கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

வியாழன், மே 26, 2016

கண்டபோதெல்லாம் வாடுங்கள் .....!

அறிவியல் வளர்ச்சியெல்லாம்
அகம் மகிழும் புறவாழ்வு !
ஆன்மீக நெறிகளில்
பேரின்பம் பெருக்கெடுக்கும் !

பொருள் குவிக்கும் செயலினிலே
பூவுலக போதை புதைந்திருக்கும் !
ஆளுமை அகங்கார வாழ்வுதனில்
அடிமைகளை வளர்த்திட்டு
ஆர்பரிக்கும் குணமிருக்கும் !

பாரம்பரிய மரபுகளை மீட்டெடுக்கும்
பணிதனில் பண்புகளே மிஞ்சிடும் !
கல்விதனை வணிகமது தத்தெடுத்தால்
மனித மூளைதனை அடகுவைக்கும்
நிகழ்வுகளே அணிவகுக்கும் !

பாரதத்தின் பெரும்பகுதி
பாரம்பரிய விவசாய நிலமாகும் !
விளைநிலங்கள் அழித்தொழித்து
வாழ்விட மையங்கள் ஆக்காதீர் !

உண்ணும் உணவின் பிறப்பிடம்
அறியா தலைமுறைகளே ....
உணருங்கள் மானுட வாழ்வுதனை !
விவசாய தொழில்நுட்பம் ஏட்டளவில்
இருந்தால் போதுமா?
தகவல் தொழில்நுட்பமும்
மென்பொருள் வளர்ச்சியும்
தானியங்களை தந்திடுமா?

திரும்பிப் பார்த்திடுங்கள் கிராமங்களை ...
பணிக்கொடையாய் விளைநிலங்கள்
தரிசாய் மாறி தரிசனம் தருகின்றன !
பொருளாதார மேம்பாட்டு திட்டமென
அரசியலார் சுருட்டுகின்ற செயலதனை
இனி ஒழிப்போம் ...!



மெத்தப் படித்தாலும் வாழ்வின் மேம்பாட்டில்
இத்தரை காணும் விவசாயமே எனக்கண்டு
அணியணியாய் திரள்வீர் ...!
தனியொருவனுக்கு உணவில்லையெனில்
இனி ஜெகத்தினை எரிக்கவேண்டாம் ....
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்
வாடுங்கள் .....!

....கா.ந.கல்யாணசுந்தரம்.




புதன், ஏப்ரல் 13, 2016

" காலத்தை வெல்லும் தமிழ் ஹைக்கூ கவிதைகள்" - ஆய்வு நூலுக்கு இதுவரை எம்மிடம் இருக்கும்/வந்துள்ள ஹைக்கூ நூல்கள்:

" காலத்தை வெல்லும் தமிழ் ஹைக்கூ கவிதைகள்" - ஆய்வு நூலுக்கு இதுவரை எம்மிடம் இருக்கும்/வந்துள்ள ஹைக்கூ நூல்கள்:
1. புள்ளிப்பூக்கள் - அமுத பாரதி
2. சூரியப்பிறைகள் - ஈரோடு தமிழன்பன்
3. நனையாத நிலா - செ.செந்தில்குமார்
4. விரல்நுனியில் வானம் - மு.முருகேஷ்
5. கிண்ணம் நிறைய ஹைக்கூ - தொகுப்பு: மு.முருகேஷ், பா.உதயகண்ணன்
6. வேரில்பூத்த ஹைக்கூ - தொகுப்பு: மு.முருகேஷ்
7. நீங்கள்கேட்ட ஹைக்கூ - தொகுப்பு: மு.முருகேஷ், பா.உதயகண்ணன்
8. பரிதிப் புன்னகை - செந்தமிழினியன்
9. கடைசி மழைத்துளி - அறிவுமதி
10. குயிலின்நிறம்- ரமா ராமநாதன்
11. சென்னிமலை கிளியோபாத்ராக்கள் -
12. ஈரோடுதமிழன்பன்
13. சுண்டுவிரல் - மாடப்பள்ளி ஜெகதீசன்
14. சூரியத்துளிகள் - கவிமுகில்
15. பொன்விழா ஹைக்கூ - வலசைவீரபாண்டியன்
16. புத்தாயிரம் ஹைக்கூ - வலசை வீரபாண்டியன்
17. மனிதநேயத் துளிகள் - கா.ந.கல்யாணசுந்தரம்
18. கிராமத்து காற்று - சஞ்சீவி மோகன்
19. இன்று பௌர்ணமி - டி. இராஜேந்திரன்
20. மழைதினம் - பாரதி ஜிப்ரான்
21. ஒற்றை சிறகால் வானத்தை தொடு - தரிசனப்பிரியன்
22. உதிர நிற பொட்டு - வண்ணை சிவா
23. பூவரச இலை ஊதல் - அரசு கலைக்கல்லூரி, திருத்தணி
24. அறுவடை நாளின் மழை - ந.க.துறைவன், மு.முருகேஷ், பல்லவி குமார், சோலை இசைக்குயில்
25. பனிபடர்ந்த சூரியன் - தென்றல் நிலவன், கவி.குமார்
26. கொஞ்சம் ஹைக்கூ கொஞ்சம்புதுக்கவிதை - மு.முருகேஷ்
27. நிஜமும் நிழலும் - பொன் குமார்
28. பிற - பொன் குமார்
29. குளத்தில் மிதக்கும் தீபங்கள் - ஆரிசன்
30. பயணத்திசை - தமிழியலன்
31. தார்ச்சாலைப் பூக்கள் - கே. பாக்யா
32. தமிழ் ஹைக்கூ ஆயிரம் - இரா.இரவி
33. ஹைக்கூ பூக்கள் - நம்மொழி தொகுப்பு நூல் - . மயிலாடுதுறை இளைய பாரதி
34. தமிழ் ஹைக்கூ ஆயிரம் - சாகித்ய அகாதமி - இரா மோகன்
35. ஹைக்கூ வாசல் - அருவி- காவனூர் ந.சீனிவாசன்
36. மனசெல்லாம் ...கா.ந.கல்யாணசுந்தரம் (தயாரிப்பில் - வாசன் பதிப்பகம்)
இந்த நூல்களுடன்(ஆய்வு நூல்களும்)....
1. ஹைக்கூ ஒருபுதிய அனுபவம் - சுஜாதா
2. தமிழ் ஹைகூவில் மொழி வீச்சு - செல்லம்மாள் கண்ணன்
3. தமிழில் ஹைக்கூ - நெல்லை சு.முத்து
4. தமிழ் ஹைக்கூ நேற்றும் இன்றும் - மித்ரா
மேலும்: இதழ்கள்:
கணை, ஏழைதாசன், கவிதை உறவு, தமிழ் மூவேந்தர் முரசு, இனிய ஹைக்கூ, ஹைக்கூ, சிநேகம், மதுமலர், வாசகர் வட்டம், மன்னுயிர், தாரகை, கரந்தடி, கணையாழி, வேர்கள், கவிக்காவிரி, வள்ளியூர் தென்றல், பாக்யா, பாவையர் மலர், கவிஒவியா, அத்திப்பூ, ஹைக்கூ அஞ்சல் அட்டை, தினமலர் வாரமலர்,தினகரன்,பரணி காலாண்டுஇதழ், அமுதசுரபி, குமுதம், கல்கி, மனிதநேயம்
மற்றும்
கவிச்சூரியன், கொலுசு - மின்னிதழ்கள்
அனைத்து ' அருவி ' காலாண்டிதழ்கள்.
மேலும்: முகநூல் குழுமங்கள்: ஹைக்கூ உலகம், கவிதைப் பட்டறை, அமுதசுரபி, ஹைக்கூ தோட்டம், தமிழ்க் கவிதைப் பூங்கா, பிரபலங்களின் ஹைக்கூ கவிதைகள்,
ஒருகவிஞ்சனின்ி்ி்கனவு போன்ற முகநூல் குழுமங்களில் இருந்தும்தெரிவு செய்து வருகிறேன்.
ஹைக்கூ கவிஞர்களுக்கு இனிய வாழ்த்துக்கள்.
அன்பன், கா.ந.கல்யாணசுந்தரம்
குறிப்பு: ஹைக்கூ கவிஞர்கள் தங்களிடம் இருக்கும் மற்ற கவிஞர்களின் ஹைக்கூ நூல் பிரதிகளை ( ஒன்றுக்கு மேல் வைத்திருந்தால்) அனுப்பி வைக்கவும்.

" காலத்தை வெல்லும் தமிழ் ஹைக்கூ கவிதைகள் " - ஆய்வுக் கட்டுரைகள்.


தமிழ் ஹைக்கூ கவிதைகளின் வளர்ச்சிக்கு வித்திட்ட முதுபெரும் ஹைக்கூ கவிஞர்களின் மேலான கவிதைகளுடன் அவர்கள் தங்கள் நூல்களில் பகிர்ந்த பன்முக கருத்துக்களோடு வெளிவர உள்ளது " காலத்தை வெல்லும் தமிழ் ஹைக்கூ கவிதைகள் " - ஆய்வுக் கட்டுரைகள்.

தற்கால ஹைக்கூ கவிஞர்கள் விரைந்து தங்களது ஹைக்கூ நூல்களை கீழ்கண்ட எனது முகவரிக்கு அனுப்பி வையுங்கள். நன்றி.

அன்பன்,

கா.ந.கல்யாணசுந்தரம்
நெ.62 பத்தாவது தெரு
ஜெயச்சந்திரன் நகர்
மேடவாக்கம்
சென்னை 600100

செவ்வாய், ஏப்ரல் 12, 2016

காலத்தை வெல்லும் தமிழ் ஹைக்கூ கவிதைகள்....ஆய்வுக் கட்டுரைகள் தயாரிப்பில்....

ஆய்வுக் கட்டுரையில் கீழ்கண்ட ஜப்பானிய ஹைக்கூ கவிமேதைகளின் கவிதைகள் தமிழில் இடம்பெறும்.
பாஷோ (ஹைகூவின் தந்தை)
போசோ பூசான்
கோபயாஷி இன்ஸா
மாஸஒகாகிஷிஇந்த 
காவா ஷி காஹி ஹெகி கோட்டோ
தகாஹடா கியோஷி
ஒகிவார செயசென்சூய
தனேடா சந்தோகா
ஒசதிஹோ சாய்
நாகத்சூகா இப்பெகரோ
ஹாஷிமோடோதகாகோ
நாகமுரா குஸதாஒ
கேடோ ஷூசென்
ஒசாகி ஹொசாய்
இஷிகாவா தாகுபோடு
காரய் சென்றியு

மேற்கண்ட ஜப்பானிய ஜென் தத்துவ ஹைக்கூ கவிஞர்களின் ஹைக்கூ கவிதைகள் நமது கவிஞர் சுஜாதா அவர்களின் ஆய்வேட்டில் தமிழாக்கம் செய்துள்ளபடி இடம்பெறும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொகிறேன். இவர்களுடன் உங்களது கவிதைகளும் மேலான ஆய்வுகளுடன்.
அன்புடன், கா.ந.கல்யாணசுந்தரம்.
இந்த ஆய்வுக்கட்டுரை நூலில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் ஹைக்கூ கவிஞர்களின் ஹைக்கூ கவிதைகள் இடம் பெறுகிறது. நூல் வடிவமைப்பு மிக உயர்ந்த நேர்த்தியான வடிவமைப்பில் அச்சிட்டு ஹைக்கூ வரலாற்றில் பங்குபெறும் நூலாக இருக்கும். ஹைக்கூ கவிகளின் ஒத்துழைப்பு தேவை. நல்ல தேர்ந்த சிந்தனைவளம் மிக்க கவிதைகளை கொடுங்கள்....வாழ்த்துக்கள்...நன்றி. அன்பன், கா.ந.கல்யாணசுந்தரம்.

சனி, ஜனவரி 30, 2016

பூவாளிகளை மட்டுமே தயாரிக்கும்....!



இயற்கை ஒரு
திறந்த புத்தகம்
அதில் மனிதநேயமே
முகவுரை

புல்வெளிகளும்
மண்டிக்கிடக்கும்
மலர்களின் வாசமும் 
பக்க எண்கள்
 
மகரந்தம் பரப்பும்
வண்ணத்துப்பூச்சிகளும்
வண்டினங்களும்
அத்தியாயங்கள்

அந்திவானமும்
மேகம் தழுவும் மலைகளும்
நதிக்கரை நாணல்களும்
நயமிக்க வார்த்தைகள்

அடர்வன  மூங்கில் புதர்களும்
நெஞ்சை அள்ளும்
நீரோடைகளும்
புனைவுகளின் பிரதிகள்

கீதம் பாடும் விடியல்
பறவைகளும்
புல்லின் நுனி பனித்துளிகளும்
முடிவுரையின் எல்லைகள்

இன்னும் பல ......
இயற்கைப் புத்தகத்தின்
உதிர்ந்த இறகுகளாய்
வானத்தை அளந்தபடி
தென்றலில் கரைந்தன

ஆம் ......கோடரியில்லா
மானுட கரங்கள்   இனி  
பூவாளிகளை  மட்டுமே
தயாரிக்கும்....!


......கா..கல்யாணசுந்தரம்.

ஞாயிறு, செப்டம்பர் 27, 2015

டிஜிட்டல் உலகம்

டிஜிட்டல் உலகம்
அறுவடை செய்கிறது
விவசாயிகளின் தற்கொலைகள்

...கா.ந.கல்யாணசுந்தரம்.

வெள்ளி, செப்டம்பர் 18, 2015

தளிர்களின் காலம் ....




விண் காணும் தளிர்கள்
மண் நோக்கியபடி
சருகுகள்

.....கா.ந.கல்யாணசுந்தரம்.

ஞாயிறு, ஆகஸ்ட் 30, 2015

இவனது நிஜ வாழ்க்கை ...

வண்ணக் கலவைகள்  
கிண்ணத்தில் இருந்தன...
ஆடை களைந்து
மினுக்கும் ஜிகினா
உடையணியும் நேரம்
ஒரு முறை மீண்டும்
நிலைக்கண்ணாடியில்
தன்னைப்பார்த்து மீள்கையில்
ஒப்பனைக் கலைஞன்
அவனருகே .....!
திரைவிலகியதும்
முதல் காட்சியில்
தோன்றவேண்டும்.....!
வீதியெங்கும் ஆவலுடன்
அமர்ந்திருக்கும்
ரசிகர்கள்....!
ஹார்மோனியப் பெட்டியுடன்
பாட்டுவாதியார்
பக்க வாத்தியங்களுக்கு
நடுவே...!
மாதக்கணக்கில்
ஒத்திகை பார்த்து
நினைவில்கொண்ட பாடலை
உச்ச குரலில் பாடவேண்டும்  !
ஆம்.....................
அரிதாரம் பூசி கோமாளியாய்
மற்றவர்களை சிரிக்கச்செயும்
இவனது நிஜ வாழ்க்கை ...
ஒரு முகமூடிக்குள்
புதைந்திருக்கிறது !


...........கா.ந.கல்யாணசுந்தரம்.

ஞாயிறு, ஆகஸ்ட் 23, 2015

காலநதியில் ஆசைப்படகுகள்...........



கண்மூடி தியானிக்கும்
விழிகளின் கட்டுப்பாட்டில்
எண்ண அலைகள்...!
ஒரு பிரபஞ்சத்தின்
அந்தரங்க மொழி
மௌனம்தான் !

இழையோடிய புன்னகை
எதிர்வரும் இன்னல்களை
இல்லாமலாக்கும் !
நற்சிந்தனைகள்
வளமானவாழ்வின்
நாற்றங்கால்கள் !

ஓசையின்றி ஓடும்
காலநதியில் 
ஆசைப்படகுகள்
இலக்கின்றி பயணிக்க...
ஐம்புலன்களையும்
அடக்கி ஆளா மானுடம்  
தினம் தினம் இழக்கிறது
‘சும்மா’..... இருக்கும் 
சுகம்தனை அறியாமல் !  

 ..............கா.ந.கல்யாணசுந்தரம்.

சனி, ஆகஸ்ட் 15, 2015

விதைக்கப்பட்ட சுதந்திரம் ......















இந்தியத் திருநாட்டில்
விதைக்கப்பட்ட சுதந்திரம்
ஆல்போல் தழைத்து
தன்னிறைவின் நிழல் பரப்பி
தரணியிலே தலைநிமிர்ந்து
நிற்கிறது !
வல்லரசு கொடியுயர்த்தும்
நாள் தொலைவிலில்லை !
மென்பொருள் அறிஞர்கள்
கூகுள் இணையத்திலும்
கோலோச்சி நிற்கிறார்கள் !
அறிவியல் வேளாண்
துறைகளிலும் அளப்பரிய சாதனை !
ஏவுகணை வரலாற்றில்
இணையிலா முத்திரைப்பதித்தார்
இந்தியக் குடிமகன்
அப்துல் கலாம் !
எண்ணற்ற எல்லையோர
இராணுவ வீரர்கள், கலைஞர்கள் ,
பல்துறை அறிஞர்கள்,
திறன்மிகு அரசியலார், 
வல்லுனர்களை ஈந்து
பெரிதுவக்கும் இந்தியத்தாயின்
இன்றைய வேண்டுகோள்.....
“மதுவற்ற மாநிலங்களைத்
தழுவட்டும் இனி பாரதம் !
தனிமனிதன் ஒழுக்கநெறி
பேணி தியாகி சசிபெருமாள்
கனவுதனை நினைவாக்குங்கள்”
வந்தேமாதரம் ...!!! ஜெய்ஹிந்த்......!!!!!

.......கா.ந.கல்யாணசுந்தரம்

வியாழன், ஜூலை 30, 2015

இந்தியத் தாயின் நல்லிணக்க நாயகன் !

எளிமையின் சிகரம்
இணையிலா மாமனிதர்
கவிதை நெஞ்சின் கோமகன்
அக்கினிச் சிறகினில்
அகிலத்தை அடைகாத்தவன் ...
பார் போற்றும் பாரதரத்னா !
இராமேஸ்வர கடற்கரையின்
இளம் தென்றல்....
அன்பெனும் சிறைக்குள்
நம்மை அகப்படவைத்தவன் !
அறிவியல் உலகின்
ஓர் அமர காவியம்....
தமிழுலகின் இலக்கியப் பேழை
இந்தியத் தாயின் நல்லிணக்க நாயகன் !
மதங்களைக் கடந்த மாமேதை
அப்துல் கலாம் இன்னுயிர் பிரிந்தாலும்
அவரின் சாதனைப் பயணம்
என்றும் நம்மோடுதான். !

...............கா.ந.கல்யாணசுந்தரம்.
 

புதன், ஜூலை 15, 2015


சிந்திக்கும் நேரங்களில் 
சிறகடிக்கும் பட்டாம்பூச்சிகள்கூட 
ஓய்வெடுத்து உனை நோக்கும் 
விளையாடும் போதெல்லாம் 
வானவில் வழிநெடுக
பந்தல்போடும் !        

நடனமிட்டு புன்முறுவல் 
பூக்கின்றபோது முற்றத்து 
அணில்கூட அசையாது நிற்கும் 
மழலையிவள் வாய்மொழியில் 
குழலோசை செவிமடுத்து 
குதூகலிக்கும் !


தென்றலிடம்  நடைபயின்று
மன்றல் வந்த மானினமோ
இவளின் மருண்டவிழியழகில்
மயக்கமுற்று மீளாது
துயில் கொள்ளும் !

ஒளிப்பூக்களை பறித்தெடுத்து
சத்தமின்றி என்னுள் செலுத்துகிறாள் !
கோடையின் குளிர் குளிர்நிலவில்
குதூகலமாய் கற்பனைத்தேர் ஏறி
எனை இயங்கவைத்து
யாதுமாகி நிற்கிறாள் !
         ..........கா.ந.கல்யாணசுந்தரம்.


சனி, ஜூலை 04, 2015

தோழமை வளர்க்கின்றன 
அடுக்குமாடி குடியிருப்பில் ...
பூங்கா இருக்கைகள் !







சனி, ஜூன் 13, 2015

இறைவன் வாழ்கிறான்

இயற்கையின் மாண்பில்
இறைவன் வாழ்கிறான்
நயாகரா நீர்வீழ்ச்சி !

...........கா.ந.கல்யாணசுந்தரம்.


செவ்வாய், ஜூன் 09, 2015

இன்பம் பருகும் வாழ்நாட்கள் !









இசையுலகின் இணையிலா மேதை !
இறைவனின் இசை அவதாரம் !
இயற்கையின் இதயத்தை தொட்டவன் !
இயல்பின் வெளிப்பாடுகளில்
இமயத்தை முத்தமிட்டவன் !
இலங்கும் புவிமீது இசையின்
இலக்கணத்தை வடித்தவன் !
இன்றல்ல நேற்றல்ல என்றும்
இசையுலகின் சக்கரவர்த்தி !
இளையராஜா - எங்களின்
இதயம்கவர் கள்வன் !
இந்தியத்தாய் பெற்றெடுத்த
இணையிலா தவப்புதல்வன்
இன்னும் இன்னும் வேண்டும்
இவனின் இசை கேட்டு
இன்பம் பருகும் வாழ்நாட்கள் !

............கா.ந.கல்யாணசுந்தரம்.

அவளின் புரிதல் இலக்கணம் !




ஒரு விரல் தொட்டதும் 
நெஞ்சம் இனித்தது ............
அவளின் புரிதல் இலக்கணம் !

........கா.ந.கல்யாணசுந்தரம் 

திங்கள், ஜூன் 08, 2015

எனது எண்ண ஓட்டங்களாக பகிரப்பட்டவை......



தலைப்பைச் சேருங்கள்











படுத்து உறங்காமல்
இளைப்பாற வாருங்கள்...
நிழல்தரும் மரங்கள் !

வற்றிய குளத்தை
முத்தமிட வா....
கோடை மழையே !

தோகை விரித்த மயிலுக்கு
குடைபிடித்தன....
கரு மேகங்கள் !

தென்றலுடன் கைகோர்த்து
நல்லிசை வழங்கின...
வண்டு துளைத்த மூங்கில்கள் !

புதியதாய் துளிர்த்தலில்
ஒரு மௌனித்த பயணம் ...
நேற்றைய உதிர்தல் !
........கா.ந.கல்யாணசுந்தரம்.

திங்கள், ஏப்ரல் 20, 2015

தமிழினம் தழைக்க ....

தமிழினம் தழைக்க 
தமிழகம் தழுவவேண்டும்... 
மதுவற்ற மாநிலத்தை !

.............கா.ந.கல்யாணசுந்தரம்.

வெள்ளி, ஏப்ரல் 10, 2015

சாவிகொடுத்த பொம்மைபோல் ....

எங்கு பார்த்தாலும் மக்கள் வெள்ளம் ...
வேகமாக நடந்து செல்வோரின் கைகள்
அவரவர்களின் மனவோட்டத்தின்படி
அசைந்து அசைந்து ஊஞ்சலாடுகிறது !
சாவிகொடுத்த பொம்மைபோல் சிலர்
முகத்தில் சலனமற்று பயணிக்கின்றனர் !
நாளைய வாழ்க்கையின் இருத்தலுக்காய்
இருப்புக்கொள்ளாமல் தேடுதல் வேட்டை !
இடையிடையே தர்மநெறி  தேர்வு நடத்தும்
பாதையோர பிதாமகர்கள் !
காலனின் கையாட்களாய்
சாலைகளெங்கும்  போக்குவரத்து
விதிமீறும் வாகனவோட்டிகள் !
தமிழில் பேசினால் அவமானமென்று
ஆங்கிலத்தில் மட்டுமே பதிலளிக்கும்
இளைய தலைமுறைகள் .....
எதையும் காதில் போட்டுக்கொள்ளாது
அலைபேசி பாடல்களில் மூழ்கியபடி
பேசா மானுட பிறவிபோல்
இருப்பிடத்தை தொலைத்தவாறே நகர்கிறது !
பணம் கொடுத்து எதையும் வாங்கும்
 நகரத்து பகட்டு நரக வாழ்வுதனில்
மனிதநேயம் மறைந்தே போனது !

.........கா.ந.கல்யாணசுந்தரம்.

வியாழன், ஏப்ரல் 09, 2015

சிறுவனின் வயிறும் ...

போஸ்டர் ஒட்டிய
சிறுவனின் வயிறும் ...
ஒட்டியிருந்தது பசியால் !

.....கா.ந.கல்யாணசுந்தரம்

செவ்வாய், ஜனவரி 20, 2015

கனவில் அந்த மூவரும்.....



ஊருக்குள் நுழையும்
தார்சாலையின்
ஓரத்தில்
சிதிலமடைந்த மண்டபம்...!
மண்டபத்தின் கூரையின்
நடுவில்
பெரியதாய் ஆலமரம்
தழைத்திருந்தது !

சிற்பவேலைப்பாடுகளுடன்
தூண்கள்...!
தரைப்பகுதி கற்கள்
களவாடப்பட்டு
குண்டும் குழியுமாய் இருந்தது !
சிலந்திக்கூட்டுக்குள்
சிக்கியிருந்த பூச்சிகள்
தவித்துக் கொண்டிருந்தன !

ஆடுமேயத்த சிறுவன்
ஒருவன்  
ஆட்டுக் குட்டியுடன்
அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தான்  
எதிரில் கட்டப்பட்டிருந்த
பஞ்சாயத்து நிழற்குடையின் கீழ்
அடுத்த பேருந்துக்காக
ஐந்தாறுபேர் நின்றிருந்தனர்!

கோடை காலத்தின்
வெப்பத்தை தாங்கமுடியாது  
அயர்ந்த உறக்கத்தில் இருந்த
அந்தச் சிறுவனின் கனவில்
மூவர் வந்து சென்றனர்.....
கண்விழித்த சிறுவனுக்கு
நினைவில் நின்றது....
கனவில் அந்த முவரும்
இவனுடன் அந்த மண்டபத்தில்
இளைப்பாறியதாய்......!
அவர்கள் கோவலன்,
கண்ணகியுடன் கவுந்தியடிகள்
என்பதுமட்டும்
அவனுக்கு தெரியவில்லை!

ஆனால் .......சரித்திர சான்றுகளின்
புனைவுகளில் என்றும்
இலயித்தவரே இருக்கின்றனர்
இன்றைய எழுத்தாளர்கள்!


............கா.ந.கல்யாணசுந்தரம் 

செவ்வாய், ஜனவரி 13, 2015

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...!



செந்நெல் தழைக்க இத்தரை மகிழும்
தைமுதல் நாளாம் பொங்கல் திருநாள் !
உழவர்தம் உளம்மகிழும் வேளாண் சிறக்க - தேசிய
நதிநீர் இணைப்பு வழி நலம் சேர்ப்போம் நாட்டில் !

........கா.ந.கல்யாணசுந்தரம் 

சனி, ஜனவரி 03, 2015

படிகட்டுகள் இல்லாத மலை...

படிகட்டுகள் இல்லாத மலை
மனிதன் ஏற முடியவில்லை...
மரங்கள் தழைத்திருக்கின்றன !

........கா.ந.கல்யாணசுந்தரம்.

வெள்ளி, ஜனவரி 02, 2015

தலைகுனியும் ....




வருத்தமுடன் தலைகுனியும்
துப்பாக்கிகள்.....
கோட்சேவுக்கு சிலை ?

.........கா.ந.கல்யாணசுந்தரம்.

வியாழன், ஜனவரி 01, 2015

புத்தாண்டே வருக.....


புத்தாண்டே வருக...
புதுவாழ்வு தருக
இனிதாய் மலரட்டும்
மனிதநேயம் மண்மீது
....கா.ந.கல்யாணசுந்தரம்.

வியாழன், டிசம்பர் 25, 2014

விண்ணில் ஒளிரும்....

விண்ணில் ஒளிரும் 
மனிதநேய மணிவிளக்காய் ....
மண்ணில் தவழ்ந்தார் இயேசு!

...........கா.ந.கல்யாணசுந்தரம்.

ஞாயிறு, நவம்பர் 23, 2014

புலம்பெயரும் நிழல்கள்....








விழுதலும் எழுதலும்
மானுடம் சந்திக்கும்
நிகழ்வுகள்...
அடிபட்ட காயங்களை
ரணமாக்கவே
சமுதாயம்
விரும்புகிறது....
மாற்று மருந்தொன்று
இருப்பதாய் தெரியவில்லையென
என்னுடன் கீழே
விழுந்தும் அடிபடாத
நிழல்  புலம்பியவரே
இடம்பெயர்கிறது....


..........கா.ந.கல்யாணசுந்தரம்.

திங்கள், நவம்பர் 03, 2014

பகிர்ந்தபோது!

நெஞ்சம் நிறைந்தது
அகழ்ந்த கிழங்கை
பகிர்ந்தபோது!

............கா.ந.கல்யாணசுந்தரம்