல்கள் எதை வேண்டுமானாலும் பாடலாம். அவ்வையார் தந்த விநாயகர் அகவல், காரிய சித்தி மாலை படிப்பது விசேஷமான பலன்களைத் தரும். பிள்ளையாருக்கு கொழுக்கட்டை மட்டுமில்லாமல், அவரவர் வசதிக்கேற்ப எள்ளுருண்டை, பாயசம், வடை என்றும் நைவேத்யம் செய்யலாம்.



பால், தேன், வெல்லம், முந்திரி, அவல் என்று ஒவ்வொன்றிலும் சிறிதளவு எடுத்து ஒன்றாகக் கலந்து அதையும் நைவேத்யம் செய்யலாம். நிவேதனப் பொருட்கள் ஒவ்வொன்றிலும் 21 என்ற கணக்கில் சிலர் வைப்பார்கள். ஆனால், எண்ணிக்கை முக்கியமில்லை; ஈடுபாடுதான் முக்கியம். பிறகு கற்பூரம் காட்டி விரதத்தை முடிக்கலாம்.



இந்த விரதத்தை காலையிலிருந்தே உணவு எதுவும் எடுத்துக் கொள்ளாமல் அனுஷ்டிப்பது மிகவும் விசேஷம். பூஜை நேரம் வரை பட்டினியாக இருப்பது சிறப்பு. சம்பிரதாயம் பார்க்கக் கூடியவர்கள் இந்த விநாயகர் சதுர்த்திக்குப் பிறகும் தொடர்ந்து விரதத்தை அனுசரிப்பார்கள். அப்படித் தொடர்ந்து, பௌர்ணமிக்குப் பிறகு வரும் சதுர்த்தி தினத்தோடு விரதத்தை நிறைவு செய்வார்கள்.



இத்தனை நாள் விரதத்துக்குப் பிறகுதான் பிள்ளையாரை கிணற்றிலோ அல்லது ஏதாவது நீர்நிலையிலோ கொண்டுபோய் போடுவது வழக்கம்.



பதினைந்து நாள் அனுசரித்தாலும் சரி, விநாயகர் சதுர்த்தி அன்றைக்கு ஒரே ஒருநாள் மட்டும் அனுசரித்தாலும் சரி, மேற்கொள்ளும் விரதத்தை உளப்பூர்வமாகக் கடைப்பிடிக்க வேண்டியதுதான் முக்கியம்.



வருடத்திற்கு ஒருமுறை இப்படி விநாயகர் சதுர்த்தி அனுசரிப்பதுபோல மாதந்தோறும் பௌர்ணமிக்கு அடுத்த சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தியாக அனுஷ்டிக்கப்படுகிறது.



இந்த நாளிலும் விரதம் இருப்பது சிலருடைய வழக்கம். அன்றைக்கு முழுவதும் பட்டினி இருந்து, விநாயகர் சிலை அல்லது படத்துக்கு முன்னால் தீபமேற்றி, விநாயகர் பாடல்கள், ஸ்தோத்திரங்களை பாடி, மாலையில் கொழுக்கட்டை நைவேத்யம் செய்து, பிறகு சந்திர தரிசனம் செய்துவிட்டு எளிமையான உணவை எடுத்துக்கொண்டு விரதத்தை முடிப்பதும் சிலர் வழக்கம்.



இந்த விரதங்களால் உள்ளம் மேன்மைஅடையும்; உடல் ஆரோக்கியம் வளரும்; எல்லா வளங்களும் நிறையும். விரதம் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, அவர்கள் குடும்பத்தினருக்கும், அவர்களை சார்ந்த அனைவருக்கும் விநாயகர் நல்லன எல்லாம் அருள்வார்.



(Thanks: Dinakaran)

திங்கள், ஆகஸ்ட் 05, 2013

எப்போது கண்டெடுக்கும் இன்னொரு காந்தியை ?









அகமும் புறமும்
என்னவென்று அறியாமலே
கலிங்கத்து பரணிக்கு
உரை எழுதுபவர்கள் !
நெல்லிக்கனியின்
சுவையறியாது
அதியாமானின்
வள்ளல்தன்மைக்கு
மகுடம் சூட்டுபவர்கள் !
ஆறாம் அறிவை
அடகுவைத்துவிட்டு
ஏழாம் அறிவை அலசுபவர்கள் !
இவர்களெல்லாம் ....
வெளிச்சத்துக்கு விளக்கு
ஏற்றுபவர்கள் !
வெளிச்சப்பார்வையில்
இவர்களெல்லாம்
இருளின் சொந்தக்காரர்கள்  !
சமுதாயப் புத்தகத்தின்
முகவரியைக் கூட
படிக்கத்  தெரியாத
சுயநலவாத
கூட்டமைப்பின்
கொள்கைச்செம்மல்கள் !
வாக்கு வங்கிகளை
கொள்ளையடித்து ....
மக்களாட்சியின் மகிமைக்கு
மலர்வளையம் வைப்பவர்கள்!
சுதந்திர தினம் ஆண்டுதோறும்
கொடியேற்றத்தில் மட்டுமே
கொண்டாடப்படுகிறது!
மதம் பிடித்த யானைகளாய்
சமுதாய சீர்கேடுகளை
கட்டவிழ்த்துவிடுவோரை
இனம்கண்டும் ...
ஆர்த்தெழாத  மானுடம்
எப்போது கண்டெடுக்கும்
இன்னொரு காந்தியை ?

..........கா.ந.கல்யாணசுந்தரம்








வியாழன், ஜூலை 11, 2013

தோள்களின் தோழமையோடு !






விடியல் பறவைகளோடு
எனது பயணிப்பும் !
வாழ்க்கையின் தொலைந்த
பக்கங்களைப் புரட்டியவாறே
கடக்கும் இரவுப் பொழுதுகள் !
பகல் நேரத்து தேடல்களில் !
புலம்பெயரும் சிந்தனைகள்
அரை குறை அறிவுஜீவிகளின்
அறிவுறுத்தல்களில்
செயலிழக்கும் மனம் !
உடன் பிறவா தோழர்களின்
தளர்ந்த கைகுலுக்கல்களில்
நட்பின் தேய்மானம் !
இறை வழிபாடுகளில்
இனம்புரியா நிலைப்பாடு !
கார் கால தொடர் மழையில்
நிரம்பும் ஏரிகளுக்கும்
வடிகால்கள் இருக்கின்றன !
ஆம் ....பிறரிடம் பகிரப்படாத
துன்பங்களுடன் எனது
மனமும் முன்வரிசையில்
அமர்ந்திருக்கிறது....
பாரம் சுமப்போர் போட்டியில்
கலந்துகொள்ள .....
தோள்களின் தோழமையோடு !

...........கா.ந.கல்யாணசுந்தரம்


சனி, ஜூலை 06, 2013

உனக்காகத் தேடுகிறேன்




வேறொரு பெயரை 
உனக்காகத் தேடுகிறேன் 
ஜாதிமல்லியே !

............கா.ந.கல்யாணசுந்தரம்

வெள்ளி, மே 10, 2013

சுமைதாங்கியிடம்

என்னை நான் வியந்து பார்க்கிறேன்
நெஞ்சு வெடிக்கும் மனச் சுமைகளைக் கூட
தாங்கிக்கொள்ளும் மனோபாவத்தை
இறைவன் எப்படி கொடுத்தானென்று !

எப்படியும் ஏதோ ஒரு விதத்தில்
ஒவ்வொருவருக்கும் மனச் சுமைகள்
இருந்து கொண்டுதான் இருக்கிறது!

சுமைகளை ஏற்றிய பார வண்டியாய்
இமைகளை மூடி ஒரு புத்தனைப்போல்
சும்மா இருத்தலின் சுகம் காணும்
முயற்சியில் தோல்விகளே நிதர்சனம்!

நடைபயணத்தில் தலைமுதல்
பாதம்வரை நரம்புகள் உயிர்த்தெழ
பாரம் பதவி விலகி பயணிக்க ஆரம்பித்தது !

கிராமத்து ஒற்றையடிப் பாதையில்
கம்பீரமாய் நின்ற சுமைதாங்கியில்
சாய்ந்தபடி ஓய்வெடுத்தேன்......
" தலைச் சுமைகளை மட்டுமே
இறக்கிவைக்கின்றனர் " என ஏக்கத்துடன்
முணுமுணுத்த சுமைதாங்கியிடம்
விக்கித்து வலுவிழந்துபோனேன் !


..............கா.ந.கல்யாணசுந்தரம்.

வியாழன், மே 09, 2013

கும்புடுங்க



கத்திரி வெய்யில்
தோள்பட்டை எலும்பை
உருக்கி எடுக்க
தென்னை இளநீர்
விற்றபடி கணவனைப்
பார்த்து மனைவி சொன்னாள் ....
"படிக்கவைக்காத
தென்னம்பிள்ளையை
படம்புடிச்சி தெனமும்
கும்புடுங்க !"

......கா.ந.கல்யாணசுந்தரம்,

எதிர்வினை ....



ஒரு கனவின் தொடர்
என்னுள் மின்னல் பூக்களை
மலரவிட்டது
தொடரும் தேடுதல்
எதற்காக என்பது மட்டும்
புரியாமல் இருக்கிறது
கைக்கு எட்டியது
வாய்க்கு எட்டாமலே
கனவுகள் முற்றுப்பெருகிறது
வானப்பெருவெளியில்
சிறகை விரித்து பறக்கிறேன்
மனிதநேயமுடன்
பறவைகளின் விசாரிப்புகள்
மனதை குளிர்விக்கிறது
சிகரங்களை நோக்கி
பயணம் தொடர்கிறது
என்னைப் பிடித்து
இழுத்து கீழே தள்ள
அங்கு எவரும் இல்லை.
இருப்பினும் எதிர்வினை
இல்லாததொரு தேசத்தில்
எனது இருப்பிடம்
சிறப்பானதாக தெரியவில்லை.

............கா.ந.கல்யாணசுந்தரம்