கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

புதன், டிசம்பர் 05, 2012

சிக்குண்டு தவிக்கிறது....







*நாணல் இசைத்த பாடல்
தெரிந்திருக்கிறது...
நதிக்கரைக்கு மட்டும் !

*மூங்கில் வேர்களை
மறக்கமுடியுமா?
புல்லாங்குழலின் நினைவுகள் !

*ஆற்றின் கரங்களை
முத்தமிட நினைக்கின்றன ...
அலை வருடிய கூழாங்கற்கள்!

*தள்ளினாலும் நீர் விலகாது
எனைத் தழுவி பயணிக்கிறது ....
பேசும் படகுத் துடுப்புகள்!

*வீசாத வலைக்குள்
சிக்குண்டு தவிக்கிறது....
ஒரு மீனவனின் பசி !

.............கா.ந.கல்யாணசுந்தரம்.

ஞாயிறு, டிசம்பர் 02, 2012

ஒரு கனத்த இதயத்தை










கண்களை மூடினேன்
உலகம் இருண்டது
இதயக் கோட்டையின்
கதவுகள் மட்டும்
எண்ணங்களின் திரவு கோலால்
திறந்துகொண்டது....
மூளையின் செதில்களில் சில
கரங்களாய் வளர்ந்து
தூரிகை ஒன்றினை
தேடிப் பிடித்தது....
மௌன சலவைக்காரன்
தீச்செயல் துணிகளைத் துவைத்து
வெண்மையாக்கினான் .
வண்ணமிழந்த ஆடைகளில்
பல வண்ணத்துப்பூச்சிகள்
வந்தமர்ந்தன.....
சும்மா இருந்த ஊனுடல்
எனது ஆன்மாவிடம் ....
'அந்த தூரிகையால்
வாசமிகு மலர்களை உருவாக்கி
வண்ணத்துப் பூச்சிகளுக்கு
விருந்தளி' ........என்று கேட்டது .
தூரிகைகள் மலர்களை
படைக்கும்முன்
கண்கள் திறந்துகொண்டன .....
சும்மா தியானம் நிலைபெறாமல்
சுமந்து சென்றது
ஒரு கனத்த இதயத்தை !

..........................கா.ந.கல்யாணசுந்தரம் 

திங்கள், நவம்பர் 26, 2012

காற்றின் விசாரிப்பு !











*துள்ளும் மீன்களுக்கு
தெரியவில்லை ...
வலைக்குள் சிறையானது!

*பூட்டிய வீட்டுக்குள்
புகுந்து வெளியேறியது...
காற்றின் விசாரிப்பு !

*ஒரு கைதியின் இதயத்தில்
ஏற்கனவே கைதானாள்
கள்வனின் காதலி !

*ரேகைகளை காண்பித்து
நல்லநேரம் தேடுவதில்
தொலைந்துபோனது எதிர்காலம்!

*படிப்பினைகளின் செயலாக்கமே
கிழித்தெறிகிறது....
கனவுக்கும் நினைவுக்குமான தூரத்தை!

*கடைசியாக நடந்தாலும்
இலக்கின் விளிம்புகளைத் தொடு...
இது ஊர்வலத்தின் உன்னதம்!

......................கா.ந.கல்யாணசுந்தரம்

ஞாயிறு, நவம்பர் 25, 2012

கிராமத்து களத்துமேடு!








ஒரு புதுக்கவிதையாய்
காலைப்பனி மேய்கின்ற...
கிராமத்து களத்துமேடு!

ஒற்றைக்காலில் நின்றபடி
வயிற்றுப் பசிக்கான தவம்
ஆற்றுப்படுகை கொக்குகள் !

இளஞ்சூரியனை
பங்குபோட்டு குதூகலிக்கும்
தென்னை ஓலைகள் !

எங்களுக்கேது விடுமுறை
வானில் எழும்....
இரைதேடும் பறவைகள்!

அன்றலர்ந்த மலர்களை
விட்டு வையுங்கள்....
தேனருந்தும் வண்டினம்!

..........கா.ந.கல்யாணசுந்தரம்.

வியாழன், நவம்பர் 22, 2012

விரல்கள் தேடுகின்றன...





மரம் வெட்ட கோடரியை எடுத்தாலும்
கரங்களின் விரல்கள் தேடுகின்றன...
விருட்சத்தின் விதைகளை !

........கா.ந கல்யாணசுந்தரம்

 

திங்கள், நவம்பர் 19, 2012

உள்ளத்தில் நல்ல உள்ளம்




உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா... கர்ணா
வருவதை எதிகொள்ளடா
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா... கர்ணா
வருவதை எதிகொள்ளடா

தாய்க்கு நீ மகனில்லை
தம்பிக்கு அண்ணனில்லை
ஊர்ப்பழி ஏற்றாயடா
நானும் உன் பழி கொண்டேனடா
நானும் உன் பழி கொண்டேனடா
மன்னவர் பணியேற்கும்
கண்ணனும் பணி செய்த
உன்னடி பணிவேனடா -கர்ணா
மன்னித்து அருள்வாயடா

செஞ்சோற்று கடன் தீர்த்த
சேராத இடம் சேர்ந்து
வஞ்சத்தில் வீழ்ந்தாயடா - கர்ணா
வஞ்சகன் கண்ணனடா
வஞ்சகன் கண்ணனடா

- கண்ணதாசன்

வெள்ளி, நவம்பர் 16, 2012

'அனுபவம் என்பதே நான்தான்'







 
 
பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான்!
படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
படித்துப் பாரென இறைவன் பணித்தான்!
அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
அறிந்து பாரென இறைவன் பணித்தான்!
அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்
அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!
பாசம் என்பது யாதெனக் கேட்டேன்
பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
மணந்து பாரென இறைவன் பணித்தான்!
பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்!
முதுமை என்பது யாதெனக் கேட்டேன்
முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
வறுமை என்பது என்னெனக் கேட்டேன்
வாடிப் பாரென இறைவன் பணித்தான்!
இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்!
'அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
ஆண்டவனே நீ ஏன்' எனக் கேட்டேன்!
ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி
'அனுபவம் என்பதே நான்தான்' என்றான்!
 
......................கவிஞர் கண்ணதாசன் 

திங்கள், நவம்பர் 12, 2012

தீப ஒளித் திருநாளாம் தீபாவளி நன்னாளில்





தீப ஒளித் திருநாளாம் தீபாவளி நன்னாளில்
இல்லமதில் மகிழ்ச்சி ஒளி திசையெங்கும் வீசட்டும்!
மனிதநேய அறுசுவை உணவுப் பரிமாற்றம்
வீதியெங்கும் விளங்கட்டும் !
இருப்போர் இல்லாதோர்க்கு
வழங்கிடும் நாளாகட்டும்!
இல்லாதோர் இனியிங்கு வளமுடனே
வாழும் நிலை வரட்டும்!
திருநாட்கள் பெருநாளாய்
அரும்பி நித்தம் மனிதநேயச் சோலையில்
மணம் கமழும் மலர்களாய்
பூத்துக் குலுங்கட்டும் !




........கா .ந .கல்யாணசுந்தரம்.

வியாழன், நவம்பர் 08, 2012

கண்கள் தேடுகின்றன.....







வெறுமனே புத்தகத்தின் பக்கங்களை
புரட்டிக் கொண்டிருந்தேன் !
வெளிச்ச தேவதையின் கண்கள்
கட்டப்பட்டு தனி அறையில்
தள்ளப்பட்டு தாளிடப்பட்டிருந்தது !
ஆசிரியர் சொன்ன பாடங்களின்
வரிகளை நிலவொளியில்
கண்கள் தேடுகின்றன.....
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
நுனிபுல்லை மேய்ந்த மாடென
சோம்பல் முறித்து தூங்கப் போனேன் !
ஏற்கனவே மின்சார பொத்தான்களை
இயக்கி வைத்ததால் பளீர் என
மின்னொளி நீண்ட நேர இடைவெளிக்குப்பின்
பாய்ந்து என் விழிப் படலத்தை தாக்கியது...
வெளிச்ச தேவதையின் கண்கள்
இப்போது திறக்கப்பட்டன.....
ஆனால் தூக்கம் ததும்பிய
எனது விழிகள் மட்டும் திறக்கவில்லை!
கனவில் ஆசிரியரின் பிரம்படி
துல்லியமாய் நினைவில் நின்றது
விழித்தபின் அம்மாவிடம் கேட்டேன் ...
விளக்கெரிக்க மண்ணெண்ணெய்யாவது
கிடைக்குமா?

........கா.ந கல்யாணசுந்தரம்

புதன், நவம்பர் 07, 2012

உறவுகளின் பண்பாடு - ஹைக்கூ







*ஒரு இரவின் கைப்பிடிக்குள்
தப்பிக்கவே  பதுங்கியிருந்தது
பகலின் ஒளிப்பிம்பங்கள்


*கரைகளை அணைத்தபடி
நதி ஓடிக்கொண்டிருந்தது
இது கரைகளின் கனவு 


*கல்லுக்குள் ஈரம் இருப்பதால் 
சிற்பியின்  உளி விளைவிக்கிறது
எழில்மிகு சிற்பங்கள்


*இருந்தும்  இறந்தபடி
வாழ்கிறார்கள்
செலவிடாத  செல்வத்துடன்


*பாசத்தின் நிழலோடு
எப்போதும் பயணிக்கும்
உறவுகளின் பண்பாடு


                            .....கா .ந.கல்யாணசுந்தரம்




செவ்வாய், நவம்பர் 06, 2012

தேடல்...





ஒரு பகல் பொழுதின்
ஆளுமையில்
அவனின் பலம் அனைத்தும்
இழந்த நிலையில்
கைகளில் திணிக்கப்படுகின்றன ...
இன்றைய
பொழுதுக்கான சம்பளம்!
ஆள் அரவமற்ற
தெருவோரத்து குடிசைக்குள்
கால்கள் சற்றே
ஓய்வெடுத்தன ....
மல்லாந்து படுத்த
அவனது கண்களுக்கு
கோளரங்கம் ஆனது
குடிசையின் கூரை!
அடுத்த நாளின்
நகர்தலுக்கான தேடல்...
மனதுக்குள்
ஏக்கப் புள்ளிகளுடன்
கோலமிட்டன....
வாசல் இல்லாத
அவனது வீட்டின்
முற்றத்தில்....!



.....கா.ந.கல்யாணசுந்தரம்





திங்கள், நவம்பர் 05, 2012

உயிர்ப்பின் ஆசை


பார்த்த பொம்மைகளையே
மீண்டும் மீண்டும் பார்த்தவாறே
அலுத்துப்போன குழந்தை
தாத்தாவின்  மடிமீது
தூங்கிப்போனது!
சிதறிக்கிடந்த பொம்மைகள்
மீண்டும் உயிர்ப்பித்தெழ
நேரமாகும்....!
தாத்தாவும் பொம்மைகளோடு
பொம்மையாய் குழந்தையை
சுமந்தவாறே தூங்கிப்போனார் !
எங்கிருந்தோ பாடல் ஒலித்தது....
' நான் மறுபடியும் குழந்தையாக
பிறக்க வேண்டும் - அன்னை
மடிமீது தலைவைத்து படுக்கவேண்டும்'

........கா.ந.கல்யாணசுந்தரம்  

திங்கள், செப்டம்பர் 17, 2012

மலர்களின் சிரிபொலி !


பிரிந்து செல்லும் பாதைகள்
எப்போதும் சந்தித்துக்கொள்கின்றன...
பிரிந்த இடத்தில் !

ஒரு பனிபொழிந்த காலை
துல்லியமாய் கேட்கிறது...
மலர்களின் சிரிபொலி !

உதிர்ந்த இறகினில்
உறங்காமல் விழித்திருக்கிறது...
ஒரு பறவையின் தேடல் !

ஆற்றுப் படுகை நாணலிடம்
கேட்கத் தோன்றுகிறது..
புயலின் வலிமையை !

கிராமிய மணம் கமழும்
உயிரோவியங்களுடன் ...
மாலை நேரத்து ஏரிக்கரை !

..........கா.ந.கல்யாணசுந்தரம்.

சனி, செப்டம்பர் 08, 2012

குழல்கூட இசைக்காமல் சற்றே நிற்கும்


மொட்டவிழ்ந்த மலர்போல மழலை முகம்
பொட்டிட்டு பூச்சூடி பார்த்தாலே போதும்
கட்டவிழ்ந்த தாழை மலர் போல அழைப்பாள்
கொட்டுகின்ற அருவியென துள்ளி எழுவாள்
குழல்கூட இசைக்காமல் சற்றே நிற்கும்
மழலை இவள் வாய் மொழியில் தோற்கும்
வண்ணத்து பூச்சியென சிறகடித்து வருவாள்
காண்போரின் கையசைப்பில் கண்சிமிட்டி சிரிப்பாள்
முகமறியா போதிலும் மடிமீது வந்தமர்வாள்
கொடிமுல்லைப் பூவாய் மனம் கவர்ந்திழுப்பாள்
மீண்டும் மழலையாய் பிறப்பெடுக்க இறைவனை
வேண்டும் மனம் கொடுத்து வாழ்வாள் இனிதாக!


..................கா.ந.கல்யாணசுந்தரம்.

வெள்ளி, செப்டம்பர் 07, 2012

கலையழகு பாதமலர் போற்றி வணங்கிடுவோம் !
























அருளோடு திருஉருவம் ஆனந்த களிநடனம்
பெருநிதிய வளத்தோடு பூவுலகில் அவதரித்தாய் !
கலியுகம் இதுவென்று மானுடம் அறிந்திடவே - ஈரைந்து
அவதாரம் எடுத்துலகில் ஆட்கொண்டாய் பெருமாளே !

ஏழுமலை கடந்து உன்னுருவம் கண்டிடவே
பாழும் இவ்வுடல் சுமந்து வருகின்றேன்
சூழும் பாவ அலைகடலில் அகப்பட்டோம் - கலியுகம்
வீழும் நாளறியேன் அறிவேன் நாராயணாவெனும் நாமம்

அலைமகள் அகம்கண்ட கலியுக வரதனிவன்
சிலைவடிவம் கொண்டிட்டான் மலைமீது!
விலையிலா அருட்கொடையாம் என்றென்றும் - திருமாலின்
கலையழகு பாதமலர் போற்றி வணங்கிடுவோம் !

.............கா.ந.கல்யாணசுந்தரம்.

வியாழன், செப்டம்பர் 06, 2012

அன்னை ஓர் ஆலயம்!


* பயணிக்கும் தூரம் அதிகமெனில்
தாகமெடுக்கும்.....
அம்மாவை நினைத்துக்கொள் !

* நினைத்ததை பெற்றவுடன்
நிம்மதி கிடைக்கும்....
பெற்றவளின் நினைவிருந்தால்!

* புகழின் உச்சியை அடைந்தாலும்
மறவாதே....
அன்னையின் அரவணைப்பை !

* தெய்வமில்லை என்போருக்கும்
கடவுளானாள்...
அன்னை ஓர் ஆலயம்!

.................கா.ந.கல்யாணசுந்தரம்

செவ்வாய், ஆகஸ்ட் 14, 2012

இனி ஒரு விதி செய்வோம்.....












விடுதலைக்கான சின்னமாய்
இன்றும் பட்டொளிவீசி பறக்கிறது
நமது மூவண்ணக்கொடி!
அன்னியரின் அடிமத்தளையருத்து
பொன்னான தாயகத்தை
மீட்டெடுக்க இன்னுயிர் நீத்தனர்
இந்தியத் திருநாட்டின்
இணையில்லா தவப்புதல்வர்கள் !
நள்ளிரவில் பெற்ற சுதந்திரம்
நலமுற பேணிக் காப்போமென
உறுதிமொழி ஏற்றிடும்
மாணவ மாணவியர் தினம் தினம்!
ஆகஸ்டு மாதம் பதினைந்தாம் நாளில்
நல்லதொரு கருத்தினை
பகிர்ந்திடவே விழைகின்றேன்!
சுதந்திர தேசிய மணிக்கொடியை
இனி தனிமனித போராட்டத்தில்
பயன் படுத்தலாகாது!
கொள்கை எதுவாகிலும்
தேசிய கொடியினை தன்னலப்போக்கில்
தவறாகப் பயன்படுத்தி மக்களிடம்
அனுதாபம் பெறுகின்ற சுயநலவாதிகளை
அடையாளம் கண்டுகொள்வோம்!
அரசும் சட்டமும் இருந்தும்
அகற்றிட தயக்கமென்ன?
இனி ஒரு விதி செய்வோம் அதை
எந்தநாளும் காப்போம்!

....கா.ந.கல்யாணசுந்தரம்.