கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

செவ்வாய், ஜூலை 05, 2022

கம்பன் கவிநயம்

 








அறிவியல் தகடுகள்

இருள் முடிச்சு அவிழ வெளிச்ச ஊடுருவலில் கொள்ளைபோகும் காலம் மீட்டெடுக்க முடியாது தவிக்கின்ற மனிதம் அடுத்த நகர்வுக்கு தயாராகிறது அவ்வப்போது காலக்கண்ணாடி உடைக்கப்பட்டு எவ்வித பிரதிபலிப்புமின்றி வெற்றுச் சலனங்கள் அரங்கேறுகின்றன வரலாற்றுப் பதிவுகளில் அச்சு முறிந்த சூட்சுமத்தில் பயணித்திருக்கிறது வெற்றியாளர்களின் சாகசங்கள் சுவடுகள் தேய்ந்து வர புதுப்பித்து வருகின்றன அறிவியல் தகடுகள் ......கா.ந.கல்யாணசுந்தரம்

......கா.ந.கல்யாணசுந்தரம்

தடைக்காலம்

 


வெள்ளி, ஏப்ரல் 15, 2022

எது கவிதையென்றும் இதுதான் கவிதையென்றும் நம்மால் கூற முடியுமா ?

 எது கவிதையென்றும் இதுதான் கவிதையென்றும் நம்மால் கூற முடியுமா ?

************************************************************************************************
எது கவிதையென விளக்கம் கொடுத்து பலர் தோற்றுப்போயிருக்கிறார்கள். கவிதைப்பற்றிய இலக்கணங்கள் அதனதன் வடிவத்தைப் பொறுத்தது. மரபு வழிக் கவிதைகளுக்குள் நான் செல்ல விரும்பவில்லை. அவையாவும் செய்யுள் வடிவங்கள். யாப்பு அணி இலக்கணங்களைக் கொண்டு பக்தி இலக்கியம் முதல் அழியாத சிறப்புத் தன்மையுடன் அவை இன்றும் மணம் வீசுகின்றன. உரைநடைக் கவிதைகள் தோன்றிய காலத்தில் புதுக்கவிதை வடிவம் உருவானது. இதற்கு வரலாற்றுப் பின்னணியாக எழுத்தாளர் வல்லிக்கண்ணன் அவர்களது புதுக்கவிதை தோற்றமும் வளர்ச்சியும் படித்தால் புரிந்து கொள்ளலாம்.
புதிதாகப் பிறக்கும் இலக்கியத்தை, ‘விருந்து’ எனப் பெயரிட்டு வரவேற்றார் தொல்காப்பியர்…
“ பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையினானே “ என்று உரைத்தார்
நன்னூலார்…
“சுவை புதிது பொருள்புதிது வளம்புதிது சொல்புதிது சோதிமிக்க நவகவிதை” என்றார் பாரதி.
Free Verse என்ற கவிதை அமைப்பும் ஆங்கிலத்தில் இருந்தது புதுக்கவிதையின் தோற்றம் வளர்ச்சி நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்டது.
பிறமொழி கவிதை இலக்கியத்திலிருந்து தமிழில் வடிவங்களை இறக்குமதி செய்வதில் தவறில்லை. ஜப்பானிய மொழியிலிருந்து ஹொக்கு…ஹைக்கூவையும் தெலுங்குமொழியின் நானிலு …தன்முனைக் கவிதைகள் போன்றவை தமிழ் மொழிக்கேற்ப உருவெடுத்து கவியுலகில் வலம் வருகின்றன. பெரும்பாலான கவிஞர்கள் விரும்பி எழுதுகிறார்கள்.
சமூகப் பார்வையோடும், வாழ்வியல் நோக்கோடும் எழுதப்படுகின்ற கவிதை வரிகள் எந்த வகைமையாயினும் உயிர்ப்புடன் விளங்கும். படிப்போரின் மனத்தில் எப்படி இடம்பிடிக்கிறது என்பதை ஆராய்ந்து அறிந்தோமானால் அக்கவிதைச் சொற்கள் விதைக்கின்ற சிந்தனைகள் மற்றும் கருத்தாழம் கொண்டவைகளாக இருத்தலே காரணமெனலாம்.
மரபாக இருக்கட்டும், புதுக்கவிதை மற்றும் நவீனக் கவிதைகளாகட்டும் பலரது படைப்புகளில் நீர்த்துப் போன தன்மையைக் காண்கிறோம். இலக்கணம் சரியாக அமைந்த மரபுக்கவிதைகள் பலவற்றில் சொல்ல வந்த கருத்தினை சரியாக சொல்லாமல் படிப்போருக்கு விளங்காமல் போனதுண்டு. இதே போலத்தான் நவீனக் கவிதைகள் பல பலமுறை படித்தபின்னே அதன் படிமக் கூறுகள் விளங்குவதுண்டு. ஹைக்கூ கவிதைகள் பெரும்பாலும் எளிமையான சொற்களோடு எழுத்தினாலொழிய அவை மக்கள் மனதில் இடம்பெறாது. கவிதைகளின் வடிவம் பல காலச்சூழலுக்கு ஏற்ப புதிய புதிய உத்திகளோடு உருக்கொண்டு கவிஞர்களின் கரங்களில் படைக்கப்படுகிறது.
கவிதை என்ற சொல்லுக்கு வேண்டுமானால் விளக்கங்கள் பலவிதமாக கொடுக்கலாம்…ஆனால் இதுதான் கவிதை எனச் சொல்லமுடியாத சூழல் எப்போதுமே கவியுலகில் நிலவி வருகிறது. புதுப் புது வடிவங்களில் அதன் பயணிப்பு தொடர்ந்துகொண்டுதான் இருக்கும்.
எவ்வகைக் கவிதையாயினும் அந்த வகைமையில் நாம் பயிற்சி பெறுகின்றபோது படிப்போரின் மனதில் இடம்பிடிக்கும் தன்மையதாய் இருக்கவேண்டும். ஆக….மரபு, புதுக்கவிதை, நவீனம், ஹைக்கூ, தன்முனை என எவ்வகைமையாயினும் அதனதன் சிறப்பிலிருந்து மாறுபடாது. இக்கவிதை வகைமையில் சிறந்து விளங்குவோர் தமிழ் கவிதை வரலாற்றில் இடம் பிடிப்பர்.
கவிதைகள் அவரவர் பெற்ற பிள்ளைகளைப் போன்றது. மற்றவர்களின் பார்வையில்தான் அந்தந்தக் கவிதைகளின் படைப்பாளிகள் போற்றப்படுவர்.
படிப்போரின் மனநிலையை கவிதைகள் எவ்விதத் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதைப் பொறுத்தது அதன் பயணிப்பும் பெருமையும்.
மரபுக் கவிதை :
++++++++++++
அன்று:
நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கு மாங்கே பொசியுமாம்-தொல்லுலகில்
நல்லா ரொருவர் உளரேல் அவர்பொருட்
டெல்லார்க்கும் பெய்யு மழை.
…….ஒளவையார்
இன்று:
புல்லின் நுனிவானம் புன்னகைப்பூ உள்நாணம்
சொல்லில் கருவேற்றிச் சொக்கவைக்கும்!--முல்லையென
ஒல்லும் வகையெல்லாம் ஊரை விலைபேசும்
வெல்லுதமிழ் வேரெங்கள் வேல்!
….கவிக்கோ துரை வசந்தராசன்
புதுக்கவிதை :
++++++++++++
அன்று :
பாதை முள்
படுக்கை முள்
இருக்கை முள்
வாழ்க்கை முள்
ஆன மனிதர்களைப் பார்த்துச்
சிலிர்த்துக் கொண்டது
முள்ளம்பன்றி...
ஓ.. இவர்களுக்குத் தெரியாதா
முள்ளும் ஓர்
ஆயுதம் என்று
–சிற்பி பாலசுப்பிரமணியம்
இலக்கணச் செங்கோல்
யாப்புச் சிம்மாசனம்
எதுகைப் பல்லக்கு
தனிமொழிச் சேனை
பண்டித பவனி
இவை எதுவுமில்லாத
கருத்துக்கள் தம்மைத் தாமே
ஆளக் கற்றுக்கொண்ட புதிய
மக்களாட்சி முறையே புதுக்கவிதை
– மு.மேத்தா.(புதுக்கவிதை இலக்கணம் குறித்து புதுக்கவிதை )
இன்று :
பறக்கிறோம் என்பது
பார்வையின் மயக்கம் !
சிறக்கிறோம் என்பதும்
சிந்தனைக் குழப்பம் !
இருக்கிறோம் என்பதே
இயற்கையின் கருணை
வருவதும் போவதும்
வாழ்க்கையின் உயிர்ப்பு !
–ஆரூர் தமிழ்நாடன்
நவீன கவிதை :
+++++++++++++
அன்று:
ரயில் வண்டியின் குலுங்குகிற
ராத்திரி விழிப்பில்
கண்ணாடி ஜன்னல் வலி
கலங்கி தெரிந்தது
நீரற்று ஆற்று மணல் மேல் நிலா.
-------------------------------------
மரணத்திலிருந்து
தாபித்த கண்கள்
மருத்துவமனைக் கட்டிலில்
உறங்க,
கணக்கும் மனதுடன்
நிசியில் வெளிவந்தது நின்ற பொழுது
வேப்பமர கிளைகளுக்கிடையில்
நிலா அசைந்தது.
---------------------------------------------------
தானாக இப்படி
தட்டுப்பட்டது தவிர
நிலா பார்க்க என்று போய்
நிலா பார்த்து நாளாயிற்று.
–கல்யாண்ஜி (வண்ணதாசன்)
இன்று:
ஆதி நதியொன்று
பாய்ந்துகொண்டே இருக்கிறது
அதன் கரையில்தான்
நாம் நிற்கிறோம்.
அதன் அலையில்தான்
நாம் நனைகிறோம்!
.
கூழங்கல்லாய் உருள்கிறது
தொன்மையின்
மாயப் பேரழகு.
.
நம் காலடியிலோ
காலத்தின் வண்டல்.
.
ஆதாம் ஏவாளின்
மரபணுக்கள்தான்
வாழ்வின் கட்டங்களுக்குள்
இப்போதும் நம்மை வைத்து
சதுரங்கம் ஆடுகின்றன.
.
ஆயிரமாயிரம்
ஆண்டுகளின் பின்னும்
நம் ஹார்மோன்கள்
யார் யாரிடமிருந்தோ சுரந்து
அவர்களின்
நடத்தைகளுடன் விளையாடும்.
.
அதுவரை இங்கே
வந்து போய்க்கொண்டிருக்கலாம்
நாம்.
--ஆரூர் தமிழ்நாடன்
புங்கமரத்து நிழல்
படுத்திருந்த நேரம்
வண்டியோடு கட்டப்பட்ட
காளைகள் ஓய்வெடுக்க
காகம் ஒன்று குதித்தபடி
காளையின் கொண்டை
மீதேரியும் இறங்கியபடியும் இருந்தது
பாரம் சுமந்த தளர்ச்சியில்
உறங்கமுடியாது தவித்த
காளையின் வாலும்
காதுகளும் காகத்தை
துரத்தும் முயற்சியில் இருந்தன...
கண்களில் இருந்து வழியும்
கண்ணீர்க் கோடுகள்
மட்டுமே அறியும் காளையின்
ரணம் சுமக்கும்
காயங்களின் வலி .
–கா.ந.கல்யாணசுந்தரம்
குறிப்பு: மேலே சொன்ன கவிதைகளையும் இது கவிதையல்ல என மறுப்போரும் உண்டு….இதுதான் உலகம்













ஞாயிறு, ஏப்ரல் 12, 2020

செவ்வந்தி மேலே ஒரு பனித்துளி - நூல் அணிந்துரை - கா.ந.கல்யாணசுந்தரம்

கவியுலகப் பூஞ்சோலை இலக்கியக் குழுமம் தமது ஆண்டுவிழாவில் வெளியிட்ட ஹைக்கூ கவிஞர்களின் தொகுப்பு நூலான " செவ்வந்தி மேலே ஒரு பனித்துளி " நூலுக்கான அணிந்துரை ...Image may contain: கவிச்சுடர் கா.ந. கல்யாணசுந்தரம், textImage may contain: textImage may contain: textImage may contain: textNo photo description available.Image may contain: text

திங்கள், ஏப்ரல் 06, 2020

வேளாண் அறிவியலின் மதிப்புறு முனைவர் நம்மாழ்வார்

அறிவியல் வேளாண்மையில் இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்தி வாழ்ந்த நம்மாழ்வார் அவர்களின் பிறந்தநாள் இன்று.
போற்றுவோம் அவரை.
......கா.ந.கல்யாணசுந்தரம்

  • மரபுவழி விதையுலகை
அடையாளப் படுத்தியவர்
உழவின் ஆசான் நம்மாழ்வார்

  • இயற்கை விவசாயம்
இவரது மூச்சு
நம்மாழ்வார்

  • பன்னாட்டு வேளான்மைப்
புரட்சிக்கு வித்திட்டவர்
நம்மாழ்வார்

  • இயற்கை உழவாண்மை
பேரிகையின் ஆசிரியர்
நம்மாழ்வார்

  • வேளாண் துறையில்
மரபணு சோதனையை எதிர்த்தவர்
நம்மாழ்வார்

  • வேளாண் அறிவியலின்
மதிப்புறு முனைவர்
நம்மாழ்வார்

  • தமிழின வாழ்வியல்
பல்கலைக்கழகமாய் நடமாடியவர்
நம்மாழ்வார்


......கா.ந.கல்யாணசுந்தரம்
Image may contain: one or more people, people standing, beard and outdoor

வியாழன், ஏப்ரல் 02, 2020

கவிக்கோ துரை வசந்தராசன் அவர்களின் விமர்சனம்...வெளிச்ச மொழியின் வாசிப்பு

÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
நூல் அறிமுகம்
நூல்: வெளிச்ச மொழியின் வாசிப்பு
ஆசிரியர் :கா.ந.கல்யாணசுந்தரம்
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
நாடறிந்த கவிஞர்.!
உலக தமிழ் ஹைக்கூ மன்றத்தின் தலைவர்!
தன்முனைக் கவிஞர்களின் தலைவர்!
கவிதையின் அனைத்து வடிவங்களிலும் பயணிப்பவர்!
கவிச்சுடர் கா.ந.கல்யாணசுந்தரம் அவர்கள்.
அவரது புதுக்கவிதைப் புதையலொன்றைச் சமீபத்தில்தான் எனக்களித்தார்.
புதையலைப் பிரித்துப்பார்க்கிற பெரும்வாய்ப்பு இன்றுதான் கிடைத்தது.
கிடைத்த புதையலைப் பங்குவைப்பதில் பெருமகிழ்ச்சியெனக்கு.
"வெளிச்சமொழியின் வாசிப்பு "
திறக்கும்போதே மகுடமணிந்து காட்சியளிக்கிறது.என் இனிய நண்பர்
ஆரூர் தமிழ்நாடன் அவர்கள் ஆசையோடு ஆராதித்திருக்கிற அணிந்துரையால்.
இந்நூல்
புதுக்கவிதையும் நவீனத்துவமும் கலந்த கலவை.
வாழ்வியலோடு நிறைந்த மனிதநேயம் நிரம்பிய கவிதைகளோடு கவிஞரே நம்மோடு பயணிக்கும் அனுபவத்தை உணரவைக்கிறார்.
கிராமியத்தின் விழுமியங்களை விரித்துவைக்கிறது.
சமூக அவலங்களுக்கான எதிர்ப்பினை பதிவுசெய்கிறது.
தத்துவ வெளிகளும் தலைகாட்டுகிறது.
முற்றிய இளமையின் முத்தமுற்றத்தை
சத்தியவாக்குகளால் சமைத்துவைத்திருக்கிறது.
*
இது வெற்றியின் முகம்.
இந்நூலில்....கவிஞர்...
தலைப்புகளைக் கவிதைக்குள் வைத்துத்
தேடாமலேயே தலைகாட்ட வைக்கிறார்.
*
கிராமத்துத் தடங்களை கவிப்படமாக்கியவர்
"இவையாவும் இருந்தனவென்று
சாட்சி சொல்ல
இன்றும் நிமிர்ந்து நிற்கிறது
என் கிராமத்துச் சுமைதாங்கிக் கல் "
என்று சுமைதாங்கிக்கல்லில் தன் கவிப்படக் கருவியை நிறுத்துகிறார்.
அவர் நிறுத்திய இடத்திலிருந்து நம்மை ஓடவைக்கிறார்.
"மரங்கொத்தியின்
பொந்துக்குள்
கிளைகளின் வாழ்க்கை " என்று
வாழ்வானுபவத்தை விரித்துவைக்கிறவர்
"இரவின் மடியில்
உலகின்
பகல்பொழுது "
என்பதில் நம்மைத் தேடவைக்கிறார்.
*
ஒரு நீர்த்தேக்கத்தைப் பார்த்தபடி படம்பிடித்துக்கொண்டே வந்தவர்
. "நீர்த்தேக்கத்தில் எனது
எண்ணப்பறவைகள் மட்டும்
கானல்நீரை அருந்திக்கொண்டிருந்தன"
என்று கவிதையை நிறைவுசெய்கிறார்.
நிறைவுறாத நீர்த்தேக்கத்தில் நம்மை நிறுத்தி வைக்கிறார்.
*
முதிர்கன்னிகளைப் பேசவந்தவர்,இளைய தலைமுறைக்கு வேண்டுகோள் வைக்கிறார்
முதிர்கன்னியாய் முகமழியும் மகளிருக்காக
'நடக்கமுடியாத நதிகள்
பூகோள நிலப்பரப்பில் வேண்டா!
புதியதோர் உலகு செய்வோம் "
என்று புதிய நெம்புகோல்களுக்குப் புத்தாக்கம் தருகிறார்.
*
ஒரு கவிதையில்
"தன்னைத் தேர்ச்சக்கரத்தில்
ஏற்றும்படி காத்திருக்கிறான்
மனுநீதிச் சோழன்
நீதிமன்றத்தில் '
என்று
கழுவில் ஏற்றப்படும் நியாயங்களைக்
காண வைக்கிறார்.
*
" அடையாளத்தைத் தொலைத்த
வீட்டருகில்
ஓர் அஞ்சல்பெட்டி
முகவரியைக்
கொடுத்துக்கொண்டிருக்கிறது"
இந்தக் முகவரி நம்மை நெடுநேரம் நிற்கவைத்துவிடுகிறது.
*
இப்படி நூறு கவிதைகள்.
நூறு கவிதைகளிலும் நூற்றுக்கணக்கான கவிதைகள்.
*
சுருங்கக் கூறின்
அணிந்துரையில் தமிழ்நாடன் குறிப்பிட்டிருப்பதுபோல்
கவிச்சுடர் தன் திசைகளை அகலப்படுத்தியிருக்கிறது.
"அண்மைக்காலத்தில் வந்த தொகுப்புகளில் ,செறிந்த கவிதைத் தொகுப்பு என என்னால் எந்தச்சபையிலும் பரிந்துரைக்க முடியும்"
என்று ஆரூர் தமிழ்நாடன் முன்மொழிந்திருப்பதை நான் வழிமொழிகிறேன்.
அனைத்துக் கவிதைகளையும் சொல்ல ஆசைதான்.
அந்த ஆசையை நீங்கள் நூல்வாங்கி நிறைவுசெய்துகொள்ளுங்களேன்.
*
இந்நூலை
கவிஓவியா பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.
மயிலாடுதுறை இளையபாரதியின் நேர்த்தியான வடிவமைப்பு எப்போதும்போல் இப்போதும் சிறப்பு !
வெல்க !
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
கவிஓவியா வெளியீடு
68/21,திருவள்ளுவர் தெரு
அன்பழகன் நகர்,செம்பியம்,சென்னை --11
எண் :9840912010
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷

No photo description available.

Image may contain: கவிச்சுடர் கா.ந. கல்யாணசுந்தரம், beard

144...

144....
+++++++++++++++++++++++
* உதிர்ந்த சருகு
மிதிபடவில்லை சாலையில்
ஊரடங்கு உத்தரவு
* வாலாட்டியபடி
தெருவில் நாய்
உணவிடுவோர் காணவில்லை
* தார்ச்சாலைகள் முழுக்க
கானல் நீர் பாய்கிறது
தண்ணீர் தேடும் ஏழை
* சாலையோரம் ஓய்வில்
பாரம் சுமந்த வண்டிகள்
சோகம் சுமக்கும் தொழிலாளி
* யாரும் வரவில்லை
பட்டினியோடு ஜோதிடன்
விடுதலையில் கிளிகள்
* பீதியில் வெளுத்த முகம்
பசித்த வயிறு
சலவைத் தொழிலாளி
............கா.ந.கல்யாணசுந்தரம்

Image may contain: outdoor

வெள்ளைக் குதிரை கிடைக்கவில்லை ?

காலத்தின் வயதில் யுகங்கள்
எல்லைகளைக் கொண்டுள்ளது...
கலியுகமே...நீ
வயதின் களங்கமா?
உன்னோடு சாத்தான்கள்
உலா வருகின்றனவே !
கலியுகத்தின் தொடக்கத்தில்
அந்த மாயக்கண்ணன்
அவதரித்தானா ?
எங்களின் முதல் கணிதவியல்
மேதாவி ஆர்யபட்டா
கலியுகத்தின் தொடக்கத்தில்
கோள்கள் இடம்பெயர்ந்த
அதிசயத்தைக் கூறினார் !
இது மொஹஞ்சதாரா கல்வெட்டின்
சாட்சியம் எனக் கூறுகிறார்கள்..!
கலியுகத்தில் அதர்மம் தழைக்க
விவேகமழிந்தோர் அறிவியலை
அழிவுக்கே பயன்படுத்துகிறார்கள் !
ஆதிக்க சக்திகள்
தனிமனிதனை ஒரு கிராமத்தை
நகரத்தை….ஏன் ஒரு நாட்டையே
துண்டாட வைக்கிறது!
மருத்துவமில்லா நோய்களைப் பரப்பி
மனிதத்தை வீழ்த்துகிறது !
மலையிலிருந்து உருளும்
பாறைபோல் மக்கள்
நற்குணமிழந்து நலமிழக்கிறார்கள் !
இறைவா..உனக்கு இன்னுமா
வெள்ளைக் குதிரை கிடைக்கவில்லை ?
கொரோனா உயிர்க்கொல்லி
உலகையே அழிக்கிறதே….
கலியுகத்தின் கணக்கு முடியவில்லையா?
மௌனம் களைந்து மீட்டெடு...
அபயக் குரல்கள்
வானைப் பிளப்பதற்குள் வந்துவிடு !
………..கா. ந. கல்யாணசுந்தரம்

Image may contain: 1 person

செவ்வாய், டிசம்பர் 24, 2019

ஒற்றை எறும்பாய் அந்த ஈரத்தரையில்

மௌனித்த இரவுத் திண்ணையில் 
யாரோ வாசிக்கிறான் புல்லாங்குழல்... 
கடலின் மொத்த அலைகளையும் 
வாரிச் சுருட்டி தனது விரல்நுனிகளில் 
வடியவைக்கிறான் இசையின் அலைகளை !
உனக்கும் எனக்குமான இடைவெளிகளை 
இட்டு நிரப்புகிறது இந்த இரவு நேரம் ...
அடர் பனிப்பொழிவில் உனது 
உருவம் மெல்லிய நீரோவியமாய்த் தெரிகிறது !
வியாபிக்கும் மௌனப் பெருவெளியில் 
இருவர் மட்டுமே அமர்ந்திருப்பது 
அந்த இசைக்கலைஞனுக்கு எப்படித் தெரியும் ?
எப்படியோ விடியலுக்குள் தெருக்களின் 
நீளம் குறையுமென்பது தெரிகிறது ...
தள்ளிப்போக எனக்கு விருப்பமில்லை ....
சாணம் மெழுகிய தெருவாசலில் 
அரிசிமாவுக் கோலத்தை ருசிக்கக் காத்திருக்கும் 
ஒற்றை எறும்பாய் அந்த ஈரத்தரையில் 
நான் மெல்ல ஊர்ந்துகொண்டிருப்பேன் 
உனது காலடித்தடம் ஸ்பரிசிக்கும் வரை !

...........கா.ந.கல்யாணசுந்தரம்

திங்கள், அக்டோபர் 28, 2019

சுஜித் கற்றுத்தரும் பாடங்கள்....


சுஜித் கற்றுத்தரும் பாடங்கள்....

1. பெற்றோர்கள் தமது குழந்தைகள் வளர்ப்பில் மிகக் கவனமாக இருக்கவேண்டும். அலட்சியப்போக்கு உயிருக்கே ஆபத்து என்பதை உணர்த்துகிறது.

2. குறிப்பாக பல்வேறு விபத்துகள், இயற்கை சீற்றங்கள் மேலும் பல்வேறு குற்றச்செயல்களை தடுக்க / எதிர்கொள்ள நம்மிடம் விழிப்புணர்வு இல்லை. மேலும் வருமுன் காத்தல் என்ற புரிதல் இல்லாமை.

3. அரசு திட்டமிடலில் தேவையற்ற திட்டங்களுக்கு பெரும் நிதி ஒதுக்கப்பட்டு வீணடிக்கப்படுகிறது. மனித உயிர் காத்தலுக்கு திட்டமிடலும் நிதி ஒதுக்கீடும் மிக மிக குறைவு.

4. துறைசார்ந்த பணியாளர்கள் தங்களது பணிகளை நேரத்தோடு செயல்படாததால் விதிமீறல்கள் எளிதாக தலைதூக்கி அவலங்கள் நடைபெறுகிறது

மக்கள் கண்மூடித்தனமாக அரசு அதிகாரிகளை இழிவு படுத்துவது தவறு. குழந்தை சுர்ஜித்தை மீட்க அமைச்சர்கள் அரசு அதிகாரிகள் எடுத்துவரும் முயற்சிகள் எதிர்பார்த்தலுக்கு மேலாகத்தான் இருக்கிறது.

உள்ளதை உள்ளபடி நேரடி ஒளிபரப்பு செய்யும் ஊடகங்களையும் குறை சொல்வதை தவிர்த்துப் பாராட்டுங்கள். மக்களுக்கு இதனால் அதிக அளவு விழிப்புணர்வு ஏற்படுகின்றது.

விமர்சனக் கோணங்கள் பல்வேறு வகைதான் இருக்கும். எனினும் இயற்கை சார்ந்த சவால்களை எதிர்கொள்வது என்பது சாதாரணமல்ல.

இடத்தின் சூழல் குழந்தையை மீட்டெடுக்க தாமதம் ஆகிறது என்பது கண்கூடு. கடினப் பாறை அதிநவீன எந்திரத்தாலும் தகர்ப்பது கடினமாக இருப்பது அரசு எதிர்கொள்ளும் சவால்.

இம்மாதிரி நேரங்களில் வீணான விமர்சனங்களை தவிருங்கள். எவரையும் திணறடிக்கும் / மகிழவைக்கும் திறன் இயற்கை சார்ந்த சூழலுக்கு உண்டு என்பதை மறுக்க முடியாது.

முயற்சி வெற்றியடையட்டும்.

........கா.ந.கல்யாணசுந்தரம் 

வியாழன், அக்டோபர் 17, 2019

வாழிய எம்மான் நீ...இவ்வையகத்தே !

ஆண்டுகள் பலவானாலும்
கண்ணதாசனே உன்னை மறப்பார்
இம்மண்ணில் யாருளர் ?
மாண்ட என் அன்னை மீண்டும் வரின்
ஒரு வரம் கேட்பேன் ....
தாய்ப்பாலோடு கண்ணதாசன்
வரிகளை எனக்குப் பிசைந்து
ஊட்டவேண்டுமென்று !
உனது நினைவு நாளில் எனது
எண்ணம் முழுதுமுன் வண்ண வரிகள் !
சற்று நினைவுகூருகிறேன்......
வாழிய எம்மான் நீ...இவ்வையகத்தே !

..............கா.ந.கல்யாணசுந்தரம்

" பூ மணம் கொணடவள் பால் மணம் கண்டாள்
பொங்கிடும் தாய்மையில் சேயுடன் நின்றாள்
மாமனைப் பாரடி கண்மணி என்றாள்
மருமகள் கண்கள் தன்னில் மாமன் தெய்வம் கண்டான் (மலர்களைப்போல் )"

" தாயின் பெருமை மறக்கின்றான்
தன்னலச் சேற்றில் விழுகின்றான்
பேய் போல் பணத்தைக் காக்கின்றான்
பெரியவர் தம்மைப் பகைக்கின்றான்
(ஒருவன் மனது ஒன்பதடா)"

" பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்
பாயும் மீன்களில் படகினைக் கண்டான்
எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்
எதனைக் கண்டான் பணம்தனைப் படைத்தான்
(மனிதன் மாறிவிட்டான்)"

" ஏழை மனதை மாளிகையாக்கி
இரவும் பகலும் காவியம் பாடி
நாளைப் பொழுதை இறைவனுக் களித்து
நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு!
உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு! (மயக்கமா )"

" தென்னை மரத் தோப்பாகத் தேவாரப் பாட்டாகப்
புன்னை மரம் பூச்சொரிய சின்னவளே நீ ஆடு!
கண்டாங்கி முன்னாட கன்னி மனம் பின்னாட
கண்டு கண்டு நானாட செண்டாக நீ ஆடு! (கட்டோடு)"

" கம்பன் கண்ட சீதை உந்தன் தாயல்லவா!
காளிதாசன் சகுந்தலை உன் சேயல்லவா!
அம்பிகாபதி அணைத்த அமராவதி-மங்கை அமராவதி
சென்ற பின்பு பாவலர்க்கு நீயே கதி! - என்றும் நீயே கதி! (கல்லெல்லாம் )"

" பறந்து செல்ல நினைத்து விட்டேன் எனக்கும் சிறகில்லையே
பழக வந்தேன் தழுவ வந்தேன் பறவை துணையில்லையே
எடுத்துச் சொல்ல மனமிருந்தும் வார்த்தை வரவில்லையே
என்னென்னவோ நினைவிருந்தும் நாணம் விடவில்லையே! (சிட்டு)"

" மானிட இனத்தை ஆட்டி வைப்பேன் – அவர்
மாண்டு விட்டால் அதைப் பாடி வைப்பேன் – நான்
நிரந்தரமானவன் அழிவதில்லை – எந்த
நிலையிலும் எனக்கு மரணமில்லை(ஒரு கோப்பையிலே ) "

........கண்ணதாசன்

tag

வானம் தொடும் வண்ணத்துப் பூச்சிகள்

வெள்ளி, அக்டோபர் 05, 2018

உளவியலின் உன்னதம் ....

உளவியலின் உன்னதம் ....
*******************************************
# உயர்வின் படிகள்
உன்னருகே இருக்கிறது 
மன்னிக்கும் தன்மை
# நமக்குள் ஒளிவெள்ளம்
பெருக்கெடுத்து ஓடுகிறது
தனித்தன்மை கண்டறிதல்
# திட்டமிடலில் எப்போதுமே
கரைந்து போகிறது
மனஅழுத்தம்
# சிந்திக்காமல் நாம்
உடைத்தெறிவோம்
நிகழ்காலத் தடைக்கற்கள்
# இலக்கினை அடையும்
போராட்டத்தில் வெற்றிகள்
சாதனையாளன் அணுகுமுறை
# மனஉளைச்சலின்
இமாலயத் தோற்றத்தில்
தூக்கமின்மை
# உறங்குதலும் உடற்பயிற்சியும்
துணைநிற்கின்றன
தியானத்தின் எல்லைகளில்
# எப்போதும் தேவையில்லை
கழற்றி எறியுங்கள்
தாழ்வு மனப்பான்மை
# மன அழுத்தத்தின்
முதன்மைக் காரணிகள்
எதிர்மறை எண்ணங்கள்
# இயற்கையோடு இயைந்த
வாழ்வோடு பூத்திருக்கிறது
வளமான வாழ்வு
# கொண்டுவந்தது ஏதுமில்லை
எடுத்துச் செல்வதும் ஒன்றுமில்லை
மனிதம் வாழ வாழ்வோம்
..............கா.ந.கல்யாணசுந்தரம்

செவ்வாய், செப்டம்பர் 25, 2018

வியப்பில் ஆழ்த்தும் நியூயார்க் நகரில்.....

08.09.2018 அன்று நியூயார்க் நகரம் சென்று வந்தோம். நூறு ஆண்டுகளைக் கடந்த வானம் தொடும் கட்டிடங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. உலக வர்த்தக மையத்தின் இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்கு பின் எத்தனையோ வர்த்தக மைய்யக் கட்டடங்களைக் கட்டி நம்மை பிரம்மிக்கச் செய்திருக்கிறது இந்த முதலாளித்துவ வல்லரசு நாடு.
மேலும் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது அமெரிக்கா சுதந்திர தேவி சிலை (Statue of Liberty ) . 1886 ஆம் ஆண்டு அமெரிக்கா தனது நாட்டுக்கு அர்ப்பணித்த இந்த சிலை 305 அடி உயரமுள்ளது. பிரான்சு நகரில் வடிவமைக்கப்பட்ட சிலை.
வியப்பில் ஆழ்த்தும் நியூயார்க் நகரில் மற்றுமொரு இடம் time square எனச் சொல்லப்படும் வர்த்தக சாலை.இங்கே இரவில் கண்கொள்ளாக் காட்சியாக LED விளம்பர ஒளிரும் பலகைகள் கட்டிடங்களின் வனப்பை மெருகூட்டுகின்றன.இங்கே ஜனவரி ஒன்று ஆண்டுப்பிறப்பு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
என்னதான் என்னை வியப்பில் ஆழ்த்தினாலும் நமது நாட்டின் பச்சைப் பசேல் என்ற வயல்வெளிகளைக் காணும் போது ஏற்படும் ஆனந்தம் மட்டுமே எனக்கு அலாதியானது.
...........கா.ந.கல்யாணசுந்தரம்
Image may contain: Dharmambal Rathinam, smiling, standing and outdoor
Image may contain: one or more people and outdoorImage may contain: 2 people, including கவிச்சுடர் கா.ந. கல்யாணசுந்தரம், people standing, sky and outdoor

வியாழன், ஆகஸ்ட் 23, 2018

கவிஞர்...புலவர்....படைப்பாளி....

கவிஞர்...புலவர்....படைப்பாளி....
*******************************************
கவிஞர்,புலவர் மற்றும் படைப்பாளி இந்த மூன்றினுக்கும் உள்ள வேறுபாடுகள் நாம் அறிய வேண்டும்.
அண்மையில் நான் பதிவுசெய்த தமிழ் இலக்கிய பணியில் இன்றைய முகநூல் குழுமங்கள் என்ற பதிவால் இதனை இங்கே கருத்திட விரும்புகிறேன்.
கவிஞர் :
இந்தப் பட்டப்பெயர் மற்றவர்கள் சூட்டினாலும் தமக்குத் தாமே சூட்டிக்கொண்டாலும் தவறில்லை.
பல கவிதைகள் எழுதி உங்களின் உச்சாணியில் இருப்பவரும், ஒரே ஒரு கவிதை எழுதி பல்லோராலும் பாராட்டு பெற்றவரும் கவிஞர் தான். மறுப்பதற்கு இல்லை. பிறவியிலேயே கவித்துவம் பெற்ற அருளாளர்கள் இருக்கிறார்கள். படிப்பறிவு ஏதுமின்றி பட்டறிவால் கவிஞர் ஆனவர்கள் ஏராளம். உதாரணமாக கவிஞர் பட்டுக்கோட்டையார், கவிஞர் கண்ணதாசன் போன்றோர்கள்.
ஆக கவிஞர் எனும் பட்டம் தமிழின் வளமையை அதன் தனித்தன்மையை செம்மையாய் மரபு, புதுக்கவிதை மற்றும் குறுங்கவிதைகள் , ஹைக்கூ , நாட்டுப்புறப் பாடல்கள் வழி எழுதுபவர்கள் பெற்றுள்ள நடைமுறை அடைமொழி. இதற்கு ஒரு பதிவு பெற்ற சங்கமோ, அமைப்போ கொடுப்பது இல்லை. மக்களாலும் தனக்குத் தானே சூட்டிக் கொள்ளும் ஒரு பட்டம் என்றே அறியலாம்.
புலவர்:
புலமைத் தகுதி சிலருக்கு மட்டுமே வாய்க்கும்.ஒரு மொழியில் புலமை பெற்று சிறப்புறுதல் வேண்டும். இதற்கு இலக்கணம்,மொழியின் தொன்மை குறித்து படித்தறிதல் அவசியம். தமிழக கல்லூரிகள் புலவர் பட்டங்களை தேர்வுகள் மூலம் அளிக்கின்றன.பாடத் திட்டங்களும் பல்வேறு நிலைகளில் உள்ளன. மொழியில் சிறந்த புலமை பெற்று மரபுப் பாடல்களை இலக்கணத்துடன் இயற்றி வாழ்ந்தவர்கள் சங்க காலத்தில் அதிகம். புலவர் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே இதனை போட்டுக்கொள்ளலாம் என்பது எனது கருத்து.
படைப்பாளி:
இங்கு தான் பலருக்கும் சந்தேகம் வரும். படைப்பாளி என்பவன் தனது தனித்த திறனில் இயல் இசை நாடகம் எனும் முத்தமிழில் சிறந்த படைப்புகளை இந்த தமிழ்ச் சமூகத்துக்கு கொடுப்பவன். படைப்பு என்பது பல்வேறு அம்சங்களை பொறுத்தது. எழுத்து வடிவம் கொண்டவை அனைத்தும் படைப்பாகாது. படிப்போருக்கு நல்ல படிப்பினைத் தருவதாகவும் இருக்கவேண்டும்.துறைதோறும் நல்ல படைப்பாளிகளின் படைப்புகள் காலம் கடந்து நிற்கின்றன. சிறந்த படைப்பாளிகளுக்கு விருதுகள் தானாகவே வந்து சேரும் என்பது உறுதி.
முகநூல் வழி கவிஞர்கள் சிறந்த படைப்பாளிகளாக உருவாகவேண்டும் என்பது எனது விருப்பம்.
எனக்குத் தோன்றிய கருத்துகளை இங்கே பதிந்து வருகிறேன். மேலும் சிறந்த கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.
அன்பன்,
கா.ந.கல்யாணசுந்தரம்