கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

திங்கள், ஆகஸ்ட் 05, 2013

எப்போது கண்டெடுக்கும் இன்னொரு காந்தியை ?









அகமும் புறமும்
என்னவென்று அறியாமலே
கலிங்கத்து பரணிக்கு
உரை எழுதுபவர்கள் !
நெல்லிக்கனியின்
சுவையறியாது
அதியாமானின்
வள்ளல்தன்மைக்கு
மகுடம் சூட்டுபவர்கள் !
ஆறாம் அறிவை
அடகுவைத்துவிட்டு
ஏழாம் அறிவை அலசுபவர்கள் !
இவர்களெல்லாம் ....
வெளிச்சத்துக்கு விளக்கு
ஏற்றுபவர்கள் !
வெளிச்சப்பார்வையில்
இவர்களெல்லாம்
இருளின் சொந்தக்காரர்கள்  !
சமுதாயப் புத்தகத்தின்
முகவரியைக் கூட
படிக்கத்  தெரியாத
சுயநலவாத
கூட்டமைப்பின்
கொள்கைச்செம்மல்கள் !
வாக்கு வங்கிகளை
கொள்ளையடித்து ....
மக்களாட்சியின் மகிமைக்கு
மலர்வளையம் வைப்பவர்கள்!
சுதந்திர தினம் ஆண்டுதோறும்
கொடியேற்றத்தில் மட்டுமே
கொண்டாடப்படுகிறது!
மதம் பிடித்த யானைகளாய்
சமுதாய சீர்கேடுகளை
கட்டவிழ்த்துவிடுவோரை
இனம்கண்டும் ...
ஆர்த்தெழாத  மானுடம்
எப்போது கண்டெடுக்கும்
இன்னொரு காந்தியை ?

..........கா.ந.கல்யாணசுந்தரம்








வியாழன், ஜூலை 11, 2013

தோள்களின் தோழமையோடு !






விடியல் பறவைகளோடு
எனது பயணிப்பும் !
வாழ்க்கையின் தொலைந்த
பக்கங்களைப் புரட்டியவாறே
கடக்கும் இரவுப் பொழுதுகள் !
பகல் நேரத்து தேடல்களில் !
புலம்பெயரும் சிந்தனைகள்
அரை குறை அறிவுஜீவிகளின்
அறிவுறுத்தல்களில்
செயலிழக்கும் மனம் !
உடன் பிறவா தோழர்களின்
தளர்ந்த கைகுலுக்கல்களில்
நட்பின் தேய்மானம் !
இறை வழிபாடுகளில்
இனம்புரியா நிலைப்பாடு !
கார் கால தொடர் மழையில்
நிரம்பும் ஏரிகளுக்கும்
வடிகால்கள் இருக்கின்றன !
ஆம் ....பிறரிடம் பகிரப்படாத
துன்பங்களுடன் எனது
மனமும் முன்வரிசையில்
அமர்ந்திருக்கிறது....
பாரம் சுமப்போர் போட்டியில்
கலந்துகொள்ள .....
தோள்களின் தோழமையோடு !

...........கா.ந.கல்யாணசுந்தரம்


சனி, ஜூலை 06, 2013

உனக்காகத் தேடுகிறேன்




வேறொரு பெயரை 
உனக்காகத் தேடுகிறேன் 
ஜாதிமல்லியே !

............கா.ந.கல்யாணசுந்தரம்

வெள்ளி, மே 10, 2013

சுமைதாங்கியிடம்

என்னை நான் வியந்து பார்க்கிறேன்
நெஞ்சு வெடிக்கும் மனச் சுமைகளைக் கூட
தாங்கிக்கொள்ளும் மனோபாவத்தை
இறைவன் எப்படி கொடுத்தானென்று !

எப்படியும் ஏதோ ஒரு விதத்தில்
ஒவ்வொருவருக்கும் மனச் சுமைகள்
இருந்து கொண்டுதான் இருக்கிறது!

சுமைகளை ஏற்றிய பார வண்டியாய்
இமைகளை மூடி ஒரு புத்தனைப்போல்
சும்மா இருத்தலின் சுகம் காணும்
முயற்சியில் தோல்விகளே நிதர்சனம்!

நடைபயணத்தில் தலைமுதல்
பாதம்வரை நரம்புகள் உயிர்த்தெழ
பாரம் பதவி விலகி பயணிக்க ஆரம்பித்தது !

கிராமத்து ஒற்றையடிப் பாதையில்
கம்பீரமாய் நின்ற சுமைதாங்கியில்
சாய்ந்தபடி ஓய்வெடுத்தேன்......
" தலைச் சுமைகளை மட்டுமே
இறக்கிவைக்கின்றனர் " என ஏக்கத்துடன்
முணுமுணுத்த சுமைதாங்கியிடம்
விக்கித்து வலுவிழந்துபோனேன் !


..............கா.ந.கல்யாணசுந்தரம்.

வியாழன், மே 09, 2013

கும்புடுங்க



கத்திரி வெய்யில்
தோள்பட்டை எலும்பை
உருக்கி எடுக்க
தென்னை இளநீர்
விற்றபடி கணவனைப்
பார்த்து மனைவி சொன்னாள் ....
"படிக்கவைக்காத
தென்னம்பிள்ளையை
படம்புடிச்சி தெனமும்
கும்புடுங்க !"

......கா.ந.கல்யாணசுந்தரம்,

எதிர்வினை ....



ஒரு கனவின் தொடர்
என்னுள் மின்னல் பூக்களை
மலரவிட்டது
தொடரும் தேடுதல்
எதற்காக என்பது மட்டும்
புரியாமல் இருக்கிறது
கைக்கு எட்டியது
வாய்க்கு எட்டாமலே
கனவுகள் முற்றுப்பெருகிறது
வானப்பெருவெளியில்
சிறகை விரித்து பறக்கிறேன்
மனிதநேயமுடன்
பறவைகளின் விசாரிப்புகள்
மனதை குளிர்விக்கிறது
சிகரங்களை நோக்கி
பயணம் தொடர்கிறது
என்னைப் பிடித்து
இழுத்து கீழே தள்ள
அங்கு எவரும் இல்லை.
இருப்பினும் எதிர்வினை
இல்லாததொரு தேசத்தில்
எனது இருப்பிடம்
சிறப்பானதாக தெரியவில்லை.

............கா.ந.கல்யாணசுந்தரம்  

ஞாயிறு, ஏப்ரல் 14, 2013

சித்திரை மலர்கள்









சித்திரை மலர்கள் மலரட்டுமே
சிந்தனைத் துளிகள் அரும்பட்டுமே
இத்தரை மகிழும் நன்னாளாம்
முத்திரைப் பதித்து வளரட்டுமே

விஜய ஆண்டின் வரவிங்கு
விளைக்கும் ஆயிரம் நலமிங்கு
புதுமைகள் பூத்துக் குலுங்கிடுமே
புன்னகை நம்மில் இலங்கிடுமே

மழலை மொழியிங்கு தமிழென்று
மனதால்  கொள்கை கொண்டிடுவோம் 
தமிழை சொல்லும் தமிழன் இங்கே
தலைநிமிர்ந்து வாழ்வது திண்ணியமே

.............கா.ந.கல்யாணசுந்தரம்


 

செவ்வாய், ஏப்ரல் 02, 2013

அமிழ்தான தமிழ் இன்று வேண்டும்


அமிழ்தான தமிழ் இன்று வேண்டும் - தினம்
அகம் குளிர நான் பாட வேண்டும்
இனிதான சொல் காண வேண்டும் - நம்
இல்லத்தில் கலந்துரையாட வேண்டும்

                                                            (அமிழ்தான )

மம்மி என்றழைக்காது மழலை - இனி
அம்மா என்றிசைக்கட்டும் குழலை
மொழியோடு உறவாடும் நெஞ்சம் - நல்
வழியோடு வளமாக வாழும்

                                                           (அமிழ்தான )

சான்றோர்கள் வளர்த்திட்ட செம்மொழி - வளர்
சான்றாக உடன்வாழும் அருள்மொழி
தாய்மொழி பகல்வதில் தாழ்வில்லை - இளைய
தலைமுறையே இனி பேசிடு தவறில்லை


                                                              (அமிழ்தான )

                                               ..................கா..கல்யாணசுந்தரம். 

சனி, மார்ச் 09, 2013

பல்லாண்டு வாழ்கவென வாழ்த்துகிறோம்

 
 


மொட்டவிழ்ந்த மலர்போல மழலை முகம்
பொட்டிட்டு பூச்சூடி பார்த்தாலே போதும்
கட்டவிழ்ந்த தாழை மலர் போல அழைப்பாள்
கொட்டுகின்ற அருவியென துள்ளி எழுவாள்
குழல்கூட இசைக்காமல் சற்றே நிற்கும்
மழலை இவள் வாய் மொழியில் தோற்கும்
வண்ணத்து பூச்சியென சிறகடித்து வருவாள்
காண்போரின் கையசைப்பில் கண்சிமிட்டி சிரிப்பாள்
முகமறியா போதிலும் மடிமீது வந்தமர்வாள்
கொடிமுல்லைப் பூவாய் மனம் கவர்ந்திழுப்பாள்
வினோத்குமார் கலைவாணி தம்பதியர
பெற்றெடுத்த வாசமிகு பெரும் செல்வம்
எங்களின் ஆசைமிகு பெயர்த்தி பிரணீ த்தா
மழலையிவள் நேசமிகு பிறந்தனாளின்று
உவகையுடன் பாசமிகு மனதுடனே
பல்லாண்டு வாழ்கவென வாழ்த்துகிறோம்
தாத்தா பாட்டி !
கா .கல்யாணசுந்தரம்
அருள்செல்வி கல்யாணசுந்தரம்
செய்யாறு
09.03.2013



Reply
Forward


சனி, மார்ச் 02, 2013

அடையாளங்கள்





முயல்களைவிட ஆமைகளுக்கு
தெரிந்திருக்கிறது 
பாதையின் அடையாளங்கள்                    

........... கா.ந. கல்யாணசுந்தரம்    

                                                                                                                                                                     

திங்கள், பிப்ரவரி 25, 2013

குறையாத பொக்கிஷங்களாய் !










பனி படர்ந்த புல்வெளி
வெண்மேகம் அணைத்த
மலைமுகடுகள்
நீர் நிறைந்த பரந்த கிராமத்து எரி
வெண்ணிற கொக்குகள்
கூட்டமாய் பறந்து அமரும்
நாற்றங்கால் வயல்கள்
ஒற்றையடிப்பாதையில்
கால்நடைகளின் அணிவகுப்பு
தென்றல் தாலாட்டும்
தென்னை மரங்கள்
மாந்தோப்புக்குள் இசைக்கும்
இளம் குயில்கள்
அருவி கொட்டுதலின் 
சாரல் துளிகள் 
மாலை நேரத்து ஏரிக்கரையில் 
நிழலோவியமாய் 
வீடுதிரும்பும் தொழிலாளிகள் 
இன்னும் எத்தனை எத்தனையோ 
நெஞ்சில் இன்னும் 
வரைபடமாய் எனது ....
கிராமத்து வாழ்க்கையின் 
கையிருப்புகள் !
பிறரிடம் பகிர்ந்தும் 
குறையாத பொக்கிஷங்களாய் !
......கா.ந.கல்யாணசுந்தரம் 

புதன், பிப்ரவரி 20, 2013

பாவேந்தர் பாரதிதாசன் பாடல்கள்










பாவேந்தர் பாரதிதாசன் பாடல்கள்

தமிழ்க் காதல்

கமலம் அடுக்கிய செவ்விதழால் - மலர்க்
காட்டினில் வண்டின் இசைவளத்தால்
கமழ்தரு தென்றல் சிலிர் சிலிர்ப்பால் - கருங்
கண்மலரால் முல்லை வெண்ணகைப்பால் - மயில்
அமையும் அன்னங்களின் மென்னடையால் - மயில்
ஆட்டத்தினால் தளிர் ஊட்டத்தினால்
சமையும் ஒருத்தி - அப் பூஞ்சோலை எனைத்
தன் வசம் ஆக்கிவிட்டாள் ஒருநாள்.

சோலை அணங்கொடு திண்ணையிலே - நான்
தோளினை ஊன்றி இருக்கையிலே
சேலை நிகர்த்த விழியுடையாள் - என்றன்
செந்தமிழ்ப் பத்தினி வந்துவிட்டாள்!
சோலை யெலாம் ஒளி வானமெலாம் - நல்ல
தோகையர் கூட்டமெலாம் அளிக்கும்
கோல இன்பத்தை யென் உள்ளத்திலே - வந்து
கொட்டி விட்டாள் எனைத் தொட்டிழுத்தாள்!

மென்காற்றும் வன்காற்றும்

அண்டங்கள் கோடி கோடி அனைத்தையும் தன்ன கத்தே
கொண்ட ஓர் பெரும் புறத்தில் கூத்திடு கின்ற காற்றே!
திண்குன்றைத் தூள் தூளாகச் செய்யினும் செய்வாய் நீஓர்
துண்துளி அனிச்சம் பூவும் நோகாது நுழைந்தும் செல்வாய்! 14

தென்னாடுபெற்ற செல்வம்

உன்னிடம் அமைந் திருக்கும் உண்மையின் விரிவில், மக்கள்
சின்னதோர் பகுதி யேனும் தெரிந்தார்கள் இல்லை; யேனும்
தென்னாடு பெற்ற செல்வத் தென்றலே உன்இன்பத்தைத்
தென்னாட்டுக் கல்லால் வேறே எந்நாட்டில் தெரியச் செய்தாய்? 15

தென்றலின் நலம்
குளிர்நறுஞ் சந்தனஞ் சார் பொதிகையில் குளிர்ந்தும், ஆங்கே
ஒளிர்நறு மலரின் ஊடே மணத்தினை உண்டும், வண்டின்
கிளர்நறும் பண்ணில் நல்ல கேள்வியை அடைந்தும் நாளும்,
வளர்கின்றாய் தென்ற லேஉன் வரவினை வாழ்த்தா ருண்டா? 16

அசைவின் பயன்

உன்அரும் உருவம் காணேன் ஆயினும் உன்றன் ஒவ்வோர்
சின்னநல் அசைவும் என்னைச் சிலிர்த்திடச் செய்யும்! பெற்ற
அன்னையைக் கண்டோ ர், அன்னை அன்பினைக் கண்ணிற் காணார்,
என்னினும் உயிர்க் கூட்டத்தை இணைத்திடல் அன்பே அன்றோ? 17

தென்றலின் குறும்பு

உலைத்தீயை ஊது கின்றாய்; உலைத்தீயில் உருகும் கொல்லன்
மலைத்தோளில் உனது தோளும், மார்பினில் உன்பூ மார்பும்
சலிக்காது தழுவத் தந்து குளிர்ச்சியைத் தருவாய்! பெண்கள்
விலக்காத உடையை நீ போய் விலக்கினும், விலக்கார் உன்னை! 18

குழந்தையும் தென்றலும்

இழந்திட்டால் உயிர்வா ழாத என்னாசை மலர்மு கத்துக்
குழந்தையின் நெற்றி மீது குழலினை அசைப்பாய்; அன்பின்
கொழுந்தென்று நினைத்துக், கண்ணிற் குளிர்செய்து, மேனியெங்கும்
வழிந்தோடிக், கிலு கிலுப்பை தன்னையும் அசைப்பாய் வாழி! 19

தென்றல் இன்பம்

இருந்தஓர் மணமும், மிக்க இனியதோர் குளிரும், கொண்டு
விருந்தாய்நீ அடையுந் தோறும் கோடையின் வெப்பத் திற்கு
மருந்தாகி அயர்வி னுக்கு மாற்றாகிப் பின்னர், வானிற்
பருந்தாகி, இளங்கி ளைமேற் பறந்தோடிப் பாடு கின்றாய்! 20


தென்றலின் பயன்

எழுதிக்கொண் டிருந்தேன்; அங்கே எழுதிய தாளும் கண்டாய்;
வழியோடு வந்த நீயோ வழக்கம்போல் இன்பம் தந்தாய்;
' எழுதிய தாளை நீ ஏன் கிளப்பினை' என்று கேட்டேன்,
புழுதியைத் துடைத்தேன் என்றாய்; மீண்டும் நீ புணர்ந்தாய் என்னை! 21

தென்றற்கு நன்றி

கழுகொடு, நெடிய தென்னை, கமழ்கின்ற சந்த னங்கள்,
சமைகின்ற பொதிகை அன்னை, உனைத்தந்தாள் தமிழைத் தந்தாள்
தமிழ் எனக்கு அகத்தும், தக்கதென்றல்நீ புறத்தும், இன்பம்
அமைவுறச் செய்வ தைநான் கனவிலும் மறவேன் அன்றோ? 22

தென்றலின் விளையாட்டு

களச்சிறுதும்பி பெற்ற கண்ணாடிச் சிறகில் மின்னித்,
துளிச்சிறு மலர் இதழ்மேல் கூத்தாடித் துளிதேன் சிந்தி,
வெளிச்சிறு பிள்ளை யாடும் பந்தோடு விளையாடிப், போய்க்
கிளிச்சிற காடை பற்றிக் கிழிக்கின்றாய் தென்ற லேநீ! 23
 
 
.........பாவேந்தர் பாரதிதாசன் .


வெள்ளி, பிப்ரவரி 08, 2013

யாருக்கும் தெரியவில்லை

மாவட்ட கல்வி அதிகாரி
வருகையால் பரபரப்பானது
உயர்நிலைப்பள்ளி....
சீருடை மாணவர்களின்
அணிவகுப்பில் மகிழ்வெய்திய
அதிகாரி ......
ஒரு மூடிவெயத்த அறையைக்
காண்பித்து .....
என்னவென்று வினவ ...
முப்பது ஆண்டுகளாய்
பழுதான மர பெஞ்சுகள்
அடுக்கிய அறை
என பதில் வந்தது!
அறையைத் திறந்து ...
பத்தாம் வகுப்பு
பென்ச்சுகளைத் தேடினார்
கல்வி அதிகாரி!
உடைந்திருந்த அந்த
மர இருக்கையில் அமர்ந்தார் !
யாருக்கும் தெரியவில்லை
அவர் இந்த இருக்கையில்
அமர்ந்து இந்த பள்ளியில்
படித்தவர் என்பதை!

...கா.ந.கல்யாணசுந்தரம்

கடிகார முள்

அம்மா அலறியபடி தேடினாள்...
" எம் புள்ளைய காலைல இருந்து
காணலையே " என புலம்பியவாறு !
" வொம் பையன் மூனாவதூட்டு
புள்ள பார்வதியோட கூட்டாளி
போட்டுகினு கொல்லப்புறம் போனது"
இது பக்கத்துவீட்டு பொன்னம்மாளின்
அங்கலாய்ப்பு!
ஒரு பனைவோலை கடிகாரம்
செய்து பார்வதிக்கு கட்டிவிட்ட
நட்பின் கரங்கள் அங்கு .....
தேடிக்கொண்டிருந்தது
வேலமரத்து முட்களுக்காக....
சரியான கடிகார முள்
கிடைத்துவிட்ட பெருமிதத்தில்
அந்த எட்டு வயது சிறுவன்
தோழியுடன் நடந்தான் ......
அவன் வீடு இருந்த அந்த 
கிராமத்து தெரு முனைக்கு...
காலத்தை வென்ற
ஒரு கர்மவீரனாக !

.........கா.ந.கல்யாணசுந்தரம்.

புதன், ஜனவரி 30, 2013

நூலறுந்த பட்டங்கள்!








காகிதம், நூல்கண்டு, தென்னங்குச்சி
காற்றுக்குள் பிரவேசிக்க முயற்சி
சோற்றுப் பானையை திறந்து
சுடு சோற்றைப் பிசைந்து
பசையாக்கினோம்.....
அழகிய பட்டம் உருவாக்கினோம்!
வெட்டவெளி மைதானத்தில்
கூட்டமாய் சென்று காத்தாடி பட்டம்
கலர் கலராய் பறக்கவிட்டபடி
விண்ணையே அண்ணாந்து
விழிபிதுங்க பார்வையிட்டோம்....
பட்டங்கள் உயர உயர பறந்தபடி
எங்கள் மனங்களில் குதூகலம் !
சில காத்தாடி பட்டங்களில்
தந்திகளும் அனுப்பப்பட்டன.....!
மாஞ்சா தடவிய நூல்கண்டுகள்
அஞ்சாமல் பதம்பார்த்தன
உயரும் பட்டங்களின் எண்ணிக்கையை !
பசிவேளை வந்தாலும்
பட்டங்களை இறக்க மனமின்றி
மரத்தில் கட்டிவைத்து அழகு பார்த்தோம்!
எப்போதாவது மின்கம்பிகளில்
சிக்கித்தவிப்பதுண்டு
நூலறுந்த பட்டங்கள்!
இப்போதெல்லாம் வேலை கொடுக்காமலே
பெட்டிக்குள் சிக்குண்டு
சிறைபட்டுப்போகின்றன......
பல்கலைப் பட்டங்களும் !

..........கா.ந.கல்யாணசுந்தரம்.


திங்கள், ஜனவரி 21, 2013

பத்தாம் பசலிக்காரன்

ஊருக்கு செல்லும்
ஒற்றையடிப் பாதைகூட
பாதி காணாமல் போனது!
நல்ல தண்ணீர் குளம் முழுக்க
சாக்கடை நீரோடு
குட்டையாய் காட்சி தர
களத்துமேட்டு குடியிருப்புகள்
அடுக்குமாடியாய் இருந்தது!
கிராமம் நகரமாய்
மாறியிருந்தது!
கிழக்குபுறத்து அம்மன்கோயில்
புது கோபுரத்துடன்
மிளிர்ந்தது!
ஆனால் என்மனம் மட்டும்
ஏங்கித்தவித்து........ இளைப்பாறியது
ஒரு பெரிய ஆலமரத்தடியில்!
30 ஆண்டுகள் இடைவெளியில்
நாங்கள் நட்ட ஆலமரம்
தழைத்திருந்தது அப்படியே !
மகிழ்வில் உரக்க கத்தினேன்....
" மரம் இல்லா வாழ்வு
மரண வாழ்வு " ..என்றவாறு.
அங்கே சென்றவர்களின் பார்வை
என் மீது........
இவன் ஒரு பத்தாம் பசலிக்காரன்
என சொல்லியவாறு.

....கா.ந.கல்யாணசுந்தரம்.