கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

திங்கள், அக்டோபர் 10, 2011

சருகுகள்
















பிறர்க்கு உதவி இன்பம் காணும்
சிறு பிள்ளைவயதை நினைத்தே,
வாழ்ந்த இவளின் பருவம்
சமுதாய வீதியில் - சில கயவர்கள்
மடியில் தஞ்சும் புகுந்தது...
பட்டாம்பூச்சியாய் சிறகடித்து
பறந்த காலங்கள் வெறும்
கூட்டுப் புழுவானாள்!
கால் வயிற்று கஞ்சிக்கு காலம் தள்ள....
வயிற்றில் விளைந்த கருக்களும்
தரிசுநில வித்தாகிப் போனது!
ஒப்பிலா இன்பமுதை இரவுக் கூடலில்
தந்தவளின் உடலின்று முடங்கியது!
நுகர்ந்தோர் எல்லாம் நகர்ந்து போயினர்
அந்த நடை பாதை நுனியை யாரும் நாடவில்லை
அள்ளியெடுத்து முத்தமிட்ட மேனிக்கு
இன்று கொள்ளிவைத்து
பால் வார்க்க யாருமில்லை!
சமுதாயம் பெற்ற சந்தனப் பேழை
சாக்கடைப் பொருளாய் சிதறிக் கிடக்கிறது!
பட்டமரக் கிளை மீதமர்ந்த கழுகுக்கு
பிணவிருந்தாகி மடிந்து போனாள்!
அந்தோ!...... சமுதாயம் பெற்ற
விலைமகளிர் எல்லாம்
இளவேனிர்காலத்து உதிர்ந்த
சருகுகளே!

......கா.ந.கல்யாணசுந்தரம்.

சனி, அக்டோபர் 08, 2011

ஒரு கவிதையானது.....



எதற்காக மழலயின் மௌனம்?
இந்த மெழுகு வார்த்திகளை
அணைத்துதான் பிறந்தநாள்
கொண்டாடவேண்டுமா?
கேட்கின்றன இவளின் விழிகள்!
தமிழ்க் கவிதையாய்
எனை ஈன்ற பெற்றோருக்கு
ஒரு விண்ணப்பம்.....
மெழுகினை அணைக்காமல்
பிறந்தநாள் கொண்டாட
அனுமதி தாருங்கள்!
ஆமாம் இந்த மழலயின் எண்ணங்களில்
மனிதநேயத்தின் ஒளி பிறந்துள்ளாது!
இந்த காத்திருப்பு எமக்கு
ஒரு கவிதையானது!

.......கா.ந.கல்யாணசுந்தரம்.

எதிர்பார்ப்பும் கூடத்தான்!

இயற்கையின் யதார்த்தங்களில் இருந்து
விடுபட்டுப்போன காட்சிகள்!
இனிய இராகங்களின் புரிதல் இல்லாத
பாடல்களின் அரவணைப்புகளில்
விரசமான உடை அணிவிப்புகள்!
மனதைத் தொடாத குத்துப்பாடல்கள்!
நாமென்ன பத்துப்பாட்டும் எட்டுத்தொகையுமா
கேட்கின்றோம்?
வன்முறையும் விரசமும் வாடிக்கையாகிப்போன
இந்த சினிமா ஊடகம்
இளையதளைமுறைத் தோட்டத்து
நச்சு களைகளாக அல்லவா இருக்கிறது.
அறம், பொருள், இன்பம் எனும்
வாழ்வியல் தத்துவங்கள்
நவீனத்துவமாக இந்த
சினிமா ஊடகங்களில்
ஏன் உலா வரக்கூடாது?
இது இன்றைய இளைஞ்சர்களின்
வினாவல்ல!
எதிர்பார்ப்பும் கூடத்தான்!

..........கா.ந.கல்யாணசுந்தரம்.

வியாழன், அக்டோபர் 06, 2011

வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்



வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்
வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்
கொள்ளை இன்பம் குலவு கவிதை
கூறும் பாவலர் உள்ளத்தில் இருப்பாள்
உள்ளதாம் பொருள் வேதி உணர்ந்தே
ஓதும் வேதத்தின் உள்நின்று ஒளிர்வாள்
கள்ளமற்ற முனிவர்கள் கூறும்
கருணை வாசக உட்பொருள் ஆவாள்
மாதர் தீம்குரல் பாட்டில் இருப்பாள்
மக்கள் பேசும் மழலையில் உள்ளாள்
கீதம் பாடும் குயிலின் குரலை
கிளியின் நாவை இருப்பிடம் கொண்டாள்
கோதகன்ற தொழிலுடைத்தாகி
குலவு சித்திரம் கோபுரம் கோயில்
ஈதனைத்தின் எழிலிடை உற்றாள்
இன்பமே வடிவாகிட பெற்றாள்
வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்
வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்
கொள்ளை இன்பம் குலவு கவிதை
கூறும் பாவலர் உள்ளத்தில் இருப்பாள்

வெள்ளி, செப்டம்பர் 30, 2011

கொடியில் பூத்த முல்லை!



இருவர் தந்த அமுதம் - இளம்
காலைப் பொழுதின் குமுதம்!
சின்ன விழிகள் அசைத்து - இவள்
வண்ண கவிதை வடிப்பாள்!
மெல்ல நடந்து வந்து - ஒரு
முத்தம் தந்து சிரிப்பாள்
பேசும் மழலைக் கிள்ளை - இளம்
கொடியில் பூத்த முல்லை!
மொழிகள் அறிந்த உண்மை - பேசும்
மழலைக்கு இணை ஏது?

......கா.ந.கல்யாணசுந்தரம்.

ரணம் ஆறாத வெந்த நெஞ்சோடு....
















சந்தைக்கு செல்லும் பாரவண்டி
சரக்கு மூட்டைகளை ஏற்றியதும்
அசைய மறுத்த எருதுகளை...
அவன் வெறுப்புடன் பார்த்தான்!
கடும் வெயில் காதுகளைக்
குடையும் முன் அடுத்த கிராமத்து
சந்தைக்கு செல்ல வேண்டும்!
சகட்டுமேனிக்கு அடித்த அடியில்
சாட்டைகூட பிய்ந்து போனது!
நேரத்தோடு பறந்து சென்று
நூற்றுக்கணக்கில் வியாபாரம் செய்து
முதலாளியிடம் நல்ல பெயர்
வாங்கியும்கூடமனதில் நிம்மதி இல்லை!
மாலையில் மனைவி குப்பம்மா
பச்சிலையால் எருதுகளின்
சாட்டைத் தழும்புகளுக்கு
பத்து போடும் போது இவன் மட்டும்
ரணம் ஆறாத வெந்த நெஞ்சோடு....
வாயில்லாத ஜீவனாய்
விக்கித்து நின்றான்!

.........கா.ந.கல்யாணசுந்தரம்

புதன், செப்டம்பர் 28, 2011

தீர்வு...


பிறந்தது, வளர்ந்தது
வாழ்ந்தது....என்று
நம் வாழ்க்கை எப்போதுமே
யதார்த்தமாய் இருந்தாலும்...
உள்ளம் என்ற உன்னத
உணர்வுப் பூங்காவில்
உணர்ந்தது, நெகிழ்ந்தது
மகிழ்ந்தது என்னும்
வண்ணமலர்க் கூட்டங்கள்
வாடாமல் மணம்
வீசுகின்றன...

உறவுகள், மரபுகள்
சொந்தங்கள், பந்தங்கள்
இவையெல்லாம்....
மானுடத்தின்
வரவுகள் என்றாலும்,
சேவைகளும், சிந்தனைகளின்
பகிர்வுகளும் நமது
விருதுகள் என்ற நினைவுகள்
வாழ்நாளில் ஆளுமை செய்ய...
எனது எச்சங்களுக்கு
நானே தீர்வு காணுகின்றேன்!

......கா.ந.கல்யாணசுந்தரம்

செவ்வாய், செப்டம்பர் 27, 2011

பாச வலைகள்....


உலகம் ஒரு மாயை என்று
சொல்வதை அறிவியல் ஆமோதிக்காது!
விதி என்பது விதிக்கப்பட்ட
ஒரு அமானுஷ்யம்........
என ஒப்புக்கொள்ளாத மானுடம்
அதர்மத்திடம் உறவுகொள்கிறது!
செயல்பாடுகள் என்றுமே
அவரவர் ஜனித்த நட்சத்திர
ராசி பலன்களால்தான்
என்றெல்லாம் கூறுவதை
பலநேரங்களில் நம்பத்தான்
வேண்டியிருக்கிறது!
மனிதத்தின் பலவீனங்கள்
பலவாறு கூறுபோட்டு பார்க்க
மனிதமே முயலுகிறது!
ஆளுமை எண்ணங்கள் தலைப்படும்போது...
மனசாட்சி ஏனோ அரசாட்சி செய்வதில்லை!
இன்னொரு பிறப்பின் ரகசியம்
என்னவென்று அறியாத
தூண்டில் மீன்களாய் மனிதவாழ்க்கை!
இருப்பினும்......
ஆசை எனும் வாழ்க்கை கடலில்
உறவுத் தோணிகள்
இன்றும் சுமக்கின்றன...
பாச வலைகளை!


.........கா.ந.கல்யாணசுந்தரம்.

திங்கள், செப்டம்பர் 26, 2011

நெஞ்சமதைத் தழுவும் வரை




இதயத்தை ஒருமுறை
கேட்டுக்கொள்கிறான் ...
வெடித்துவிடாமல்
வாழவேண்டுமென்று....
பாசம் நேசமெல்லாம்
பங்குபோட்டு
பாதியிலே ஒதுங்கிவிடும்!
உறவுகளின் ஒப்பாரியில்
ஓரங்க நாடகங்கள்
இடையிடையே அரங்கேறும்!
நட்பு வட்டங்கள்
அஞ்சலிக்கு ஆள் சேர்க்கும்!
கரும்பலகையில் கல்வி
கற்றதெல்லாம்
கல்லறை வரைக்கும்
கொண்டுசெல்லும்!
இருந்தாலும் .....
மீண்டும் மீண்டும்
கேட்டுக்கொள்கிறான்
இதயத்திடம்....
'வெடித்துவிடாதே
நினைவுக் கூடே...!
சற்றேனும் காத்திரு
சிநேகத்தின் சுவாசத்தை
மொத்தமாய் ஆளுகின்ற
என்னவளின் மூச்சுக்காற்று
நெஞ்சமதைத் தழுவும் வரை!'

....கா.ந.கல்யாணசுந்தரம்


மகத்தானது மனிதநேயம்
















எங்கே போகிறோம்?
என்று நமக்கு நாமே
கேள்வி கேட்டுக்கொள்வோம்!
மானுடம் வாழும் பூமியில்
விசாரிப்புகளின்றி
வறண்ட பாலைவனமாய்
ஈரமற்ற நெஞ்சின்
உடல் கூடுகளாய்
புழுவினும் கேவலமாய்
மனச் சுமைகளை மட்டுமே
சுயநலத்தின் சிகரமாக்கிக்கொண்டு
ஊர்ந்து செல்கிறோம்!
மானுடமே!.... வாழும் வாழ்க்கையில்
மகத்தானது மனிதநேயம்
என்பதைவிடுத்து பயணிக்கிறோம்!
உனது பாலைவன பயணத்திலும்
புதைகுழிகள் இருப்பதை மறந்து!


...கா.ந.கல்யாணசுந்தரம்.



சனி, செப்டம்பர் 24, 2011

அனுபவப் பெட்டகங்கள்
















எங்கேயோ எப்போதோ
செய்த தவருகள்தாம்
இங்கே, இப்போதே
திருத்தப்படுகின்றன...
முற்பகலும் பிற்பகலும்
அடுத்தடுத்த இயக்கங்களாயின!
இந்த மானுடத்தின்
பாதயாத்திரை இன்னும்
முற்றுப்பெறவில்லை!

தனக்கென சந்ததிகளையும்
சொத்துக்களையும் சேர்க்கின்ற
மானிடத் திசுக்கள்,
இனியாவது
சமுதாயச் சிந்தனைகளை
நல்லதொரு மறுமலர்ச்சிக்கு
பயிரிட்டு பேணி காக்க
மானுட மண்டையோட்டு
செதில்களுக்கு
சொல்லி வைக்கட்டும்!

அன்பெனும் சொல்லறியாது,
அறிவுத் தளர்ச்சியால்...
வயதில் பெரியோரை
காப்பகத்தில் வளர்க்கின்ற
இயந்திர வர்க்கத்தினைக்
காணுகின்றோம் நிலமதிலே!
இல்லை ....இல்லை...
இனியாவது இளைய தலைமுறையே!
மனிதநேயத்தின் மணிவிளக்காய்,
அனுபவப் பெட்டகங்களை
அரவணைப்போம் வாரீர்!

....கா.ந.கல்யாணசுந்தரம்

புரிதலைத் தேடியது


காதலின்போது காட்டிய
பரிவும் அன்பின் அரவணைப்புகளும்
திருமண வாழ்வுதனில்
புரிதல் இல்லாது போனதென்ன?
உண்மைக் காதலென
இந்த உள்ளம் நம்பியதெல்லாம்
பொய்மையென காலம்
கற்பித்ததென்ன?
காதலுக்கும் காமத்திற்கும்
அர்த்தம் புரியாது
புரிதலைத் தேடியது....
இந்தப் பேதையின் குற்றமே!

......கா.ந.கல்யாணசுந்தரம்

வெள்ளி, செப்டம்பர் 23, 2011

அப்போதே தன்னுள்....


வாழ்க்கை சிகரத்தின்
ஒவ்வொரு படியிலும்
நினைத்துப் பார்க்கிறேன்....
வியந்து நினைக்கிறேன்!
அகரம் பயில ....
துணையாய் நின்ற
தகரப் பலகையின்
கருமை வண்ணத்தை!
அப்போதே தன்னுள்
அடக்கமாய் ஒளித்து
வைத்திருந்த ஒளிமயமான
என்னுடய எதிர்காலத்தை!

.....கா.ந.கல்யாணசுந்தரம்.

வியாழன், செப்டம்பர் 22, 2011

எழிலார்ந்த ஓவியம்


மாலையின் வரவுக்காக
மணிக்கணக்காய் தவமிருக்கிறேன்...
காரணம்....
பொன்னிற மஞ்சள் வெயிலில்
மயங்கும் நதிக்கரை
தென்னங் கீற்றுகள்!
இறைவன் தினம் தினம்
உயிர்த்துடிப்பாய் வரைகின்ற
இயற்கையெனும் இளையகன்னியின்
எழிலார்ந்த ஓவியம்!
சுருங்கச் சொன்னால்...
நான் இன்னும் உயிரோடிருப்பது
உங்களின் இனிய தோற்றங்களால்!

.........கா.ந.கல்யாணசுந்தரம்.

இத்தரையில் பெற்ற சுகம்...





















உனது மென்மையான
விரல் நுனிகளில்
அந்த வயலின்
பிரசவிக்கும்
இன்ப நாதங்கள்....
ஒரு குளிர்கால
முன்பனி காலத்தில்
பூத்துக் குலுங்கும்
செந்தூரப் பூக்களின்
அலாதியான வாசம்...
இரவும் பகலும்
சந்திக்கும் அந்த
அந்திசாயும் நேரத்து
பறவைகள் சங்கமிக்கும்
சலசலப்பு ஓசை!
இரவு நேரத்து
அமைதியின் மடியில்
குழந்தையை தூங்கவைக்கும்
ஒரு தாயின் தூரத்து
தாலாட்டுப் பாடல்.....
இறைவா....
இத்துணை மனிதநேயமிக்க
உறவுகளின் மேன்மயை
அதன் புனிதத்தை
அறியவைத்தாயே...
தாயே...இத்தறையில்
இப்பிறப்பு பெற்றசுகம்
இனிதானதென்று
இயம்பிட இன்று நீயில்லை!
உன் கைப்பிடித்து
உலாவிய நாட்களுக்கு
இனிதான நிகழ்வுகளை
காணிக்கையாக்குகிறேன்!

...கா.ந.கல்யாணசுந்தரம்.




புதன், செப்டம்பர் 21, 2011

களத்துமேட்டு வாழ்த்து...

களத்துமேடு குடியிருப்பில் அவள்
கதிர் அறுத்து கட்டு சுமந்து நடக்கையில்
காத தூரமானாலும் பின்னால் நடப்பதற்கு
வெல்லமென காத்திருப்பான்!
தென்னைமரத்து குயில் கூட
தோற்றுப்போகும் அவளது குரலில்!
மாந்தோப்பு மயில் கூட்டமும்
மெய்மறந்து ஆடாது நிற்கும்
அவளது இடையழகு நடையின் போது!
கருத்தொருமித்த காதலானது
இவர்களது நட்பின் மேன்மை!
நெல்லடித்து தூற்றியதுபோல்
சொல்லால் அடித்து துறத்தினார்கள்!
நூலருந்த பட்டமென அலைபாய்ந்து
செயலற்ற பிம்பமாய் அவளின் வாழ்வு!
கடலலை ஒதுக்கிய ஒற்றைக் கால் செருப்பாய்
கிராமத்து எல்லைதனில் ஒதுக்கப்பட்டான்!
எழிலார்ந்த வளமிக்க வயல்பரப்பில்
பழிசொல்லும் கூட்டம்தான் பெருகியது!
இயற்கை இயம்புவதை கேட்காத
ஈனபுத்தி மாக்கள் இனியேனும் மாறட்டும்!
விரும்பும் மனதின் வசந்த காலங்களை
அரும்பிட நீர்பாச்சும் நிலை வரட்டும்!
களத்துமேட்டு கதிரடிக்கும் காலமதில்
தூற்றிய பதர்களும் இருக்கத்தான் செய்யும்!
காளைகளின் மணியோசை இவர்களது
காதலை அங்கீகரிக்கட்டும் அதுபோதும்!

.................கா.ந.கல்யாணசுந்தரம்.

ஞாயிறு, செப்டம்பர் 18, 2011

வீடுபேற்றின் வாயிலை நாடு!




















நிலத்தோடு ஸ்பரிசிக்கும் கால்கள்
நெஞ்சுக்குள் ஈரம் எப்போதும் பிரவாகமாய் !
பிராணத்தின் சூட்சுமத்தை அறிந்த இதயம்
தணலாய் எப்போதும் அடிவயிற்றின் யாகம்
கண்மணிக்குள் அடங்கிவிடும் நீலவானம்
ஐம்பூதங்களை ஒருங்கிணைத்து
சும்மா இருத்தலின் சுகம்தானைக் காண
அம்மா என்று உச்சரித்து அமர்ந்தேன்!
அமர்ந்தநிலை தியானத்தின் உச்சத்தில்
ஒரு எல்லையற்ற நிர்மலமான
அகண்டவெளியின் ஓங்காரத்தின்
ஒளியழகைக் கண்டேன்!
உருவமும் அருவமும் இல்லா
நிலை எய்தும் உன்னதம்
சும்மா இருத்தலின் சுகம்தானில்
மண்டிக் கிடக்கிறது மனமே!
அலைபாயும் எண்ணங்களை
ஒருமுகப்படுத்து!
சிலையென அசையாது
சின்முத்திரைப் பதித்து
அன்பின் வழியது உயிர்நிலையென
அறப்பொருளாய்
வீடுபேற்றின் வாயிலை நாடு!

.........கா.ந.கல்யாணசுந்தரம்.

வெள்ளி, செப்டம்பர் 16, 2011

வெற்றிக்கான விழுப்புண்கள்

முழு மனதோடு
நம்மை
ஏற்றுக் கொள்ள
யாராவது
இருக்கிறார்களா
என ஏக்கத்துடன்
காத்திருக்கின்றன
தோல்விகள்!
காரணம்...
அவைகள்
வெற்றிக்கான
விழுப்புண்கள் என
நம்மால்
அடையாளம்
காணாததால்!

வியாழன், செப்டம்பர் 15, 2011

எங்கும் தமிழே முழங்கக் கேட்போம்





எங்கும் தமிழே முழங்கக் கேட்போம்

எதிலும் தமிழே வழங்கக் கேட்போம்

கங்கை தவழும் இமயம் கடந்து

கன்னித் தமிழைக் கொண்டு செல்வோம்

பொங்கும் தமிழின் இலக்கியச் சுவையை

பூமியின் மீது உலவ விடுவோம்

திங்கள் செல்லும் விண்வெளிப் பாதையில்

மங்காத் தமிழொளி சிந்தக் காண்போம்!


..........கா.ந.கல்யாணசுந்தரம்

















புதன், செப்டம்பர் 14, 2011

தேவை ஒரு மந்திரக்கோல்....


ஊழல், ஊழல், ஊழல்,
எங்கும் எதிலு ஊழல்....
கறுப்புப்பணம்.....இந்தியா
சுதந்திரம் வாங்கும் முன்பே
புழக்கத்தில் வழக்கமாகிப்போன
கணக்கில் வாராத பணம்.
உண்ணாவிரதம், சத்தியாகிரகம்
இவையெல்லாம் தேசத் தந்தை
மகாத்மாவினால் அடையாளம்
காணப்பட்டவை !
அரசுக்கு அறிவுறுத்தலாமே தவிர
மக்கள் வெள்ளத்தில்
வன்முறையை கட்டவிழ்க்கலாமா?
ஆம்..... இப்போது தேவை
நிச்சயம் தேவை ஒரு மந்திரக்கோல்....
ஒரு சமூக நீதி படைக்க!